பாலில் கலப்படம் செய்வோர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? தனியார் நிறுவனங்கள் கேள்வி

படத்தின் காப்புரிமை Getty Images

தமிழகத்தில் விற்கப்படும் நெஸ்லே நிறுவனத்தின் பால் பவுடரில் கலப்படம் இருப்பதாக நேற்று மாநில பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றம்சாட்டிய நிலையில், நெஸ்லே நிறுவனம் அதனைக் கடுமையாக மறுத்துள்ளது.

சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அமிலத் தன்மை மிகுந்த பாலில் அதனைக் குறைப்பதற்காக காஸ்டிக் சோடாவைக் கலந்துவிட்டு, பிறகு அதனை பால் பவுடராக மாற்றி இந்த நிறுவனங்கள் விற்பனை செய்துவருவதாக குற்றம்சாட்டினார்.

இந்த பால் நிறுவனங்களின் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுத்தால், அவை தப்பித்துவிடும் என்பதால் மக்களிடம் நேரடியாக இதனைத் தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.

படத்தின் காப்புரிமை Getty Images

சில நாட்களுக்கு முன்பாகவே மாதவரத்தில் உள்ள அரசுக்குச் சொந்தமான பால் பண்ணையில் உள்ள ஆய்வகத்தில் சோதனை செய்தபோதும் இதேபோன்ற முடிவுகள் கிடைத்ததாலும் ஆனால், அந்த ஆய்வகம் தமிழக அரசுக்குச் சொந்தமானது என்பதால் அந்த முடிவுகளை தனியார் நிறுவனங்கள் ஏற்காது என்பதால் மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற ஆய்வகத்தில் சோதனை செய்து இந்த முடிவுகளைப் பெற்றிருப்பதாகவும் அவர் கூறினார்.

இந்த நிறுவனங்களின் மீது நடவடிக்கை என்பது முதலமைச்சரிடம் பேசிய பின்புதான் எடுக்கப்படும் என்றார் ராஜேந்திர பாலாஜி. இந்தப் பொருட்கள் விற்பனைக்கு தடை விதிக்க முடியாது என்றும் மக்கள்தான் இந்தப் பொருட்களை வாங்காமல் தவிர்க்க வேண்டும் என்றார் அவர்.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றம் சாட்டியிருக்கும் நெஸ்லே நிறுவனத்தைத் தொடர்புகொண்டபோது, அந்த நிறுவனம் இந்தக் குற்றச்சாட்டைக் கடுமையாக மறுத்தது.

படத்தின் காப்புரிமை FACEBOOK

இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய நெஸ்லே இந்தியா நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர், தங்கள் நிறுவனத்தின் பால் பொருட்களில் காஸ்டிக் சோடாவும் பிளீச்சிங் பவுடரும் இருப்பதாகச் சொல்வது உண்மைக்கு மாறானது என்று தெரிவித்தார்.

மேலும் சந்தைக்கு அனுப்பி வைக்கப்படும் பால் தயாரிப்புகளும், அதற்கான மூலப் பொருட்களும் ஒவ்வொரு கட்டத்திலும் பரிசோதிக்கப்படுவதாகவும் அவை எல்லாவிதத்திலும் தகுதியாக இருக்கும் பட்சத்திலேயே அவை விற்பனைக்கு அனுப்பப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

தங்களுடைய பால் பொருட்களில் கலப்படம் இருப்பதாகக் கூறப்படுவது குறித்து விசாரித்து வருவதாகவும் அரசு அதிகாரிகளிடமிருந்து தங்களுக்கு இது தொடர்பாக எந்த தகவலும் வரவில்லையென்றும் அவர் கூறினார்.

படத்தின் காப்புரிமை Getty Images

"பாலில் உண்மையிலேயே கலப்படம் இருந்தால், அமைச்சர் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டியதுதானே" என்று கேள்வியெழுப்புகிறார் தமிழ்நாடு பால் முகவர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் தலைவரான பொன்னுசாமி.

"கடந்த மே மாதம் இதே போன்ற குற்றச்சாட்டை சுமத்திய அமைச்சர், பாலில் ஹைட்ரஜன் ஃபெராக்ஸையும் பார்மால்டிஹைடும் இருப்பதாக கூறினார். ஆனால், இப்போது காஸ்டிக் சோடா இருப்பதாக கூறுகிறார். அப்படிப்பட்ட பால் பொருட்களைத் தடைசெய்து, தயாரிப்பவர்கள், விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன்?" என்கிறார் அவர்.

இதற்கிடையில் புதன் கிழமை காலையிலும் இதே குற்றச்சாட்டை மீண்டும் சுமத்தினார் பால் வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.

பாலில் பெரிய அளவில் காஸ்டிக் சோடாவைக் கலந்து விற்பது என்பது சாத்தியமேயில்லை என்கிறார் கவின் கேர் பால் நிறுவனத்தின் விற்பனை பிரிவின் தலைவரான தேவன்.

"காஸ்டிக் சோடா, பால் செல்லும் குழாய்களைச் சுத்தம் செய்ய பயன்படுத்தப்படுகிறது. அதை வைத்து மட்டும்தான் அந்தக் குழாயை சுத்தம் செய்ய முடியும். எனக்குத் தெரிந்து யாரும் வேண்டுமென்றே காஸ்டிக் சோடாவை பாலில் கலக்க மாட்டார்கள். இதைப் போல பெரிய நிறுவனங்கள் இவ்வாறு செய்திருக்க வாய்ப்பே இல்லை" என்கிறா் தேவன்.

படத்தின் காப்புரிமை Getty Images

நீண்ட தூரத்திலிருந்து பாலை கொள்முதல் செய்துவரும்போது, அவை கெட்டுவிடக்கூடாது என்பதற்காக பார்மலின், பென்சாயிக் அமிலம், சாலிசிலிக் அமிலம் ஆகிவற்றை பால் நிறுவனங்கள் சேர்க்கக்கூடும். ஆனால், அவற்றின் அளவு மிக மிகக் குறைவு என்கிறார் கால்நடை மருத்துவரான ஆர்.ஆர். தயாநிதி.

"இவையில்லாம் கலப்படமா என்று கேட்டால் கலப்படம்தான். பாலில் தண்ணீர் கலந்தாலே கலப்படம்தான். ஆனால், மேலே சொன்னது போன்ற 'ப்ரிசெர்வேட்வ்கள்' மிக மிகக் குறைந்த அளவில் இருக்கும்போது பிரச்சனை இல்லை" என்கிறார் தயாநிதி.

தற்போது அமைச்சராக இருக்கும் ராஜேந்திர பாலாஜி கலப்பட தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்காமல் தொடர்ந்து பத்திரிகையாளர் சந்திப்புகளில் இது போன்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பது குறித்த கேள்வி எல்லாத் தரப்பினரிடமும் இருக்கிறது.

செய்தியாளர் சந்திப்புகளில் நடவடிக்கை குறித்து கேள்வியெழுப்பப்பட்டால், முதல்வரிடம் பேசப் போவதாகவும் பிரதமருக்கு கடிதம் எழுதப்போவதாகவும் கூறும் ராஜேந்திர பாலாஜி, தமிழக அரசு எடுக்கவிருக்கும் நடவடிக்கை குறித்து எதையும் பேச மறுத்துவருகிறார்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்