`மாட்டுக்கு பாதுகாப்பு, மகளிர் மீது பாலியல் தாக்குதலா?' வைரலாகும் முகமூடி பிரசாரம்!

இந்தியாவில், மாடுகளைக் காட்டிலும் பெண்களுக்கு முக்கியத்துவம் குறைந்துவிட்டதா என்ற கேள்வியை எழுப்பும் புகைப்பட விழிப்புணர்வு பிரசாரம் வைரலாகி வருகிறது.

படத்தின் காப்புரிமை SUJATRO GHOSH

23 வயது புகைப்படக் கலைஞரின் அந்த பிரசாரம் தேசியவாதிகளின் கோபத்திற்கும் ஆளாகியுள்ளது.

எனது நாட்டில் மாடுகளுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம்கூட பெண்களுக்கு அளிக்கப்படவில்லை என்பது எனக்கு அமைதியின்மையை ஏற்படுத்துகிறது, இந்துக்களால் புனிதமாக கருதப்படும் பசு மாட்டை காட்டிலும் பாலியல் வல்லுறவு அல்லது துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண்களுக்கான நீதி தாமதமாகவே கிடைக்கிறது என பிபிசியிடம் கூறுகிறார் டெல்லியில் வசிக்கும் புகைப்படக் கலைஞரான சுஜட்ரோ கோஷ்

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த செய்தியை நம் நாட்டில் அதிகமாக பார்க்கலாம், மேலும் அரசின் புள்ளி விவரத்தின்படி இந்தியாவில் ஒவ்வொரு 15 நிமிடத்திற்கும் ஒரு பெண் பாலியல் வல்லுறவிற்கு ஆளாகிறார்.

"இம்மாதிரியான வழக்கில் குற்றம் புரிந்தவர்களை தண்டிக்க பல நாட்களாக நீதிமன்றத்தில் அந்த வழக்கு நிலுவையில் இருக்கும், ஆனால் ஒரு பசு வதை செய்யப்பட்டால், அதைச் செய்தவர்கள் என்று சந்தேகிக்கப்பட்டால் அவர்கள் இந்துத்துவா குழுக்களால் உடனே கொல்லப்படுகிறார்கள் அல்லது துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள்." என்கிறார் கோஷ்.

படத்தின் காப்புரிமை SUJATRO GHOSH
Image caption இந்தியா கேட்டிற்கு முன் எடுக்கப்பட்ட முதல் புகைப்படம்

2014ஆம் ஆண்டு நரேந்திர மோதி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு அதிகரித்துள்ள பசு கண்காணிப்பு குழுக்களுக்கு எதிரான தனது வழியிலான போராட்டம் இது என்று கூறுகிறார் கோஷ்.

தாத்ரியில் முஸ்லிம் நபர் ஒருவர் மாட்டிறைச்சி வைத்திருப்பதாக சந்தேகித்து இந்துக் குழுக்களால் கொல்லப்பட்ட சம்பவமும் அதே போன்ற பிற சம்பவங்களும் தன்னை கவலையடைச் செய்தது என்றும் கூறுகிறார்.

இந்தியாவில் சமீப காலமாக, சாதுவான விலங்காக கருதப்படும் பசுக்கள் முக்கியமாக கருதப்பட்டு வருகிறது.

பசுக்கள் புனிதமான ஒரு விலங்கு என்றும் அதனால் அது பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் பாஜக வலியுறுத்துகிறது.

மேலும் பசுக்கள் மாட்டிறைச்சிக்காக கொல்லப்படுவது பல மாநிலங்களில் தடை செய்யப்பட்டுள்ளது; மேலும் இதை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனைகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை SUJATRO GHOSH

பசு கண்காணிப்பு குழுக்களால் முஸ்லிம், கிறித்துவர்கள் மற்றும் தலித் மக்கள் வன்முறையை சந்திக்கின்றனர்.

இரண்டு வருட காலமாக, பசுக்களின் பெயரில் சுமார் டஜன் கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

அதுவும் பல ஆதாரமற்ற வதந்திகளால் அவர்கள் தாக்கப்படுகின்றனர். மேலும் முஸ்லிம் மக்கள் பசுக்களை பாலுக்காக கொண்டு செல்லும்போதும் தாக்கப்படுகின்றனர்.

கொல்கத்தாவை பூர்வீகமாக கொண்ட கோஷ், சில வருடங்களுக்கு முன் டெல்லி வந்த பிறகே, இந்த ஆபத்தான மதம் மற்றும் அரசியல் கலவை குறித்து தெரிந்து கொண்டேன் என்கிறார்.

மேலும் இந்த புகைப்படங்கள் அதற்கு எதிரான மெளனப் போராட்டம் என்றும் இதனால் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்றும் தெரிவிக்கிறார்.

எனவே இந்த மாதத்தின் தொடக்கத்தில் நியூயார்க்கிற்குச் சென்ற அவர் பசு முகமூடியை வாங்கி வந்து, புகழ்பெற்ற சுற்றுலா இடங்களில் பெண்களை புகைப்படம் எடுத்து எடுத்து இந்த பிரசாரத்தை தொடங்கியுள்ளார். அரசியல் கட்டடங்கள், தெருக்கள், பெண்களின் வீடுகள், படகு, ரயில் என அனைத்து இடத்திலும் புகைப்படம் எடுத்துள்ளார்.

ஏனென்றால் "பெண்கள் எங்கும் பாதுகாப்பாக இருப்பதில்லை" என்று கூறுகிறார் கோஷ்.

படத்தின் காப்புரிமை Image copyrightSUJATRO GHOSH

"அனைத்து தரப்பு சமுதாயத்திலிருந்தும் பெண்களை நான் புகைப்படம் எடுத்தேன் . புகைப்படம் எடுப்பதை நான் டெல்லியிலிருந்து தொடங்கினேன். ஏனென்றால் அரசியல், மதம், என அனைத்திற்கும் அது தலைநகராக உள்ளது. மேலும் பிற விவாதங்களும் டெல்லியிலிருந்துதான் தொடங்குகிறது." என்கிறார் கோஷ்.

முதல் புகைப்படத்தை இந்தியாவில் அதிகம் பேர் வரக்கூடிய புகழ்பெற்ற இந்தியா கேட்டில் எடுத்தேன். அடுத்த புகைப்படம் ஜனாதிபதி மாளிகை முன்பும், அடுத்தது கொல்கத்தாவில் ஹெளரா பாலத்தை பின்புலமாகக் கொண்டும், ஹுக்ளி நதியில் எடுத்தேன் என்கிறார் கோஷ்.

இது உணர்ச்சிகரமான ஒரு விஷயம் என்பதால் இந்த புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கும் மாடல்கள் நண்பர்களாகவும், தெரிந்தவர்களாகவும் இருக்கிறார்கள். இதுகுறித்து தெரியாதவர்களிடம் கேட்பது கடினம் என்கிறார் கோஷ்.

இரண்டு வாரங்களுக்கு முன் இந்த பிரசாரத்தை இண்ஸ்டாகிராமில் தொடங்கியவுடன் நேர்மறையான கருத்துகளை பெற்றுள்ளார் கோஷ். ஒரு வாரத்திற்குள்ளாக எனது நலம் விரும்பிகள் மற்றும் முன்பின் தெரியாதவர்கள் கூட பாராட்டினார்கள் என்று கூறுகிறார் கோஷ்.

படத்தின் காப்புரிமை SUJATRO GHOSH
Image caption ஜனாதிபதி மாளிகை முன்பு

ஆனால் இந்திய ஊடகங்கள் இதனை தங்கள் முகநூல் மற்றும் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டவுடன் பல எதிர்மறையான கருத்துகளை பெற தொடங்கியிருக்கிறார்.

"சிலர் என்னை அச்சுறுத்தும் கருத்துகளை எழுதினர். டிவிட்டரில், எனது மாடல்களுடன் என்னை டெல்லி ஜம்மா மசூதிக்கு அழைத்துச் சென்று வெட்டி, அந்த கறியை பெண் பத்திரிக்கையாளர்களுக்கும், பெண் எழுத்தாளர்களுக்கும் கொடுக்க வேண்டும் என தேசியவாதிகள் கருத்துகளை வெளியிட்டுள்ளனர். எனது அம்மா என் உடலை பார்த்து அழ வேண்டும் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்."

சிலர் போலிஸாரை தொடர்பு கொண்டு நான் கலவரத்தை தூண்டுவதாக புகார் செய்துள்ளனர்; மேலும் என்னை கைது செய்யுமாறும் கோரியுள்ளனர் என்கிறார் கோஷ்.

படத்தின் காப்புரிமை Image copyrightSUJATRO GHOSH
Image caption கொல்கத்தா ஊக்லி நதியில்

இந்த எதிர்மறை கருத்துகள் கோஷிற்கு ஆச்சரியமாக இல்லை; மேலும் தனது புகைப்படங்கள் பாஜகாவிற்கு எதிரான நடவடிக்கையே என ஒப்புக் கொள்கிறார் கோஷ்.

இது ஒரு அரசியல் தொடர்பான செய்தி என்பதால் நான் அரசியல் ரீதியான கருத்தை கூறுகிறேன். ஆனால் நாம் ஆழமாக பார்த்தால் நமது நாட்டில் இந்துத்துவா மேலோங்கியே உள்ளது; கடந்த இரண்டு வருடங்களில் அது வெளிப்படையாகத் தெரிகிறது என்றும் கூறுகிறார் அந்த புகைப்படக் கலைஞர்.

இந்த அச்சுறுத்தல்கள் கோஷை பயமுறுத்துவதாக தெரியவில்லை. நான் ஒரு மிகப்பெரிய நல்லது நடக்க வேண்டும் என செயல்படுகிறேன். எனவே எனக்கு பயமில்லை என்கிறார் அவர்.

படத்தின் காப்புரிமை Image copyrightSUJATRO GHOSH

இந்த புகைப்படங்கள் வைரலாகி, கோஷிற்கு பல பெண்கள் தங்களையும் இந்த விழிப்புணர்வு பிரசாரத்தில் சேர்த்துக் கொள்ளும்படி செய்தி அனுப்புவதாக கூறுகிறார் கோஷ்.

எனவே இந்த `முரட்டுப்பசு' மிரண்டு போகாமல், தொடர்ந்து பயணம் செய்யும் என்கிறார் கோஷ்.

தொடர்புடைய செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்