ஜி.எஸ்.டி வரியால் சிறு தொழில்கள் பாதிப்பு - சங்கபரிவார் அமைப்பு ஆட்சேபம்

இந்தியாவின் மிகப்பெரிய வரிச் சீர்திருத்தம் என அழைக்கப்படும் புதிய சரக்கு மற்றும் சேவை வரி ஜி.எஸ்.டி) வரும் ஜூன் மாதம் 30-ஆம் தேதி நள்ளிரவு ( ஜூலை 1ம் தேதி) முதல் நாடு முழுவதிலும் அமலாக உள்ள நிலையில், இந்த புதிய வரி பெரிய தொழில்களுக்கு நன்மை அளிப்பதாக இருந்தாலும், சிறு தொழில்களுக்கு கடும் பின்னடைவாக அமையும் என சங் பரிவார் அமைப்புகளின் பொருளாதாரப் பிரிவான சுதேசி ஜாக்ரன் மஞ்ச் கருத்து தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

இதுகுறித்து அந்த அமைப்பின் தேசிய இணை அமைப்பாளரான, டாக்டர் அஸ்வினி மஹாராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், `சரக்கு மற்றும் சேவை வரிக்கான , வரி விகிதங்களை தீர்மானிக்கும் போது, சிறு தொழில்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் மீதான வரி விகிதங்களைக் குறைவாக வைப்பது குறித்து எந்தவித கவனமும் கொள்ளப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

மேலும்,`1.5 கோடி ரூபாய் வரை அளிக்கப்பட்டு வந்த வரிவிலக்கை நீக்குவது, சிறுதொழில்களுக்கு மேலும் ஒரு பின்னடைவாக அமையும் என்று அவர் கூறியிருக்கிறார்.

குறிப்பாக பீடி,பட்டாசுகள், குளிர்பானங்கள், பிஸ்கட், ஊறுகாய்,மிட்டாய், கத்தரிக்கோல் மற்றும் சிறு தொழில்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் பிற பொருட்கள் மற்றும் குடிசைத் தொழில்கள் ஆகியவற்றுக்கு சரக்கு மற்றும் சேவை வரியில் அதிக வரி விதிக்கப்பட்டுள்ளது அவை சந்தையில் போட்டியிடும் தன்மையைப் பாதிக்கும் வகையில் இருக்கிறது.` என அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 கோடி மக்களுக்கு வேலைவாய்ப்பு அளித்து வரும் பீடித் தொழில், அவசியம் பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ள அவர், புதிய சரக்கு மற்றும் சேவை வரியில் பீடிக்கு அதிகபட்சமாக 28 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளதால், புகையிலை பறிப்போர், பீடி சுற்றும் தொழிலாளர்கள் குறிப்பாக பெண்கள் உட்பட கோடிக்கணக்கானவர்களின் வேலைவாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption `பீடித்தொழில் பாதிக்கப்படும்'

``சரக்கு மற்றும் சேவை வரி, பெரிய அளவில் நடைபெறும் தொழில்களுக்கு இணக்கமாக இருக்கும். ஆனால் பெரிய தொழிற்சாலைகள் மற்றும் தொழில்கள் போன்ற தங்கள் போட்டியாளர்களுடன் போட்டியிடுவதில் சிறு தொழில் முனைவோர் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என நாங்கள் நீண்ட நாட்களாக கூறி வருகிறோம்.

உற்பத்தி, வேலைவாய்ப்பு மற்றும் ஏற்றுமதி ஆகியவற்றில் நம் நாட்டில் முக்கியப்பங்கு வகிப்பவை சிறு தொழில்கள்தான் என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.மேலும் சீன உற்பத்திப் பொருட்களுக்கு கடும் போட்டியாக விளங்கி வரும் நமது சிறுதொழில்களுக்கு இந்த புதிய வரிவிதிப்பு பின்னடைவை அளிக்கும் என்பதையும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும் என்றார் டாக்டர் மஹராஜன்.

பல துறைகள், தொழில்கள் மற்றும் பிராந்தியங்களைச் சேர்ந்த பெரும் எண்ணிக்கையிலான சிறு தொழில் முனைவோர் மற்றும் வணிக அமைப்புகள், தற்போதைய வடிவிலான புதிய சரக்கு மற்றும் சேவை வரி மற்றும் அதன் வரி விகிதங்களை அவர்களின் வாழ்வாதாரத்தை மனதில் கொண்டு எதிர்க்கின்றனர் என்றும் அவர் கூறினார்.

ஸ்வதேஷி ஜாக்ரன் மஞ்ச் இந்த சிறு தொழில் நிறுவனங்களின் நியாயமான கோரிக்கைக்கு ஆதரவு தெரிவிக்கிறது. மேலும் சீரான வரிச்சீர்திருத்தத்தை அமல்படுத்துவதற்கு உதவும் வகையில், தகுந்த நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என அரசை எங்கள் அமைப்பு வலியுறுத்துகிறது .` என அந்த அறிக்கையில் டாகடர்.அஸ்வினி மஹாராஜன் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

தொடர்புடைய தலைப்புகள்