ஜி.எஸ்.டி வரி: வியாபாரிகள் எதிர்ப்பு, ஜவுளித்துறை ஆதரவு - ஏன்?

ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி முறை இந்தியா முழுவதும் ஜூலை 1-ஆம் தேதி, சனிக்கிழமை முதல் அமலுக்கு வரும் நிலையில், அந்த முறை, சிறு வியாபாரிகள் மீதும் ஜவுளித்துறையிலும் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து ஓர் ஆய்வு.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்த வரிவிதிப்பு முறையால், சிறு வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்று வியாபாரிகள் தரப்பில் கவலை தெரிவிக்கப்படுகிறது.

ஜவுளித்துறையைப் பொருத்தவரை, பருத்தி ஜவுளிக்கான வரிவிதிப்புக்கு வரவேற்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வணிகர்கள் பேரமைப்பின் தலைவர் விக்ரமராஜாவிடம் இதுகுறித்துக் கேட்டபோது, ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறையால், சிறு வியாபாரிகள் வாழ்வாதாரத்தையே இழந்துவிடுவார்கள் என்று கவலை தெரிவித்தார்.

"சிறு வியாபாரிகள் பலர் காணாமலே போய்விடுவார்கள். பெரும் உற்பத்தியாளர்களுடன் சிறு வியாபாரிகளை ஒரே தளத்தில் இணைப்பது சரியான அணுகுமுறை அல்ல. 500 கோடி முதலீடு செய்பவர்களையும் 5 ஆயிரம், 10 ஆயிரம் முதலீடு செய்பவர்களையும் இணையாகக் கருத முடியுமா?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.

"பெரும் இயந்திரத்தை வைத்து, பெரும் எண்ணிக்கையில் கடலை மிட்டாய் உற்பத்தி செய்யும் தொழிலதிபர்களுக்கு உற்பத்தி செலவு குறைவாக இருக்கும். ஆனால், குடும்பத்தின் வாழ்வாதாரத்துக்காக, சிறிய அளவில் கடலை மிட்டாய் தயார் செய்து, கடை, கடையாகப் போட்டு ஓரிரு ஆயிரங்கள் சம்பாதிக்க கஷ்டப்படும் சிறு வியாபாரிக்கும் பெரு முதலாளிக்கும் ஒரே வரி விதிப்பது நியாயமற்ற நடவடிக்கை" என்றார் விக்ரமராஜா.

"ஐந்து லட்சம் சிறு வியாபாரிகள் உள்ளனர். அவர்களின் நிலையை உணர்ந்து அரசு உரிய மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளிடம் கோரிக்கை வைத்திருக்கிறோம். அந்தக் கோரிக்கையை ஏற்று, சிறு வியாபாரிகள் வாழ வழி செய்தால் நன்றியுடன் இருப்போம். மறுத்தால் போராட்டத்தில் இறங்குவதைத் தவிர வேறு வழியில்லை", என்றார் விக்மராஜா.

வரவேற்கிறோம், இருந்தாலும்...

ஜவுளித்துறையைப் பொருத்தவரை, பருத்தி ஜவுளிப் பொருட்கள் மீது ஐந்து சதம் வரி விதிக்கப்பட்டிருப்பதை மனமுவந்து வரவேற்பதாக, தென்னிந்திய நூற்பாலைகள் சங்கம் (சைமா) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கருத்துத் தெரிவித்த சைமா செயலர் செல்வராஜ், ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, ஜி.எஸ்.டி.யை ஜவுளித்துறை வரவேற்தாகத் தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை Getty Images

பருத்தி ஜவுளிக்கு ஐந்து சதம் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டிருப்பதை வரவேற்கிறோம் என்று அவர் தெரிவித்தார். ஆனால், செயற்கை இழை ஜவுளிகளைப் பொருத்தவரை, அதன் மீதான வரிவிதிப்பு 18 சதமாக நிர்ணயிக்கப்பட்டிருப்பது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று அவர் எச்சரித்தார்.

இந்த வரிவிதிப்பு முறை, குஜராத் மற்றும் மகாராஷ்டிர உற்பத்தியாளர்களுக்கு வேண்டுமானால் பொருத்தமானதாக இருக்கலாம். ஆனால், தமிழ்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு இது கண்டிப்பாக கட்டுபடியாகாது என்றார்.

ஜி.எஸ்.டியில் பூஜ்ஜியம் வரி விதிக்கப்படும் பொருட்கள் என்ன?

ஜி.எஸ்.டி மசோதா இந்திய மாநிலங்களவையில் நிறைவேறியது

செயற்கை இழை நூல், ஆடைகள் மற்றும் போர்வை உள்ளிட்ட பிற உற்பத்திப் பொருட்களின் மீது ஏற்கெனவே 5 சதமாக இருக்கும் வரியை, 18 சதமாக உயர்த்தியிருக்கிறார்கள். அதை குறைந்தபட்சம் 12 சதமாக மாற்றங்கள் என்றுதான் கேட்கிறோம் என்றார் செல்வராஜ்.

அதே நேரத்தில், வியாபாரிகள், இந்த வரி விதிப்பு முறையை நடைமுறைப்படுத்துவதில் கட்டமைப்பு ரீதியாக சில சிக்கல்களைச் சந்திக்க வேண்டியுள்ளது. அது காலப் போக்கில் சரியாகிவிடும் என்று நம்புகிறோம் என்றார் சைமா செயலர் செல்வராஜ்.

வரவேற்கும் ஆயத்த ஆடை துறை

படத்தின் காப்புரிமை Getty Images

பல வரி விதிப்பு முறைகளால் குழப்பத்தில் இருந்த நிலை மாறி, நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பு முறை என்பது வரவேற்கத்தக்கதுதான் என்கிறார் ஆயத்த ஆடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் முன்னிலை வகிக்கும் திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தின் தலைவர் ஏ. சக்திவேல்.

சிறு உற்பத்தியாளர்கள், ஆர்டரின்பேரில் பணி செய்து கொடுப்போர் உள்ளிட்ட ஒரு சிலர் ஆரம்பத்தில் இதனால் சில சிக்கல்களைச் சந்திக்க நேரிடலாம். ஆனால், இந்த வரிவிதிப்பு முறையால் தேசியப் பொருளாதாரம் மேம்படும் என்று சக்திவேல் கருத்துத் தெரிவித்தார்.

தொடர்பான செய்திகள்:

இதையும் படிக்கலாம்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்