நவோதயா பள்ளிக்கூடங்கள் தமிழ்நாட்டில் இல்லாதது ஏன்?

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் நாடு முழுவதும் இயக்கப்பட்டுவரும் ஜவஹர் நவோதயா பள்ளிக்கூடங்களை தமிழ்நாட்டிலும் துவங்க அனுமதிக்க வேண்டும் எனக் கோரி, மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருக்கிறது. நாடு முழுவதும் நடத்தப்படும் இந்தப் பள்ளிக்கூடங்கள் தமிழ்நாட்டில் அனுமதிக்கப்படாதது ஏன்?

படத்தின் காப்புரிமை NOAH SEELAM/AFP/Getty Images

1985ல் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி, நாடு முழுவதும் உள்ள பின்தங்கிய மக்களுக்கு தரமான கல்வியை அளிக்கும் நோக்கத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு பள்ளிக்கூடத்தைத் துவங்க உத்தேசித்தார். 1986ஆம் ஆண்டின் தேசிய கல்விக் கொள்கையில் இந்த திட்டம் உள்ளடக்கப்பட்டது. ஹரியானாவின் ஜஜ்ஜரிலும் மகாராஷ்ட்ராவின் அமராவதியிலும் முதல் இரண்டு பள்ளிக்கூடங்கள் துவங்கப்பட்டன.

ஜவஹர் நவோதயா வித்யாலயா என்று அழைக்கப்படும் இந்தப் பள்ளிக்கூடங்கள் உறைவிடப் பள்ளிகளாகும். 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை இங்கு மாணவர்கள் படிக்க முடியும். தற்போது இந்தியா முழுவதும் 576 மாவட்டங்களில் 598 நவோதயா பள்ளிக்கூடங்கள் செயல்பட்டுவருகின்றன.

இந்தத் திட்டம் துவங்கப்பட்டபோது, தமிழ்நாடு, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் மட்டும் இதனை ஏற்கவில்லை. இந்தப் பள்ளிக்கூடங்களில் பொதுவாக மும்மொழிக் கொள்கை பின்பற்றப்படுகிறது. தவிர, 8ஆம் வகுப்புக்கு மேல் ஆங்கிலம் அல்லது இந்தி மொழியில்தான் பாடங்கள் கற்பிக்கப்படும்.

இந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பாக மேற்கு வங்கம் இந்த பள்ளிக்கூடங்களை நடத்துவதற்கு அனுமதி அளித்தது. ஆனால், தமிழகத்தில் தற்போதுவரை இதற்கான அனுமதி வழங்கப்படவில்லை.

படத்தின் காப்புரிமை DIPTENDU DUTTA/AFP/Getty Images

இந்த நிலையில், குமரி மகா சபா என்ற அமைப்பு சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருக்கிறது. இந்தியாவின் பிற மாநிலங்களைப் போல, தமிழ்நாட்டிலும் நவோதயா பள்ளிக்கூடங்களைத் திறக்க அனுமதிக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு கடந்த ஜூன் 14ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, தமிழகத்தில் நவோதயா பள்ளிக்கூடங்கள் அனுமதிக்கப்படாதது ஏன் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வியெழுப்பி வழக்கை ஜூலை 3ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

நவோதயா பள்ளிகளைப் பொறுத்தவரை, மாநில அரசு செய்ய வேண்டியது 30 ஏக்கர் நிலத்தை இலவசமாகவோ நீண்ட காலக் குத்தகைக்கோ அளிக்க வேண்டும். உள்ளூர் நிலவரங்களைப் பொறுத்து இந்த நிலத்தின் அளவு குறையலாம். இந்தப் பள்ளிக்கூடங்களில், 75 சதவீதம் கிராமப்புறங்களைச் சேர்ந்த மாணவர்கள் சேர்க்கப்படுவதால், அந்த மாணவர்களைத் தேர்வுசெய்ய மாவட்ட நிர்வாகத்தின் உதவியும் தேவைப்படுகிறது.

"எல்லா மாநிலங்களும் இந்தப் பள்ளிகளை அனுமதித்துவிட்ட பிறகு, தமிழகம் மட்டும் ஏன் அனுமதி மறுக்க வேண்டும்? இந்தி இருக்கிறது என்பதற்காக இத்தகைய வசதிகளுடன் கூடிய பள்ளிகளை மாணவர்களுக்கு மறுக்கக்கூடாது" என்கிறார் குமரி மகா சபாவின் செயலர் ஜெயகுமார் தாமஸ்.

படத்தின் காப்புரிமை NARINDER NANU/AFP/Getty Images

தமிழக கல்வித் துறை உயர் அதிகாரிகளிடம் இது குறித்துக் கேட்டபோது, "தமிழகத்தில் தற்போது இரு மொழிக் கொள்கையே பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால், நவோதயா பள்ளிக்கூடங்களில் 8ஆம் வகுப்புக்குப் பிறகு ஆங்கிலம் அல்லது இந்தி வழியில்தான் பாடங்களைப் படிக்க முடியும். மேலும் 2014ஆம் ஆண்டிலிருந்து தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிக்கூடங்களிலும் கட்டாயம் தமிழும் ஒரு பாடமாக இருக்கவேண்டுமென உத்தரவிடப்பட்டிருக்கிறது. கேந்திரீய வித்யாலயா உள்ளிட்ட அனைத்துப் பள்ளிகளுக்கும் இது பொருந்தும். ஆனால் நவோதயா கல்விக்கூடங்களில் மும்மொழிக் கொள்கை பின்பற்றப்படுகிறது. மூன்று மொழிகளில் ஒரு மொழி கட்டாயமல்ல. ஆகவேதான் அனுமதி வழங்கப்படுவதில்லை" என்று தெரிவித்தனர்.

பிற செய்திகள்

மேலும் தமிழ்நாட்டில் தற்போது போதுமான பள்ளிக்கூடங்கள் இருக்கும் நிலையில், புதிதாக பள்ளிக்கூடங்களுக்கு எந்த அவசியமும் இல்லை. இருக்கும் பள்ளிக்கூடங்களின் நிலையை மேம்படுத்த மத்திய அரசு நிதி ஒதுக்கலாமே என்கிறார்கள் அவர்கள்.

"நவோதயா பள்ளிக்கூடங்கள் சமத்துவ உரிமைக்கு எதிரானது. ஒரு அரசு எல்லோருக்கும் ஒரே மாதிரியாக கல்வியை அளிக்க வேண்டும். ஆனால், நவோதயா பள்ளிக்கூடங்களில் சில மாணவர்கள் மட்டும் தேர்வுசெய்யப்பட்டு, அவர்களுக்காக கோடிக்கணக்கில் அரசு செலவு செய்கிறது. சுதந்திரமைடந்து 70 ஆண்டுகளுக்குப் பிறகு, இதேபோல, மாதிரி பள்ளிக்கூடங்களை உருவாக்கி, அதில் படிக்கும் மாணவர்களை மட்டும் சிறப்பாக கவனித்துக்கொண்டிருக்கப் போகிறோமா?" என்கிறார் பொதுக் கல்விக்கான மாநில மேடையின் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு.

படத்தின் காப்புரிமை PRAKASH SINGH/AFP/Getty Images

1966 கோத்தாரி கமிஷன், பொதுப் பள்ளிகளின் மூலமாக குழந்தைகளின் கல்வி உரிமையைப் பாதுகாக்க வேண்டும் என்று கூறியது. ஆனால், அதற்குப் பதிலாக, குழந்தைகளுக்குக் கல்வி அளிக்கும் கடமையை பெற்றோரிடம் தள்ளிவிடுகிறார்கள். கோத்தாரி கமிஷன் கூறியதைப் போல எல்லோருக்கும் அருகாமைப் பள்ளிகளின் மூலமாக கல்வி அளிப்பதை விடுத்து சில மாணவர்களைத் தேர்வுசெய்து அவர்களுக்கு பணத்தைச் செலவு செய்கிறார்கள் என்கிறார் பிரின்ஸ்.

நவோதயா பள்ளிக்கூடங்களில் 6ஆம் வகுப்புச் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு வைக்கப்பட்டு மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்புவரை மாதம் 200 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

தற்போது குமரி மகா சபா தொடர்ந்திருக்கும் இந்த வழக்கில், தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. இந்த வழக்கு மீண்டும் ஜூலை 3ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.

படத்தின் காப்புரிமை NOAH SEELAM/AFP/Getty Images

தமிழ்நாட்டில் குழந்தை பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், பள்ளிக்கூடங்களில் சேர்க்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கையும் வெகுவாகக் குறைந்திருக்கிறது. தற்போது (2015-16) தமிழ்நாட்டில், ஒட்டுமொத்தமாக 57 ஆயிரத்து 539 பள்ளிக்கூடங்கள் இயங்கிவருகின்றன. 2014-15ஆம் கல்வியாண்டில், 57 ஆயிரத்து 153 பள்ளிகளே இருந்தன. ஆனால், அப்போது மாணவர்களின் எண்ணிக்கை 92 லட்சத்து 52 ஆயிரத்து 467. ஆனால், தற்போது அது 92 லட்சத்து 36 ஆயிரத்து 192ஆக இருக்கிறது. அதாவது பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கும் அதே நேரம், மாணவர்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது.

இந்த நிலையில் மாநிலத்திற்கு புதிதாக பள்ளிக்கூடங்கள் கட்டுவதைவிட, இருக்கும் பள்ளிக்கூடங்களில் வசதிகளை அதிகரிப்பது, கல்வித்தரத்தை மேம்படுத்துவது ஆகியவையே முக்கியமான இலக்காக இருக்க முடியும் என்கிறார்கள் கல்வியாளர்கள்.

இந்த செய்திகளையும் நீங்கள் விரும்பலாம்

தமிழக அரசைப் பொறுத்தவரை, பள்ளிக்கூடங்களின் தரம், ஆசிரியர்களின் திறன் ஆகியவற்றை தொடர்ந்து மேம்படுத்திவருவதாக சொல்கிறது. மேலும் தொலைதூரங்கள், மலை பிரதேசங்கள் ஆகியவற்றில் புதிய பள்ளிகள் திறக்க வேண்டிய அவசியம் இருப்பதை ஒப்புக்கொள்ளும் அரசு, அவற்றில் கவனம் செலுத்திவருவதாகக் கூறுகிறது.

கல்வித் துறையில் தமிழக அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள், சீர்திருத்தங்களை முன்வைத்து தனது பதில் மனுவை தாக்கல்செய்யப்போவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

பிபிசியின் பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்