கூடங்குளம் 3, 4-ஆவது அணு உலைகள் கட்டுமானப் பணி தொடக்கம்

  • 30 ஜூன் 2017

தமிழகத்தின் கூடங்குளத்தில் மூன்று மற்றும் நான்காவது அணு உலைகள் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள், வியாழக்கிழமை தொடங்கப்பட்டதாக ரஷிய அணுசக்தி நிறுவனமான ரோஸதமினின், துணை நிறுவனமான ஏஎஸ்சி பொறியியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Image caption கூடங்குளம் அணுமின்நிலையம் (கோப்புப்படம்)

கூடங்குளத்தில் தற்போது தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இரு அணு உலைகள் மூலம் மின்னுற்பத்தி நடைபெற்று வருகிறது.

2020-ஆம் ஆண்டுக்கு முன்னதாக, இந்தியாவில் ரஷிய வடிவமைப்புடன் கூடிய சுமார் 12 அணுமின் நிலையங்கள் அமைத்து, அணு மின்சாரம் தயாரிக்க இரு நாடுகளும் கூட்டாக முடிவு செய்துள்ளன.

இதன்படி, வியாழக்கிழமை தொடங்கப்பட்டுள்ள மூன்று மற்றும் நான்காவது அணு உலை கட்டுமானப் பணிகள் குறித்து ரஷியாவின் ஏ.எஸ்.சி பொறியியல் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அதில், நட்பு நாடான இந்தியாவில் எரிசக்தி பாதுகாப்புக்கு தேவையான வசதிகளை வழங்க தங்கள் நிறுவனத்தின் அனுபவங்களை தொடர்ந்து பகிர்ந்து கொள்வோம் என அதன் தலைவர் வலெரி லிமாரென்கோ கூறியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி, 2016-ஆம் ஆண்டு இறுதியில், முதலாவது அணு உலை முழுமையாகவும், இந்த ஆண்டு தொடக்கத்தில் இரண்டாவது அணு உலை இடைக்காலமாகவும் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஏஎஸ்சி நிறுவனத்தின் துணைத் தலைவர் ஆன்ட்ரே லெபெடேவ் கூறுகையில், அணு உலை நிலையத்தின் பிரதான கட்டடங்களுக்கு முதலாவது அடித்தள கான்கிரீட் கல் பாரம்பரியப்படி நிறுவப்பட்டுள்ளது என்றார்.

பிற செய்திகள்

இதைத் தொடர்ந்து, கட்டுமானப் பணிகள் முழு வீச்சில் தொடங்கும் என்றும், தெர்மல் மற்றும் மின்சார சாதனங்கள், ரஷியாவின் சாதனங்கள் போன்றவற்றை அணு உலையில் நிறுவும் பணிகள் நடைபெறும் என்றும் ஆன்ட்ரே லெபெடேவ் தெரிவித்துள்ளார்.

கூடங்குளம் மூன்றாவது அணு உலையில் 2023-ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலும், நான்காவது அணுஉலையில் 2024-ஆம் ஆண்டிலும், மின் உற்பத்தியைத் தொடங்க இந்தியாவும் ரஷியாவும் இலக்கு நிர்ணயித்துள்ளன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்