திருமணத்துக்கு தயாராகும் லயோனல் மெஸ்ஸி; அவர்களின் குழந்தைகளும் விருந்தினர்கள்!

  • 30 ஜூன் 2017
படத்தின் காப்புரிமை AFP / GETTY IMAGES
Image caption கால்பந்தாட்ட மைதானத்தில் தனது இரு குழந்தைகள் மற்றும் காதலி ஆண்டோனெல்லா ரோக்குசோவுடன் மெஸ்ஸி

நட்சத்திர கால்பந்து வீரரான லயோனல் மெஸ்ஸிக்கும், அவரது குழந்தை பருவ தோழிக்கும் அர்ஜெண்டினாவில் உள்ள மெஸ்ஸியின் சொந்த ஊரில் வெள்ளிக்கிழமை திருமணம் நடைபெற உள்ளது.

பார்சிலோனா கால்பந்து கிளப் அணிக்காக விளையாடி வரும் மெஸ்ஸி, தனது தோழி ஆண்டோனெல்லா ரோக்குசோவை திருமணம் செய்து கொள்வதற்காக தனது சொந்த ஊரான ரொசாரியோ நகருக்கு திரும்பவுள்ளார்.

'இந்த ஆண்டின், ஏன் இந்த நூற்றாண்டின் திருமணம்' என்று அர்ஜெண்டினாவிலிருந்து வெளிவரும் `கிளாரின்` பத்திரிகை வர்ணிக்கும், இந்த திருமணத்தில் கலந்து கொள்வதற்காக, மெஸ்ஸியின் சக அணி வீரர்களான லூயிஸ் சாரெஸ் மற்றும் நெய்மர் உட்பட 260 சிறப்பு விருந்தினர்கள் தனி விமானங்கள் மூலமாக ரொசாரியோ நகருக்கு வந்துள்ளதாக அப்பத்திரிக்கை தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை AFP / GETTY IMAGES

விருந்தினர்களில் பலர் இதில் கலந்து கொள்ள தனி விமானங்களில் வந்துவிட்டனர்.

இந்த திருமணம் ரொசாரியோவில் உள்ள சூதாட்ட விடுதியுடன் கூடிய சிட்டி சென்டர் ஹோட்டல் காம்ப்ளக்ஸ் விடுதியில் நடைபெற உள்ளது.

இந்த திருமணம் நடைபெற உள்ள நட்சத்திர விடுதியைச் சுற்றி பாதுகாப்பிற்காக அதிகளவில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர தனியார் பாதுகாவலர்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தற்போது முப்பது வயதாகும் மெஸ்ஸி, தன்னுடைய சிறந்த நண்பரும், தற்போது தொழில்முறை கால்பந்தாட்ட வீரராகவும் திகழும் லூகாஸ் ஸ்காக்லியாவின் தங்கையான ரோக்குசோவிடம் தனது ஐந்தாவது வயதிலேயே அறிமுகமாகிவிட்டார்.

வளர்ச்சி தொடர்பான ஹார்மோன் பிரச்சினையினால் பாதிக்கப்பட்டிருந்த மெஸ்ஸிக்கு இலவச சிகிச்சை அளிக்க முன்வந்ததால் , தனது 13-வது வயதில் பார்சிலோனா அணிக்காக விளையாட மெஸ்ஸி ஒப்புக் கொண்டார்.

படத்தின் காப்புரிமை CITYCENTER ROSARIO
Image caption மெஸ்ஸியின் திருமணம் நடைபெறவிருக்கும் இடம்

தற்போது இந்த ஜோடி,தங்களது இரண்டு குழந்தைகளுடன் பார்சிலோனாவில் வாழ்ந்து வருகிறது.

ஜெரார்டு பிகே உள்ளிட்ட பார்சிலோனா அணியின் அனைத்து வீரர்களுக்கும்,அர்ஜெண்டினா அணியின் கால்பந்து வீரரான செர்ஜியோ அகுரோ மற்றும் அவரது மனைவியும், பிரபல பாப் பாடகியுமான ஷகிராவுக்கும் திருமணத்தில் கலந்து கொள்ள மெஸ்ஸி அழைப்பு செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அர்ஜெண்டினா கால்பந்து அணியின் ஜாம்பவானான டியாகோ மாரடோனா மற்றும் மெஸ்ஸியின் தற்போதைய கால்பந்து அணி பயிற்சியாளர்கள் யாருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை என்கின்றன ஊடகங்கள்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்