டெல்லியில் குழந்தையை கடத்தி ரூ.2.5 லட்சத்துக்கு விற்க முயன்ற கும்பல் கைது

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப்படம்

தலைநகர் தில்லியின் பல பகுதிகளிலிருந்து குழந்தைகளைக் கடத்தி குழந்தைகளில்லாத தம்பதியினருக்கு விற்பனை செய்யும் கடத்தல் குழுவை தில்லி போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும், இரண்டரை வயது குழந்தை ஒன்றையும் அக்குழுவினரிடமிருந்து பத்திரமாக மீட்டுள்ளனர்.

கடந்த 5-ம் தேதி, தில்லியை சேர்ந்த ஆரிஃப் என்பவர் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் இஃப்தார் தொழுகைக்காக, ஜமா மசூதிக்கு சென்றனர். அவர்கள் அனைவரும் தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது, ஆரிஃபின் இரண்டரை வயது மகன் காணாமல் போனார். அந்த சமயத்தில் அக்குழந்தையை போலீஸாரால் கண்டுபிடிக்கவும் முடியவில்லை.

படத்தின் காப்புரிமை @mehtakanika1809
Image caption குழந்தை மீட்கப்பட்ட போது

காணாமல் போன குழந்தையின் புகைப்படம் வாட்ஸ் ஆப் மற்றும் கேபிள் டீவிக்களில் விளம்பரப்படுத்தப்பட்ட நிலையில், குழந்தை கூர்கானில் இருப்பதாகவும், 2.5 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட உள்ளதாகவும் போலீஸாருக்கு ஒரு பெண் மூலம் தகவல் கிடைத்தது. தொடர் விசாரணையில் சரோஜ் என்ற பெண்ணை போலீஸார் கைது செய்தனர்.

சரோஜை தொடர்ந்து கடத்தல் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என்று குற்றஞ்சாட்டப்படும் சோனியா, ராதா மற்றும் ஜான் முகமது ஆகியோர் கடந்த 28-ம் தேதி போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். போலீஸ் விசாரணையில், ஜான் முகமது என்பவர் குழந்தையை ராதாவிடம் விற்கக்கோரி கொடுத்ததாகவும், ராதா சோனியாவிடம் குழந்தையை ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்ததாகவும், சரோஜ் சோனியாவிடமிருந்து 1.1 லட்ச ரூபாய்க்கு குழந்தையை பெற்றதாகவும், இறுதியாக குழந்தையை 1.8 லட்ச ரூபாய்க்கு விற்க ஒரு நல்ல தம்பதியினருக்காக சோனியா காத்திருந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை @mehtakanika1809
Image caption பெற்றோர்களிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்ட குழந்தை

தில்லியில் உள்ள செயற்கை கருத்தரிப்பு மையங்களில் சோனியா, ராதா மற்றும் சரோஜ் தங்களுடைய கரு முட்டைகளை தானம் செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு மூவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கருத்தரிப்பு மையங்களுக்கு சிகிச்சைக்காக வரும் குழந்தைகளற்ற பெற்றோர்களில் சிலரும் இவர்களுக்குப் பழக்கமானார்கள். கடத்தப்பட்ட குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்