தமிழக காவல்துறை தலைவராக டி..கே. ராஜேந்திரன் நியமனம்

தமிழக காவல்துறையின் புதிய தலைவராக டி.கே. ராஜேந்திரனை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நேற்று அவர் பணி ஓய்வு பெறும் நிலையில் அவருக்கு இந்த பதவி வழங்கப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

தமிழகத்தின் காவல்துறை தலைவராக இருந்த அசோக்குமார் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஆறாம் தேதியன்று விருப்ப ஓய்வுபெற்றார். இதையடுத்து சென்னை மாநகர ஆணையராக இருந்த டி.கே. ராஜேந்திரன், உளவுப் பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டு, கூடுதல் பொறுப்பாக சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக செயல்பட்டுவந்தார்.

டி.கே. ராஜேந்திரன் நேற்று ஓய்வுபெற வேண்டிய நிலையில், புதிய காவல்துறை தலைவர் யார் என்பது குறித்து தமிழக அரசு நேற்றுவரை அறிவிப்பு எதையும் வெளியிடாமல் இருந்துவந்தது.

இந்த நிலையில், டி.கே. ராஜேந்திரனை புதிய சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக நியமித்து தமிழக அரசின் தலைமைச் செயலர் உத்தரவிட்டுள்ளார். டி.ஜி.பியாக நியமிக்கப்படுபவர்களுக்கு இரண்டாண்டு பதவிக்காலம் இருக்க வேண்டுமென உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதால், நேற்று ஓய்வுபெறும் ராஜேந்திரன் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு அந்தப் பதவியில் தொடர்வார்.

டிஜிபியை தேர்வுசெய்ய, மாநில அரசு பதவி மூப்புப் பட்டியலில் உள்ள 5 அதிகாரிகளின் பெயர்களை மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும். அதில் மத்திய அரசு தேர்வு செய்யும் மூவரிலிருந்து ஒருவரை மாநில அரசு தேர்வுசெய்யலாம்.

தமிழக அரசில் தற்போதைய நிலையில், அர்ச்சனா ராமசுந்தரம், கே. ராதாகிருஷ்ணன், கே.பி. மகேந்திரன், தற்போதைய சென்னை மாநகர ஆணையர் ஜார்ஜ், டி.கே. ராஜேந்திரன் ஆகியோர் மூத்த ஐந்து அதிகாரிகளாக உள்ளனர்.

இந்த நிலையில், டி.கே. ராஜேந்திரன் காவல்துறையின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஓய்வுபெறும் நிலையில் உள்ள காவல்துறை அதிகாரிகளுக்கு டிஜிபி பதவியை அளித்து, அவர்களுக்கு பணி நீட்டிப்பு செய்வது இதற்கு முன்பாகவும் நடந்துள்ளது. முன்னாள் டிஜிபி ராமானுஜம், அசோக்குமார் ஆகியோர் இவ்வாறு நியமிக்கப்பட்டனர். ஆனால், அசோக்குமார் தனது பதவிக்காலம் முடிவதற்கு முன்பாகவே விருப்ப ஓய்வு பெற்றார்.

1984ஆம் வருட ஐபிஎஸ் அதிகாரியான டி.கே. ராஜேந்திரன், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு, சட்டம் - ஒழுங்கு, நிர்வாகம் உள்பட காவல்துறையின் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றியவர். சென்னை நகர ஆணையராக இருமுறை அவர் பதவிவகித்துள்ளார்.

தலைவர்கள் கண்டனம்

ஆனால், டிகே. ராஜேந்திரனை டிஜிபியாக நியமிப்பதை எதிர்த்து அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.

சில நாட்களுக்கு முன்பாக ஊடகங்களில் வெளியான வருமான வரித்துறை ஆவணம் ஒன்றில், சட்ட விரோதமாக குட்கா எனப்படும் போதைப் பொருளை விற்பனை செய்த தொழிலதிபர் ஒருவரது இடத்தை சோதனையிட்டபோது டைரி ஒன்று சிக்கியுள்ளது. அந்த டைரியில், சில காவல்துறை அதிகாரிகளுக்கு தொடர்ச்சியாக பணம் கொடுக்கப்பட்டுவந்ததாக கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இன்று அறிக்கை வெளியிட்டுள்ள தி.மு.கவின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், "குட்கா டைரியில் இடம்பெற்றுள்ள தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக கூடுதல் பொறுப்பு வகித்துவரும் டி.கே. ராஜேந்திரனை புதிய டிஜிபியாக நியமித்திருப்பது வெட்கக்கேடானது" என்று கூறியிருக்கிறார். மேலும் இதற்கு மத்தியப் பணியாளர் தேர்வாணையமும் துணை போயிருப்பது வேதனையளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்