ஜிஎஸ்டி அமலுக்கு வரவேற்பும், எதிர்ப்பும்

  • 1 ஜூலை 2017
படத்தின் காப்புரிமை Getty Images

இந்தியா முழுவதும், "ஒரே நாடு, ஒரே வரி" என்ற முழக்கத்துடன் வெள்ளிக்கிழமை இரவு அமலுக்கு வந்த சரக்கு, சேவை வரிகள் (ஜிஎஸ்டி) முறைக்கு அரசியல் தலைவர்கள், வணிகர்கள் தரப்பில் பரவலாக வரவேற்பும் எதிர்ப்பும் காணப்பட்டது.

ஜிஎஸ்டி அமலுக்கு வந்ததும், மத்தியில் ஆளும் நரேந்திர மோதி தலைமையிலான இந்திய அரசின் அமைச்சர்கள் சுரேஷ் பிரபு, தர்மேந்திர பிரதான், பியூஷ் கோயல், ரவிசங்கர் பிரசாத் உள்ளிட்டோர் மகிழ்ச்சி தெரிவித்து சனிக்கிழமை பல்வேறு ஊடகங்களுக்கு பேட்டி அளித்தனர்.

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா கூறுகையில், ஜிஎஸ்டி அமலால், இந்தியா முழுவதும் ஒரே சந்தையாகியுள்ளது என்றார்.

ஜிஎஸ்டி அமலால் இந்தியாவின் பின்தங்கிய மாநிலங்கள் மேம்படும் என்றும் ஏழைகள், ஒடுக்கப்பட்ட மக்கள் ஆகியோர் வாழ்வில் ஏற்றம் பெறுவர் என்றும் அமித் ஷா தெரிவித்தார்.

நிர்மலா சீதாராமன் விளக்கம்

ஜிஎஸ்டி அமலாக்கம் குறித்து தமிழகத்தில் உள்ள வர்த்தர்களிடம் விளக்குவதற்காக மத்திய வர்த்தகம், தொழிற்துறை இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன் சனிக்கிழமை சென்னை சென்றார்.

படத்தின் காப்புரிமை Getty Images

மாநிலத்தின் பல்வேறு இடங்களில் உள்ள தொழில் கூட்டமைப்பினர், தொழில் நிறுவனங்களின் நிர்வாகிகள், வர்த்தகர்கள் உள்ளிட்டோர் எழுப்பிய கேள்விகளுக்கு, காணொளி காட்சி மூலம் அவர் விளக்கம் அளித்தார்.

ஜிஎஸ்டி முறைக்கு சிறு தொழில் நிறுவனங்கள் இன்னும் தயாராகவில்லை என்பது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், "இதில் சிக்கலை எதிர்கொள்ளும் வணிகர்கள், பட்டய கணக்காளர்கள் சங்கம் (சி.ஏ) அல்லது மாவட்ட வர்த்தக சபை ஆகியவற்றை அணுகி, ஜிஎஸ்டி பதிவுக்கான மையத்தை தொடங்கலாம்" என்றார்.

பல்வேறு இடங்களில் நிறுவப்பட்டுள்ள சுவிதா சேவை மையங்களை சிறு வணிகர்கள் மற்றும் கணினி பயன்பாடு அறியாத வணிகர்கள் அணுகி, ஜிஎஸ்டி கணக்குகள் பதிவு செய்து , கணக்குகள் தாக்கல் செய்யலாம் என்றார் நிர்மலா சீதாராமன்.

சிதம்பரம் எதிர்ப்பு

இதற்கிடையே, ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட நடவடிக்கையை இந்திய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது பற்றி அவர் காரைக்குடியில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறுகையில், "நிபுணர்கள் தயாரித்த அசல் ஜிஎஸ்டி இதுவல்ல" என்றார்.

இந்திய பணவீக்கத்தில் புதிய வரி முறை, கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் சிதம்பரம் எச்சரித்தார்.

எடப்பாடி அரசு ஆதரவு

ஜிஎஸ்டி அமலுக்கு, தமிழகத்தில் ஆளும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு ஆதரவு தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

ஆனால் தூத்துக்குடி, பாளையம்கோட்டை, உடன்குடி போன்ற இடங்களிலும் சில தென் மாவட்டங்களிலும் கடைகள் பரவலாக அடைக்கப்பட்டிருந்தன.

அகில இந்திய வர்த்தகர் சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் பிரவீண் கன்டேல்வால் பிபிசி தமிழிடம் கூறுகையில், "புதிய வரிச்சீர்த்திருத்தமான ஜிஎஸ்டி பற்றிய படிப்பினை, மத்திய-மாநில அரசுகளுக்கு மட்டுமின்றி, வர்த்தகர்களுக்கும் புதிய அனுபவமாக இருக்கும்" என்றார்.

ஜிஎஸ்டி அமலின்போது, சில நடைமுறை பிரச்னைகள் எழுவதால், அவற்றைக் களைய குறைந்தபட்சம் ஆறு மாதங்களாவது ஆகும் என்று கன்டேல்வால் தெரிவித்தார்.

தொழிலாளர்கள் கவலை

ஜிஎஸ்டி விகிதங்களால் பீடி, பட்டாசுகள், பிஸ்கெட், ஊறுகாய் உள்ளிட்டவைகளைத் தயாரிக்கும் சிறு தொழில் நிறுவனங்கள், குடிசைத் தொழிலில் ஈடுபடுவோர், தங்கள் தொழிலும் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் என்று கவலை தெரிவிக்கின்றனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

தில்லியின் பாரம்பரிய சந்தையாகக் கருதப்படும் சாந்தினி செளக் பகுதியில் உள்ள மொத்த விற்பனை துணி வியாபாரிகள், ஜி.எஸ்.டி முறைக்கு எதிராக சனிக்கிழமை கடையடைப்பில் ஈடுபட்டனர்.

பிற மாநிலங்கள்

உத்தர பிரதேச மாநிலம், அலகாபாதில் ஜிஎஸ்டிக்கு எதிராக கங்கா கோம்தி விரைவு ரயிலை மறித்து சமாஜ்வாடி கட்சி தொண்டர்கள் சிலர் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய பிரதேச தலைநகர் போபாலில், ஜிஎஸ்டி முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெரும்பான்மை சிறு கடை வியாபாரிகள் வெள்ளிக்கிழமையைத் தொடர்ந்து இரண்டாவது நாளாக சனிக்கிழமையும் கடையடைப்பில் ஈடுபட்டனர்.

ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் ஜிஎஸ்டிக்கு எதிராக உள்ளூர் வியாபாரிகள், போக்குவரத்து நிறுவனங்களின் உரிமையாளர்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தங்கள் மாநிலத்துக்கு அரசியலமைப்பின் 370-ஆவது பிரிவின்படி சிறப்பு அந்தஸ்து இருப்பதால், இந்தியாவின் பிற பகுதிகளில் அமல்படுத்தப்படும் ஜிஎஸ்டி முறையை ஜம்மு காஷ்மீரில் அமல்படுத்தக் கூடாது என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்