ஆண்களே இல்லாத ஒரு `பெண் உலா' அனுபவம்

Image caption நான்கு முதல் 61 வயது வரை உள்ள 16 பெண்கள் இந்த சுற்றுலாவில் பங்கெடுத்துள்ளனர்.

தமிழகத்தை சேர்ந்த பெண்கள் குழு ஒன்று ஒன்றிணைந்து, ஆண் துணையின்றி பொதுப் போக்குவரத்து வசதியை மட்டுமே பயன்படுத்தி ஒரு சுற்றுலா சென்று பத்திரமாகதிரும்பியுள்ளது.

நான்கு வயது முதல் 61 வயது வரை உள்ள 16 பெண்கள் இந்த சுற்றுலாவில் பங்கெடுத்தனர்.

''போவாமா ஊர்கோலம்'' என்ற ஒரு வாட்ஸப் குழுவை சேர்ந்த பெண்கள் தங்களது முதல் பயணத்தை வெற்றிகரமாக முடித்துள்ளனர்.

''இது நிலவுக்குப் போய் திரும்பியது போன்ற சாதனைதான். பழக்கமில்லாத நண்பர்களுடன் கேரளா மற்றும் தமிழ்நாடு வனப்பகுதிகளில் நான்கு நாட்கள் சுற்றுலா சென்று வந்தபின், வெளி இடங்களுக்கு ஜீன்ஸ் அணிந்து செல்வதில் இருந்த தயக்கம் காணாமல் போய்விட்டது,'' என்கிறார் சித்ரா.

பெண்கள் ஏன் பயணிக்க வேண்டும்?

ஆவணப்பட இயக்குநர் கீதா இளங்கோவன், பிருந்தா மற்றும் ஒரு சில நண்பர்கள் தொடங்கிய உரையாடல், தற்போது பல பெண்களை ஒன்றிணைத்து சுற்றுலா பயணம் செல்லும் திட்டத்திற்கு வழி வகுத்துள்ளது.

பெண்களின் பயணத்தை ஊக்குவிப்பது, பயணத்தில் பெண்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்துவது மற்றும் சமூக பிரச்சனைகளை அலசுவது என்று முடிவு செய்து பயணக் குழுவுக்கு பெண்ணிய கல்வியாளர் 'சாவித்திரிபாய் புலே குழு' என்று பெயரிட்டு முதல் அடியை இந்த பெண்கள் எடுத்து வைத்துள்ளனர்.

பெண்கள் ஏன் பயணிக்க வேண்டும் என்பதை விளக்கும் கீதா, ''பெண்களின் சுற்றுலா என்றாலே ஆன்மீக தலங்களுக்கு செல்வது, அல்லது குடும்பத்துடன் பயணம் செய்வது மட்டுமே அதிகமாகப் பார்க்க முடிகிறது. திருமணத்திற்குப் பிறகு, ஆண்கள் தங்களது நண்பர்களுடன் சுற்றுலா செல்வதில் எந்தச் சிக்கலும் இருப்பதில்லை. அவர்களுக்கு பொறுப்புகள் சுமத்தப்படுவதில்லை. பெண்கள் சுற்றுலா சென்றாலும், மனைவி, தாய் என்ற ஸ்தானத்தில் தனது பொறுப்புகளை சுமந்துகொண்டே இருக்கவேண்டும் என்ற உணர்வுக்கு விடுப்பு கொடுத்த விடுமுறை இது.''

சுற்றுலாவில் குடும்பத்தை சுமக்கும் பெண்கள்

கீதா தெரிவித்த கருத்துகளுக்கு தனது வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளே சாட்சி என்கிறார் 61 வயது பயணி ஜான்சி ராணி.

''26 ஆண்டுகளுக்கும் மேலாக வங்கி ஊழியராகப் பணியாற்றி 2007ல் ஓய்வு பெற்றேன். வாழ்க்கை கசப்பானது என்ற எண்ணத்தை மாற்றி, இனிமேல் எனக்காக நான் வாழவேண்டும். என் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தற்போது பிறந்துள்ளது,'' என்கிறார் ஜான்சி.

கொல்கத்தா, டெல்லி, மும்பை என பல நகரங்களுக்கு குடும்பத்துடன் சென்ற சுற்றுலாக்களின் போது குழந்தைகளை பார்த்துக்கொள்ள வேண்டும், உணவு தரமானதாக இருக்க வேண்டும் என்ற உணர்வுதான் மேலோங்கி இருந்தது என்கிறார்.

இந்த முறை பயணத்தில் நான்கு வயது யாஷனாவுடன், 61 வயது ஜான்சி, பதின்ம வயது பெண்கள் என பலரும் பிரபல குத்துப்பாட்டுக்கு நடனம் ஆடியது பயணத்திற்கு மேலும் மகிழ்ச்சியைக் கூட்டியது என்கிறார்கள் பெண் பயணிகள்.

மூங்கில் படகு பயணமும், யானை சவாரியும்

வனப்பகுதியை ஏன் தேர்வு செய்தோம் என்று கூறும் பிருந்தா, இந்தப் பயணம் சுற்றுலாவாக மட்டுமல்லாமல், பெண்கள் தங்களது அனுபவங்களைப் பகிர்வது தன்னம்பிக்கையை வளர்க்கும் என்பதற்காக இடையிடையே அமர்ந்து பேசுவதற்கு நேரம் ஒதுக்கினோம். அதற்கு ஏற்றது இயற்கை சூழல் என்று முடிவு செய்தோம் என்கிறார் அவர்.

கேரளா மற்றும் தமிழக வனத்துறை அதிகாரிகளிடம் பேசிய பெண்கள் குழு, அதிகாரிகளின் ஆதரவு மிகவும் உதவிகரமாக இருந்தது என்கிறார்கள்.

''பாதுகாப்பு என்பது பெண்கள் பயணம் செய்ய தடையாக பார்க்கப்படுகிறது. வனப்பகுதிக்குள் செல்வதற்கு ஒரு பாதுகாவலரை வனத்துறை அதிகாரிகள் எங்களுடன் அனுப்பினர். விடுதி வசதி மிகவும் சிறப்பாக இருந்தது. மனம்விட்டு பேச வனம் உதவியது,'' என்கிறார் பயணி கீதா.

இல்லத்தரசி சுகுணாவிற்கு பரம்பிக்குளம் வனப்பகுதியில் மூங்கில் படகில் பயணித்தது த்ரில்லிங் அனுபவமாக அமைந்தது.

''பயணத்தின் போது 10 வயது மகனை கணவருடன் விட்டு வந்துள்ளோம் என்ற குற்ற உணர்வு இருந்தது. ஆனால், என் மகன் தொலைபேசியில் என்னிடம், ''அம்மா நீ ஜாலியா இரு. எப்போதும் எங்களுக்காகவே வேலை செய்கிறாய். யு நீட் டு என்ஜாய் (You need to enjoy) என்று சொன்ன தருணம் எனக்கு பிரமிப்பாக இருந்தது,'' என்கிறார் சுகுனா.

யானைகளுக்கு டாய்லேட் வசதி இல்லையா ?

இரவு தூங்குவதற்கு பொதுவான அறையில் பங்கர் பெட் வசதி, உணவுக்கு வனத்துறை கேன்டீன், இரவு - பகல் பாராத உரையாடல்களில் கிடைத்த தெளிவு, ஆழியாறு அணையில் மழை வந்தபோது நடனம் என பொக்கிஷமான அனுபவங்கள் கிடைத்ததாக கூறுகிறார்கள்.

பயணத்தின்போது எல்லோரும், எல்லோருக்கும் உதவ வேண்டும், வெளிப்படையாகப் பேச வேண்டும், அவர்களது வாழ்க்கையில் மற்றவர்களிடம் பேச அல்லது கேட்டுத் தெரிந்துகொள்ள தயங்கிய விஷயங்கள் என பலவற்றையும் பேசிமுடித்தபோது, நான்காம் நாள் பொழுது புலர்ந்தது என்கிறார்கள் பெண் பயணக் குழுவினர்.

பெண் பயணம் பற்றிய உற்சாகத்தில் இருந்து இன்னும் மீளாத ரித்திகா, புலியின் கால்தடம், மான் கூட்டம், காட்டு எருமை போன்றவற்றை பார்த்த பசுமையான நினைவுகளை தனது பள்ளிக்கூட நண்பர்களிடம் ஆவலோடு விவரித்து வருகிறார்.

''என்னுடைய நண்பர்கள் எல்லோரும் பெண் பயணம்னா என்னனு கேட்டாங்க. பெண்ணா ஜாலியாக இருக்கனும். பெண்ணா தைரியமா பயணிக்கலாம். அதனால பயணம் வேணும்னு சொன்னேன்,'' என்கிறார்.

பயணத்தின் போதும், பயணத்தின் பிறகும் பெண்களுக்கு பல கேள்விகள் எழுந்தன. பதில் கிடைத்தவை, இல்லாதவை என இரண்டு விதமும் அதில் இருந்தன.

ஆனால், நான்கு வயது பயணி யாஷனாவுக்கு எழுந்த மாபெரும் சந்தேக்கத்துக்கு பதில் சொல்ல முடியாமல், அத்தனை பேரும் மலைத்துப் போய் நின்றார்கள்.

''ஏன் யானைகள் வனப்பகுதியில் நின்ற இடத்தில் மலம் கழிக்கின்றன. யானைகளுக்கு டாய்லெட் வசதி இல்லையா?!''

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்