கர்ணன் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கண்டிப்பு: `6 மாத தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும்'

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட ஆறு மாத சிறை தண்டனையை ஓய்வு பெற்ற நீதிபதி சி.எஸ். கர்ணன் அனுபவித்தே தீர வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் இன்று தெரிவித்தது.

படக்குறிப்பு,

முன்னாள் நீதிபதி கர்ணன்

உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, கொல்கத்தா நீதிமன்ற முன்னாள் நீதிபதி சி.எஸ்.கர்ணனை மேற்கு வங்க காவல்துறையினர் கடந்த மாதம் 20-ஆம் தேதி கைது செய்தனர். பின்னர் கொல்கத்தா சிறையில் அடைக்கப்பட்டார்.

இதற்கிடையே, தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக் கோரியும், தனக்கு ஜாமீன் வழங்கக் கோரியும் கர்ணன் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த மே மாதம் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ஜே.எஸ். கெஹர் தலைமையிலான அமர்வு முன்னிலையில், கர்ணன் சார்பில் அவரது வழக்கறிஞர் மாத்யூஸ் ஜே.நெடும்பரா இன்று ஆஜரானார்.

கர்ணன் தரப்பு மனுவை விசாரணைக்கு ஏற்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

இதைக் கேட்ட தலைமை நீதிபதி கெஹர், "கர்ணன் மீதான வழக்கில் ஏற்கனவே உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்து விட்டதால் அவர் தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும்" என்று குறிப்பிட்டார்.

மேலும், "இந்த விவகாரத்தில் எவ்வித வாய்மொழி வேண்டுகோளையோ அல்லது மனுவையோ விசாரணைக்கு ஏற்க முடியாது" என்றும் தலைமை நீதிபதி குறிப்பிட்டார்.

வழக்கின் பின்னணி?

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக சி.எஸ்.கர்ணன் கடந்த ஆண்டு பணியில் இருந்தபோது, அதன் தலைமை நீதிபதியாக இருந்த எஸ்.கே.கெளல் மற்றும் சில நீதிபதிகள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தினார்.

இதைத்தொடர்ந்து கொல்கத்தா உயர் நீதிமன்றத்துக்கு கர்ணன் கடந்த ஆண்டு மார்ச் 11-ஆம் தேதி இடமாற்றம் செய்யப்பட்டார்.

படக்குறிப்பு,

இந்திய உச்சநீதிமன்றம்

அந்த உத்தரவை ஏற்க மறுத்த கர்ணன், உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு தாமாகவே இடைக்காலத் தடை விதித்தார்.

இதையடுத்து தமது செயலுக்கு வருத்தம் தெரிவித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதிய கர்ணன், பின்னர் கொல்கத்தா உயர் நீதிமன்ற பணியில் சேர்ந்தார்.

அதன் பிறகு, அங்குள்ள சில நீதிபதிகள் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகளை கர்ணன் சுமத்தினார்.

இதையடுத்து கர்ணனுக்கு நீதிமன்ற பொறுப்புக்களை வழங்கக் கூடாது என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அரசியல் சாசன அமர்வு உத்தரவிட்டது.

அந்த உத்தரவுக்கும் கர்ணன் தாமாகவே இடைக்காலத் தடை விதித்துக் கொண்டார்.

உச்சநீதிமன்றத்தில் ஆஜர்

இதையடுத்து, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி அரசியல் சாசன அமர்வு முன்பாக கர்ணன் கடந்த மார்ச் 31-ஆம் தேதி ஆஜரானார்.

அப்போது தன் மீதான குற்றச்சாட்டுகளை கர்ணன் மறுத்து, அரசியல் சாசன அமர்வில் இடம்பெற்ற நீதிபதிகள் சிலர் மீது புகார்களைத் தெரிவித்தார்.

இதையடுத்து அவரை மன நல பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று தலைமை நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு உடன்பட கர்ணன் மறுத்தார்.

மேலும், தலைமை நீதிபதி உள்ளிட்டோர் மீது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுவதாக உச்ச நீதிமன்ற வளாகத்திலேயே ஊடகங்களுக்கு பேட்டியளித்த கர்ணன் குறிப்பிட்டார்.

அவரது உத்தரவுகள் செல்லாதவை என்று அறிவித்த உச்ச நீதிமன்றம், கர்ணனின் செயலை நீதிமன்ற அவமதிப்பாகக் கருதி, அவருக்கு ஆறு மாதங்கள் சிறை தண்டனை விதித்து கடந்த மே 9-ஆம் தேதி தீர்ப்பளித்தது.

அவரை கைது செய்து சிறையில் அடைக்கவும் மேற்கு வங்க காவல்துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்திய நீதித்துறை வரலாற்றில் பணியில் உள்ள உயர் நீதிமன்ற நீதிபதிக்கு உச்ச நீதிமன்றம் சிறை தண்டனை விதிப்பது அதுவே முதல் முறையாகும்.

இந்த நிலையில், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு, தலைமறைவாக இருந்த கர்ணன், கடந்த ஜூன் 12-ஆம் தேதி தேதி பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.

கோவையில் கைது

இதற்கிடையே, மேற்குவங்க காவல்துறையினர், கர்ணனை கோவையில் கடந்த மாதம் 20-ஆம் தேதி கைது செய்தனர்.

இதைத்தொடர்ந்து, கொல்கத்தா சிறையில் கர்ணன் அடைக்கப்பட்டார்.

அவரது சார்பில், இதுவரை ஐந்து முறை ஜாமீன் கோரியும் தண்டனையை ரத்து செய்யக் கோரியும் அவரது வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆனால், அதை தொடர்ச்சியாக உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

நீதிபதி கர்ணன் தொடர்பான செய்திகள்:

இதையும் படிக்கலாம்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்