கதிராமங்கலம் பற்றி எரிவது ஏன்? 10 முக்கிய தகவல்கள்

கதிராமங்கலம் வன்முறை

தமிழகத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் கச்சா எண்ணெய் எடுக்கும் பணி தவறுதலாகப் புரிந்து கொள்ளப்பட்டதால், அங்கு பெரிய அளவில் வன்முறை வெடித்ததாகக் கூறப்படுகிறது. பிரச்சினையின் பின்னணி என்ன? 10 முக்கியத் தகவல்கள்:

1. தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலம் கிராமத்தில் தனியார் நிலத்தில் சில ஆண்டுகளாக ஓ.என்.ஜி.சி என்ற எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம் கச்சா எண்ணெய் எடுத்து வருகிறது.

2. தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் உள்ளிட்ட ஹைட்ரோ கார்பன்களை எடுப்பதற்கு, சில நிறுவனங்களுக்கு அனுமதி அளித்திருக்கும் நிலையில், அப்பகுதி மக்கள் அந்தத் திட்டத்திற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

3. இந்த ஆண்டு மே மாதம் கதிராமங்கலத்தில் உள்ள எண்ணெய்க் கிணற்றில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக ஓஎன்ஜிசி நிறுவனம் உபகரணங்களைக் கொண்டுவந்தனர். மீத்தேன் திட்டம் தொடர்பான ஆய்வுகளுக்காக அவை கொண்டுவரப்படுவதாக நினைத்த மக்கள், சாலை மறியலில் ஈடுபட்டனர்.

4. ஜூன் மாதத் துவக்கத்தில் காவல்துறை உதவியுடன் ஓ.என்.ஜி.சி. பராமரிப்புப் பணிகளைத் துவக்கியது. அந்த கிராமமே காவல்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது. எதிர்ப்புத் தெரிவித்த சுமார் 100 பேர் கைதுசெய்யப்பட்டனர்.

5. ஜூன் 30ஆம் தேதி, கதிராமங்கலம் பந்தநல்லூர் சாலையில் தனியார் நிலத்தில் போடப்பட்டிருந்த எண்ணெய்க் குழாயில் கசிவு ஏற்பட்டது. மாவட்ட ஆட்சித் தலைவர் வர வேண்டுமெனக் கோரி கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். குழாயை சரி செய்ய வந்த ஓ.என்.ஜி.சி அதிகாரிகளை உள்ளே அனுமதிக்கவில்லை என அரசும் ஓ.என்.ஜி.சியும் சொல்கின்றன.

6. கசிவு ஏற்பட்ட குழாய்க்கு அருகில் இருந்த வைக்கோல்போரில் தீ வைக்கப்பட்டது. யார் தீ வைத்தது என்பது குறித்து முரண்பாடான கருத்துக்கள் நிலவுகின்றன.

7. காவல்துறை தடியடி நடத்தி மக்களைக் கலைத்தது. பத்து பேர் கைதுசெய்யப்பட்டனர். கடந்த நான்கு நாட்களாக கதிராமங்கலத்தில் கடையடைப்புப் போராட்டம் நடைபெற்றுவருகிறது. தற்போது அமைதி நிலவுவதாக முதலமைச்சர் எடப்படாடி கே. பழனிச்சாமி தகவல்.

8. இந்த எண்ணைக் கசிவால் 15 சென்ட் நிலம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அதற்கு இழப்பீடு வழங்கப்படுமென்றும் ஓ.என்.ஜி.சி. தெரிவித்திருக்கிறது.

9. காவிரி டெல்டாவில் குறிப்பாக குத்தாலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 33 ஆழ்துளை கிணறுகளில் இருந்து தற்போது ஓ.என்.ஜி.சி. கச்சா எண்ணெய் எடுத்துவருகிறது.

10. நடப்பாண்டு காவிரிப் படுகையில் இருந்து 150 டன் கச்சா எண்ணெய் எடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக ஓ.என்.ஜி.சி. தெரிவித்துள்ளது.

இதையும் படிக்கலாம்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்