கோடநாடு எஸ்டேட்: ஐந்தாவது மர்ம மரணம்

கோடநாடு எஸ்டேட்
படக்குறிப்பு,

கோடநாடு எஸ்டேட்

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் பணியாற்றி வந்த ஊழியர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். அந்த எஸ்டேட் தொடர்பான மரணங்களில் இது ஐந்தாவது மரணமாகும்.

ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கோடநாடு எஸ்டேட், நீலகிரி மலையில் அமைந்திருக்கிறது. சுமார் 800 ஏக்கர் பரப்பளவில் பரந்துகிடக்கும் இந்த தோட்டத்தில், ஜெயலலிதா பல மாதங்கள் வந்து ஓய்வெடுப்பது வழக்கம்.

படக்குறிப்பு,

கோடநாடு எஸ்டேட்

இங்கு சுமார் 4,500 சதுர அடியில் பிரம்மாண்டமான பங்களாவும் கோடநாடு தேயிலை தொழிற்சாலையும் அமைந்துள்ளன. தோட்டம், தொழிற்சாலை ஆகியவற்றில் மொத்தமாக சுமார் 600 தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த எஸ்டேட் அலுவலகத்தில் கடந்த சில ஆண்டுகளாக கோத்தகிரி கெங்கரை கிராமத்தைச் சேர்ந்த 28 வயது இளைஞரான தினேஷ் என்பவர் வேலை பார்த்துவந்தார். இந்த நிலையில், நேற்று மதியம் சுயநினைவில்லாத நிலையில், கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு தினேஷ் கொண்டுவரப்பட்டார்.

அவரைப் பரிசோதித்ததில், தூக்கிலிட்டு இறந்துபோனது தெரியவந்தது. இதற்குப் பிறகு காவல்துறைக்குத் தகவல் அளிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்:

தினேஷ் குமாருக்கு கண்ணில் பிரச்சனைகள் இருந்தத நிலையில் அதற்காக கடந்த மாதம் அறுவை சிகிச்சை செய்துகொண்ட அவர், சிலநாட்கள் முன்பாகத்தான் பணிக்குத் திரும்பியிருந்தார்.

இந்நிலையில், தனது வீட்டில் அவர் தூக்கிட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.

கடந்த ஏப்ரல் 24ஆம் தேதியன்று, கோடநாடு பங்களாவில் காவலாளியாகப் பணிபுரிந்துவந்த ஓம் பகதூர் முகமூடி கும்பல் ஒன்றால் அடித்துக்கொல்லப்பட்டார். மற்றொரு காவலாளியான கிருஷ்ணபகதூர் படுகாயமடைந்தார்.

இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்பட்டு தேடப்பட்டுவந்த ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுனர் கனகராஜ் ஏப்ரல் 29ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் செல்லும்போது விபத்தில் சிக்கி மரணமடைந்தார்.

அதே நாள் இரவில், இந்த வழக்கில் தேடப்பட்ட கோயம்புத்தூரைச் சேர்ந்த சயான் என்பவர், தன் மனைவி மற்றும் குழந்தையுடன் காரில் சென்றுகொண்டிருந்தபோது கேரள மாநிலம் பாலக்காட்டில் ஏற்பட்ட விபத்தில் சிக்கினார். அவரது மனைவியும் குழந்தையும் இந்த விபத்தில் மரணமடைந்தனர்.

படக்குறிப்பு,

கோடநாடு எஸ்டேட்

கோடநாடு காவலாளி கொலை வழக்கில் தற்போது சயான் உட்பட பத்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் தற்போது விசாரணை நடந்துவருகிறது.

இந்நிலையில்தான், கோடநாடு எஸ்டேட்டில் பணிபுரிந்துவந்த தினேஷ் இறந்து போயுள்ளார்.

தினேஷின் மரணத்திற்கும் கோடநாடு கொலைக்கும் சம்பந்தமில்லையென காவல்துறை தெரிவித்திருக்கிறது.

இதையும் படிக்கலாம்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்