தமிழகத்தில் `நீட்' தேர்வுக்கு விலக்கு கோரிய மனு தள்ளுபடி

படத்தின் காப்புரிமை Getty Images

இந்தியாவில் மருத்துவப் படிப்புகளில் சேர கட்டாயமாக்கப்பட்டுள்ள தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு (நீட்) முறையில் இருந்து தமிழக அரசு கல்லூரிகளுக்கு நடப்பு கல்வியாண்டில் விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

தமிழகத்தைச் சேர்ந்த மாணவரின் தந்தை முருகவேல் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அதில், நீட் தேர்வு கடினமாக இருந்ததால் அதில் இருந்து இந்த ஆண்டு தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

இந்த மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ். கெஹர் தலைமையிலான அமர்வு இன்று (ஜூலை 4) பரிசீலித்தது.

படத்தின் காப்புரிமை MANPREET ROMANA/AFP/GETTY IMAGE

அப்போது நீதிபதிகள், "நீட் தேர்வு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் ஏற்கனவே ஓர் உத்தரவைப் பிறப்பித்து அதன் அடிப்படையில் மாணவர் சேர்க்கைக்கான தேர்வும், அதற்கு பிந்தைய நடைமுறைகளும் நடைபெற்று வருகின்றன" என்று கூறினர்.

ஒரே கோரிக்கையை திரும்பத் திரும்ப பல மனுதாரர்கள் முன்வைப்பதை ஏற்க முடியாது எனறு குறிப்பிட்ட நீதிபதிகள், முருகவேலின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

சிபிஎஸ்இ மாணவர்கள் மனு

`நீட்' தேர்வு அடிப்படையிலான மாணவர் சேர்க்கையில், மாநில பாடத் திட்டத்தின்படி படித்த மாணவர்களுக்கு 85 சதவீத ஒதுக்கீட்டையும், மத்திய இடைநிலைக் கல்வி வாரிய (சிபிஎஸ்இ) பாட முறைப்படி படித்த மாணவர்களுக்கு 15 சதவீத ஒதுக்கீடும் வழங்கப்படும் என்று தமிழக அரசு கடந்த மாதம் ஓர் உத்தரவைப் பிறப்பித்தது.

இந்த உத்தரவால் தங்களுக்கு தமிழக கல்லூரிகளில் வாய்ப்பு மறுக்கப்படும் எனக் கூறி சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் சிலர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்த மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்று தலைமை நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் இந்த மனு மீதான விசாரணையை வரும் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இதற்கிடையே, தமிழகத்தில் மருத்துவ மேல் படிப்புகளுக்காக மாநிலத்தில் நடத்தப்பட்ட கலந்தாய்வை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் கடந்த மே மாதம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு கடந்த மாதம் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தது.

இந்த மனு மீதான விசாரணை வியாழக்கிழமை (ஜூலை 6) நடைபெறும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

இதையும் படிக்கலாம்:

''திருமண நாளில் கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டேன்''

வடகொரியா மீண்டும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை

விபத்து: காரை நீச்சல் குளத்தில் மூழ்கடித்த 70 வயது பெண்மணி

நவீன மூளை ஸ்கானர்:

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
நவீன மூளை ஸ்கானர்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்