தமிழக திரையரங்குகள் நாளை திறக்கப்படும்: இருபது நாளில் மாநில வரி குறித்து முடிவு

  • 6 ஜூலை 2017
படத்தின் காப்புரிமை Getty Images
Image caption மூடப்பட்டுள்ள சென்னை திரையரங்கு

தமிழகத்தில் அரசின் கேளிக்கை வரியை எதிர்த்து கடந்தநான்கு நாட்களாக மூடப்பட்டிருக்கும் ஆயிரத்துக்கு மேற்பட்ட திரையரங்குகள் நாளை காலை திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாதம் முதல் தேதியில் இருந்து மத்திய அரசு கொண்டுவந்துள்ள சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி வரி) உடன் தமிழக அரசு விதித்த கேளிக்கை வரி என இரட்டை வரியை செலுத்த முடியாது என்று கூறி கடந்த திங்கட்கிழைம முதல் தமிழக திரையரங்குகள் மூடப்பட்டன.

இந் நிலையில், திரையரங்குகள் நாளை காலை மீண்டும் திறக்கப்படும் என்று அரசுடன் நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு தமிழ் திரைப்பட வர்த்தக சபை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. நிதித்துறை, வணிகவரித்துறை, உள்ளாட்சி நிர்வாகத்துறை உள்ளிட்ட துறையினருடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், வரி தொடர்பாக இறுதியான முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.

திரைப்பட துறையினர், அரசு அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் ஆகியோர் அடங்கிய எட்டு நபர்கள் கொண்ட குழு, கேளிக்கை வரியை தீர்மானிக்கும் என்று பிபிசிதமிழிடம் பேசிய தமிழ் திரைப்பட வர்த்தக சபையின் தலைவர் அபிராமி ராமநாதன் தெரிவித்தார்.

Image caption அபிராமி நாமநாதன் அறிவிப்பு

''இடைக்கால தடையாக கேளிக்கை வரியை வசூலிக்கப்போவதில்லை என்று அரசு அளித்த உறுதியை அடுத்து, திரையரங்குகள் நாளை திறக்கப்படும். இதன்காரணமாக, டிக்கெட்டுக்கான தொகையுடன், ஜி எஸ் டி வரி மட்டும் வசூலிக்கப்படும்,'' என்றார் அவர்.

அரசுடன் நடக்கும் பேச்சுவார்த்தையில் 20 நாட்களுக்குள் மாநில அரசின் கேளிக்கை வரி குறித்து ஒருமித்த கருத்து எட்டப்பட்ட பிறகு, கேளிக்கை வரியும் வசூலிக்கப்படும் என்றார் அபிராமி ராமநாதன்.

ரூ.100 கோடி இழப்பு

பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட தனியார் திரையங்கு உரிமையாளரும், திரைப்பட வர்த்தக சபையின் உறுப்பினருமான கிருஷ்ணமூர்த்தி நாளை முதல் ரூ.100க்கும் அதிகமான டிக்கெட்டுகளுக்கு 28 சதவீதம் வரியும் ரூ.100 மற்றும் அதற்கு குறைவான விலை கொண்ட டிக்கெட்டுக்கு 18 சதவீத வரி விதிக்கப்படும் என்றார்.

டிஜிட்டல் மறு பதிப்பு: இளம் ரசிகர்களுக்கு கிடைத்த வாய்ப்பா?

ஒவ்வொரு வாரமும் குறைந்தது இரண்டு தமிழ் படங்கள் வெளியாகின்றன. ஓராண்டில் சுமார் 200 படங்கள் வெளியாகின்றன என்றார் கிருஷ்ணமூர்த்தி.

கடந்த நான்கு நாட்களில் திரையரங்குகள் மூடப்பட்டிருந்ததால் சுமார் ரூ.100 கோடி திரையரங்கு உரிமையாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டது என்றும் கடந்த வாரம் வெளியாகவிருந்த படங்களை இந்த வாரம் வெளியிடவுள்ளதாகவும் தமிழ் திரைப்பட வர்த்தக சபையின் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிக்கலாம்:

கேஸினோவில் சூதாடும் ரஜினி : சுப்பிரமணியன் சுவாமி மீண்டும் கடும் தாக்கு

ரஜினிகாந்த் மீது சுப்பிரமணியன் சுவாமி ட்விட்டரில் கடும் விமர்சனம்

'ரசிகர்களை மீண்டும் அக்டோபரில் சந்திப்பேன்': ரஜினிகாந்த்

ரஜினி ஸ்டைல்: அரசியலில் எடுபடுமா?

தொடர்புடைய தலைப்புகள்