செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தை முடக்க முயற்சி? தமிழ் ஆர்வலர்கள் கொதிப்பு

  • 7 ஜூலை 2017
படத்தின் காப்புரிமை CICT

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தை திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்துடன் இணைப்பதற்கான தொடக்கப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்கு தமிழ் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து விவாத அளவில் உள்ள இந்த முன்மொழிவுக்கு, மத்திய அரசு ஒப்புதல் வழங்கியதும் இந்நிறுவனம், மத்திய பல்கலைக்கழக ஆளுகையின்கீழ் செயல்படும் என்று தெரிகிறது.

இந்த முயற்சியை ஆரம்பத்திலேயே தடுக்க வேண்டும் என்று தமிழ் ஆர்வலர்கள் குரல் கொடுத்துள்ளனர்.

இந்தியாவில் முதன் முதலாக தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து 2004-ஆம் ஆண்டில் கிடைத்தது.

அதைத்தொடர்ந்து, அடுத்தடுத்து வந்த ஆண்டுகளில் சம்ஸ்கிருதம் (2005), தெலுங்கு, கன்னடம் (2008), மலையாளம் (2013), ஒடியா (2014) ஆகிய மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டது.

அந்தந்த மாநிலங்களில் செம்மொழி மேன்மைக்காவும் வளர்ச்சிக்காகவும் பல்வேறு ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை எடுப்பதற்காக செம்மொழி ஆய்வு நிறுவனங்கள் அமைக்கப்பட்டன.

மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ் இந்த நிறுவனங்கள் செயல்பட்டாலும் அவற்றுக்கு தன்னாட்சி அந்தஸ்து வழங்கப்பட்டது.

இதனால் மொழியின் மேன்மைக்காக குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வரும் சிறந்த சாதனையாளர்களைத் தேர்வு செய்வது, ஆராய்ச்சியாளர்களை உருவாக்குவது போன்ற பணிகளை அந்த மாநிலங்களில் உள்ள செம்மொழி நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன.

மைசூரில் செயல்பட்ட நிறுவனம்

சென்னையில் 2008-ஆம் ஆண்டு முதல் சிஐசிடி செயல்படுவதற்கு முன்பாக, 2006 மார்ச் முதல் 2008 மே 18 வரை கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள இந்திய மொழிகளின் மத்திய நிறுவனத்தில், செம்மொழித் தமிழ் உயராய்வு மையம் எனும் பெயரில் செயல்பட்டு வந்தது.

தமிழகத்தில் மு.கருணாநிதி முதல்வராக இருந்தபோது அந்த நிறுவனம், தமிழ் அறிஞர்கள் மேற்கொண்ட முயற்சியால் மைசூரில் இருந்து சென்னைக்கு மாற்றப்பட்டது.

அதன் பிறகு மத்திய மனித வள மேம்பாட்டுத் துறையின் கீழ் செயல்படும் தன்னாட்சி அந்தஸ்துள்ள நிறுவனமாக சிஐசிடி தகுதிபெற்றது.

2005 முதல் 2015-ஆம் ஆண்டுக்கான இளம் அறிஞர் விருது, தொல்காப்பியர் விருது, குறள் பீட விருது என மூன்று பிரிவுகளில் தகுதி வாய்ந்த அறிஞர்கள் தேர்வு செய்யப்பட்டு, தமிழ் செம்மொழி விருதுகள் இதுவரை வழங்கப்பட்டுள்ளன.

இந்த விருதுகள் வருடந்தோறும் வழங்கப்படாமல் இரண்டு, மூன்று வருடங்களுக்கு சேர்த்து வழங்கப்படுவதாக அப்போதே பல்வேறு சர்ச்சைகள் நிலவின.

படத்தின் காப்புரிமை Huw Evans picture agency

மத்திய அரசின் யோசனை

இந்த நிலையில், நாடு முழுவதும் தற்போதுள்ள 6 மொழிகளின் செம்மொழி நிறுவனங்களை அவை அமைந்துள்ள மாநிலங்களில் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களுடன் இணைக்கும் யோசனையை மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் முன்மொழிந்துள்ளது.

அதன் அடிப்படையில் தமிழகத்தில் திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் (சென்டரல் யூனிவர்சிட்டி ஆஃப் தமிழ்நாடு) அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில் மத்திய அரசின் முன்மொழிவு குறித்து விவாதிக்கப்பட்டு, அரசின் முடிவுக்கு இசைவு தெரிவிக்கலாம் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது பற்றிய தகவலை பல்கலைக்கழக வட்டாரத்தில் உறுதிப்படுத்த முடியாத நிலையில், கூட்டத்தில் மத்திய பல்கலைக்கழக ஆளுகையின்கீழ் சிஐசிடி-ஐ கொண்டு வருவது பற்றி விவாதம் நடந்ததை மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சக உயரதிகாரிகள் பிபிசி தமிழிடம் உறுதிப்படுத்தினர்.

ஆர்வலர்கள் கவலை

மத்திய அரசின் நடவடிக்கையால், தற்போது மத்திய மனித வள மேம்பாட்டுத் துறையிடம் இருந்து ஆண்டு நிதியை நேரடியாகப் பெற்றுப் பயன்படுத்தும் அதிகாரம் பெற்றுள்ள சிஐசிடி, மத்திய பல்கலைக்கழக ஆளுகையின் கட்டுப்பாட்டுக்குள் சென்ற பிறகு நிதி ஆதாரம் மட்டுமின்றி ஒவ்வொரு முடிவுக்கும் பல்கலைக்கழகத்தின் ஒப்புதலுக்காக காத்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படும் என்று தமிழ் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இது பற்றி கருணாநிதி ஆட்சிக்காலத்தில் சிஐசிடி எண்பேராயக் குழுவில் உறுப்பினராக இருந்த முன்னாள் எம்எல்ஏவும் விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலாளருான ரவிக்குமார் பிபிசி தமிழிடம் கூறுகையில், "ஏற்கனவே சிஐசிடிக்கு முழு நேர இயக்குநரை நியமிக்காமல் அதன் செயல்பாட்டை மத்திய அரசு முடக்கி வைத்துள்ளது'', என்றார்.

படத்தின் காப்புரிமை Alamy
Image caption எடப்பாடி பழனிச்சாமி அரசு முயற்சி எடுக்குமா?

''தற்போது திருவாரூரில் உள்ள மத்திய பல்கலைக்கழத்தின் அங்கமாக சிஐசிடி-ஐ மாற்றும் முயற்சி மூலம் அதன் தன்னாட்சி அந்தஸ்தை பலவீனப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நிதி தன்னாட்சி நிலையை இழப்பது மட்டுமின்றி பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் ஒரு துறை போல சிஐசிடி மாறி விடும். எந்த நோக்கத்துக்காக சிஐசிடி கொண்டு வரப்பட்டதோ அதை தகர்த்து விடுவது போல மத்திய அரசின் செயல்பாடு உள்ளது'', என்றார் ரவிக்குமார்.

''எனவே, உடனடியாக இந்த முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும். தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைக்க கடுமையாக தமிழ் அறிஞர்களும் ஆர்வலர்களும் போராடி அந்த உரிமையை பெற்றனர், ''என்றார்.

''அதை மேற்கோள்காட்டித்தான் தென் மாநிலங்களான கேரளம், கர்நாடகம் போன்றவையும் கடைசியாக ஒடிசா மாநிலமும் அவற்றின் மாநில மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்றன.''

''அந்த வகையில், சென்னையில் செயல்படும் சிஐசிடி அந்தஸ்தையும் அதிகாரத்தையும் குறைக்கும் நடவடிக்கை மூலம் தமிழ் மொழியை குறிவைத்து பலவீனப்படுத்த மத்திய அரசு முயல்வதாக இந்த விவகாரத்தை பார்க்க வேண்டும்" என்றார் ரவிக்குமார் .

கனிமொழி கருத்து

இது குறித்து மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி பிபிசி தமிழிடம் கூறுகையில், "சிஐசிடியின் தனித்தன்மையை குலைப்பதாக இந்த முயற்சியை பார்க்கிறோம். மத்திய பல்கலைக்கழகத்தில் தமிழுக்கு சிறப்பு செய்ய மத்திய அரசு விரும்பினால் அதில் ஆய்வுக்கான தனி இருக்கையை உருவாக்கி கெளரவிக்கலாம். அதை விடுத்து, மத்திய பல்கலைக்கழக ஆளுகையின்கீழ் சிஐசிடியை கொண்டு வர முயல்வது தவறான செயல். மாநில மொழிகளை ஓரங்கட்டுவதற்கான நடவடிக்கையாக இது அமைகிறது. எனவே, இந்த முயற்சியை மத்திய அரசு தொடரக் கூடாது" என்றார்.

இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகரைத் தொடர்பு கொண்டு பேச முற்பட்டபோது, சிஐசிடி விவகாரம் தொடர்பாக மேலதிக தகவல்கள் இல்லை என்பதால் அதுபற்றி அறிந்தவுடன் பதில் அளிப்பதாக அமைச்சரின் அலுவலகம் தெரிவித்தது.

தாமதமாகும் கருணாநிதி விருது

கருணாநிதி பெயரில் கடந்த ஆறு ஆண்டுகளாக வழங்கப்படாத விருதுகளுக்கு தகுதிவாய்ந்த தமிழறிஞர்களிடம் இருந்து பரிந்துரைகளை சிஐசிடி வரவேற்றுள்ளது.

Image caption கருணாநிதி விருது மறக்கப்பட்டதா?

ஆனால், இந்த விருதுகள் எப்போது அறிவிக்கப்படும் என்பதற்கு அதன் நிர்வாகத்திடம் பதில் இல்லை.

சிஐசிடி சென்னைக்கு மாற்றப்பட்ட பிறகு, தமிழக முதல்வராக கருணாநிதி இருந்தபோது, தனது பெயரில் ஓர் அறக்கட்டளையை நிறுவி அதில் தமது சொந்த செலவில் இருந்து ரூ. 1 கோடியை வைப்பு வைத்தார்.

அந்த நிதியின் வட்டி மூலம் ஆண்டுதோறும் சிறந்த தமிழறிஞரைத் தேர்வு செய்து அவருக்கு ரூ. 10 லட்சம் ரொக்கம், ஐம்பொன்னால் செய்யப்பட்ட கருணாநிதியின் உருவச்சிலை, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் என்றும் அப்போது அறிவிக்கப்பட்டது.

2009-ஆம் ஆண்டுக்கான கலைஞர் கருணாநிதி செம்மொழி தமிழ் விருது முதன் முறையாக 2010-ஆம் ஆண்டில் கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் வழங்கப்பட்டது.

2010-ஆம் ஆண்டுக்கான விருதுக்கு தகுதிவாய்ந்தவரின் பெயர் 2011-ஆம் ஆண்டில் தமிழக முதல்வர் அலுவலகத்துக்கு ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

அந்த கோப்பு மீது இன்னும் மேல் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

ஜெயலலிதா அரசு

2011-ஆம் ஆண்டில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஜெயலலிதா தலைமையில் அதிமுக அரசு அமைந்தது.

அப்போது முதல் செம்மொழித் தமிழாய்வு நிறுவனம், கருணாநிதி பெயரிலான விருது வழங்கும் நடைமுறையைத் தவிர்த்தது. இதர மூன்று பிரிவுகளில் விருதுகளுக்குத் தகுதிவாய்ந்த அறிஞர்கள் தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா காலமான பிறகு, தற்போது எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது.

அதைத்தொடர்ந்து, கருணாநிதி செம்மொழி தமிழ் விருதுகளை ஆறு ஆண்டுகள் இடைவேளைக்கு பிறகு வழங்குவதற்கான நடைமுறையை சிஐசிடி தொடங்கியுள்ளது.

படத்தின் காப்புரிமை iStock
Image caption ஜெயலலிதா

அதன் முன்னோட்டமாக, 2011 முதல் 2016 வரை 6 ஆண்டுகளுக்கான விருதுக்கு தகுதி வாய்ந்தவர்களின் நியமன பரிந்துரைகளை வழங்குமாறு சில நாளிதழ்களில் கடந்த மாதம் சிஐசிடி விளம்பரம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, பரிந்துரைகளை அளிக்க ஜூலை 10-ஆம் தேதி கடைசி நாள் என்று சிஐசிடி அறிவித்துள்ளது.

விருதும் அரசியலும்

இது பற்றி மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி பிபிசி தமிழிடம் கூறுகையில், "அரசியலுக்காக கலைஞர் பெயரிலான விருதுகளை வழங்காமல் இதுவரை காலம் தாழ்த்தினர். நீண்ட இடைவேளைக்கு பிறகு இப்போதாவது கலைஞர் பெயரில் விருது வழங்க வேண்டும் என்ற எண்ணம் சிஐசிடிக்கு ஏற்பட்டுள்ளது நல்லது. ஆனால், அந்த விருதுகள் முறையாக வழங்கப்பட்டால்தான் அதன் நோக்கம் நிறைவேறும் என்றார்.

இது பற்றி சிஐசிடி பதிவாளர் முகிலை இராசபாண்டியன் பிபிசி தமிழிடம் கூறுகையில், "விருதுக்கு தகுதிவாய்ந்த அறிஞர்களைத் தேர்வு செய்வது, விருது வழங்குவது போன்ற நடவடிக்கைகளை தன்னிச்சையாக எடுக்க முடியாது. அதற்கான நிர்வாகக் குழு கூடிதான் முடிவு செய்யும். எனவே, கருணாநிதி விருது வழங்குவதில் ஏற்பட்ட தாமதத்துக்கும் அரசியலுக்கும் தொடர்பு இல்லை" என்றார்.

இதையும் படிக்கலாம்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்