8 வயதில் திருமணம், பருவ வயதில் வயல்வெளி; தடை பல கடந்து மருத்துவக் கல்லூரியை நோக்கி...

  • 7 ஜூலை 2017
படத்தின் காப்புரிமை SHANKAR YADAV

ரூபா யாதவுக்கு எட்டு வயதிலேயே திருமணமாகிவிட்டது. புகுந்த வீட்டினரும், கணவரும் கொடுத்த உற்சாகத்தினால் கல்வி பயின்ற அவர், தேசிய மருத்துவ பொது நுழைவுத் தேர்வில் 720க்கு 603 மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார். அகில இந்திய அளவில் 2283வது இடத்தைப் பிடித்திருக்கிறார் ரூபா யாதவ்.

இந்தியாவின், ராஜஸ்தான் மாநிலம் சோமுவில், நிவாணா கிராமத்தை சேர்ந்த ரூபா யாதவின் மூத்த சகோதரிக்கு, திருமணம் முடித்த குடும்பத்திலேயே ரூபாவுக்கும் திருமணம் நடந்தது. திருமணத்தின்போது ரூபாவின் வயது எட்டு.

ரூபாவின் குடும்பத்தினர் விவசாயத்தை தொழிலாக கொண்டவர்கள். ரூபாவின் டாக்டர் கனவுக்கு உரம் போட்டு வளர்த்தார் கணவர் ஷங்கர் யாதவ்.

படத்தின் காப்புரிமை SHANKAR YADAV

இரண்டு மூத்த சகோதரிகளைக் கொண்ட ரூபாவுக்கு சிறுவயதில் இருந்தே படிப்பின் மீது நாட்டம் அதிகமாக இருந்தது. எட்டு வயதிலேயே பால்யத் திருமணம் செய்து வைக்கப்பட்ட அவர் பத்தாம் வகுப்பு படிக்கும் வரை பிறந்த வீட்டிலேயே வளர்ந்தார். பத்தாம் வகுப்புத் தேர்வில் 84% மதிப்பெண் எடுத்தாலும் அதன்பிறகு புகுந்த வீட்டிற்கு செல்ல வேண்டிய சூழ்நிலை.

"மாமியார் வீட்டிற்கு வந்ததும், குடும்பத்தினருடன் சேர்ந்து வயலில் வேலை செய்வேன். வேலை செய்து சோர்ந்து போய்விடுவேன். விடுமுறை முடிந்து, அனைவரும் பள்ளிக்குச் செல்வதைப் பார்த்ததும் எனக்கு ஏக்கமாக

இருந்தது. படிக்கவேண்டும் என்ற ஆர்வத்தை மாமியாரிடம் சொன்னேன். எனது ஆசைக்கு யாரும் மறுப்புச் சொல்லவில்லை. மாறாக என்னை பள்ளிக்கூடத்தில் சேர்த்துவிட்டார்கள்" என்று தனது கல்விக் கனவு நனவானதைப் பற்றி சொல்கிறார் ரூபா.

கணவர் ஷங்கர் படித்த பள்ளியிலேயே ரூபாவும் சேர்க்கப்பட்டார். 12ஆம் வகுப்புத்தேர்வில் ரூபா 84% மதிப்பெண்களைப் பெற்றார்.

மாமனாரின் இறப்பு

படத்தின் காப்புரிமை SHANKAR YADAV

ஒரு நாள் விளையாட்டுத்தனமாக ரூபா கண்ணாடியை அணிந்து பார்த்தார். அதைப் பார்த்ததும், டாக்டரைப்போல் இருக்கிறாய் என்று சொன்னார்கள். டாக்டர் என்ற சொல்லுக்கு அர்த்தம் கூட தெரியாத அப்பாவி ரூபா, மாமியாரிடம்தான் டாக்டர் என்ற வார்த்தைக்கே அர்த்தம் தெரிந்துக் கொண்டாராம்.

இந்த நிலைமையில் டாக்டராகும் ஆசை ரூபாவுக்கு எப்படி தோன்றியது?

"என் மாமனார் மாரடைப்பினால் இறந்துவிட்டார். அதுதான் டாக்டராகும் கனவை எனக்குள் ஏற்படுத்தியது" என்று ரூபா சொல்கிறார்.

பிற செய்திகள்:

வறிய குடும்பத்தைச் சேர்ந்த ரூபா, பணிரெண்டாம் வகுப்பில் கல்விக்கட்டணம் செலுத்த முடியாத நிலைமையில் இருந்தார். பள்ளி நிர்வாகம் புத்திசாலி மாணவியான ரூபாவுக்கு கல்விக் கட்டணத்தில் இருந்து விலக்கு அளித்தது.

பள்ளிப் படிப்பை முடித்த ரூபா பி.எஸ்சி பட்டப்படிப்பில் சேர்ந்தார். அதோடு, மருத்துவ நுழைவுத் தேர்வுக்காகவும் விண்ணப்பித்தார். எந்தவித பயிற்சியுமே எடுக்காத ரூபா 423 மதிப்பெண்கள் எடுத்தார்.

படத்தின் காப்புரிமை SHANKAR YADAV

"எந்தவித பயிற்சியும் பெறாத நிலையில் நான் அதிக மதிப்பெண் பெற்றது அனைவருக்கும் மகிழ்ச்சியை கொடுத்தது. மருத்துவ படிப்பில் சேரவேண்டுமானால் பயிற்சி எடுத்துக் கொள்வது அவசியம் என்று அக்கம்பக்கத்தினர் அறிவுரை கூறினார்கள். குடும்பத்தினர் அனைவரும் அதனை ஒப்புக்கொண்டு, பயிற்சிக்காக கோட்டா அனுப்பி வைத்தார்கள்" என்கிறார் ரூபா யாதவ்.

"அடுத்த ஆண்டில் அதாவது 2016இல் 506 மதிப்பெண் எடுத்தேன். மகாராஷ்டிர மாநிலத்தில் ஒரு கல்லூரியில் இடம் கிடைத்தது. என்னால் அங்கு சென்று சேரமுடியவில்லை. ஆனால் சென்ற ஆண்டைவிட அதிக மதிப்பெண் பெற்றதால், மீண்டும் தொடர்ந்து தேர்வு எழுதி அதிக மதிப்பெண் பெறவேண்டும் என குடும்பத்தினர் ஊக்கப்படுத்தினார்கள்."

"மேலும் ஒரு வருடம் என்னைப் படிக்க வைக்க என் கணவரும், அவரது சகோதரரும் அதிகமாக உழைக்க வேண்டியிருந்தது. விவசாய வேலைகளை செய்த பிறகு, சந்தைக்கு பொருட்களை கொண்டு செல்லும் வேலைகளையும் செய்வார்கள்."

பிற செய்திகள்:

ரூபாவின் கணவரும், மைத்துனரும் ஆட்டோ ஓட்டுவதாக சில ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியிருந்தன. ஆனால் அது உண்மையல்ல. அவர்கள் காய்கறிகளை சந்தைக்குக் கொண்டு செல்லும் பிக்கப் வண்டிகளை ஓட்டுகிறார்கள்.

குழந்தைத் திருமணம் பற்றி, பால்ய விவாகம் என்ற வழக்கத்திற்கு இலக்கான ரூபா என்ன சொல்கிறார்?

குழந்தைகளுக்கு சிறு வயதில் திருமணம் செய்யக்கூடாது, பெற்றோர் அவர்களை படிக்க வைக்கவேண்டும்.

படத்தின் காப்புரிமை SHANKAR YADAV

2017 இல் வெற்றி

இந்த ஆண்டு நடைபெற்ற தேசிய மருத்துவ பொது நுழைவுத் தேர்வில் 720க்கு 603 மதிப்பெண் பெற்று, அகில இந்திய அளவில் 2283 இடத்தை பெற்றார் ரூபா.

"என்னுடைய கனவு உண்மையிலேயே நனவாகிவிட்டது. ரூபாவை டாக்டராக்க வேண்டும் என்று நாங்கள் ஆசைப்பட்டோம், அதற்காக நிறைய உழைத்தோம். ரூபா நன்றாக படித்து எங்களுக்கு பெருமை தேடித் தந்துவிட்டாள். நல்ல மதிப்பெண் எடுத்திருப்பதால், ஜெய்ப்பூரிலேயே ஒரு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துவிடும்" என்று மகிழ்ச்சியை பகிர்ந்துக் கொள்கிறார் ஷங்கர் யாதவ்.

கல்விக் கட்டணத்துக்கு என்ன வழி?

"நாங்கள் இன்னும் உழைப்போம். அதிகம் உழைத்து, பணம் சேர்ப்போம். கடன் வாங்கியும் மருத்துவம் படிக்க வைப்போம். எவ்வளவு கஷ்டம் வந்தாலும் ரூபாவை மருத்துவராக்குவோம்."

பால்ய விவாகம் என்ற சமூக கொடுமைக்கு இலக்காகி, விவசாயத் தொழிலிலும் ஈடுபட்ட ரூபாவின் மருத்துவ நுழைவுத் தேர்வுக் கனவு நனவானது போலவே, மருத்துவ படிப்புக் கனவும் நிச்சயம் கனவாகும், அதுவும் ஒட்டுமொத்த குடும்பமும் பக்கபலமாக இருக்கும்போது இந்த கனவு மெய்ப்படும்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்