கருத்தடை அறுவை சிகிச்சை: தேவையா இந்த வேறுபாடு?

  • 8 ஜூலை 2017

தமிழகத்தில் பெண்களைவிட ஆண்களுக்கு அதிக ஊக்கத்தொகை கொடுத்தாலும், குறைவான எண்ணிக்கையில் மட்டுமே ஆண்கள் கருத்தடை அறுவை சிகிச்சை செய்துகொள்கின்றனர் என சமீபத்தில் தமிழக சட்டமன்றத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை SONNY TUMBELAKA/AFP/Getty Images

அதிக ஊக்கத்தொகை அளித்தாலும், ஏன் அதிக எண்ணிக்கையில் ஆண்கள் அறுவைசிகிச்சை செய்துகொள்ள முன்வருவதில்லை என்று கேள்வியை எழுப்பியவர் சட்டப்பேரவையில் பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் பூங்கோதை.

ஊக்கத்தொகையில் பாகுபாடு ஏன்?

தொழில்முறை மருத்துவரான பூங்கோதை 2006ல் திமுக ஆட்சியின்போது சமூகநலத்துறை அமைச்சராக பணியாற்றியவர்.

''கருத்தடை அறுவை சிகிச்சை செய்துகொள்வதில் பெண்களை விட ஆண்களுக்கு எந்தவித சிரமமும் இருப்பதில்லை. ஆண்களின் தயக்கத்தை போக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். பெண்களுக்கு குறைவாகவும், ஆண்களுக்கு அதிகமாகவும் ஊக்கதொகை வழங்கப்படும் நிலைமாற வேண்டும்,'' என்று சட்டமன்றத்தில் கூறியதாக பிபிசி தமிழிடம் அவர் தெரிவித்தார்.

குழந்தை பிறப்பைத் தடுக்க அறுவை சிகிச்சை செய்துகொள்வது, கருத்தடை மாத்திரைகளை எடுத்துக்கொள்வது என பலவிதங்களில் பெண்கள் பல நடைமுறைகளைப் பின்பற்றுகிறார்கள்.

கடந்த நான்கு ஆண்டுகளில் சுமார் ஏழு லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் கருத்தடை செய்துள்ளனர். அதே காலகட்டத்தில் வெறும் 4 ஆயிரத்து 800 ஆண்கள் அறுவை சிகிச்சை செய்துகொண்டனர், சுமார் 91 ஆயிரம் பேர் ஆணுறையை பயன்படுத்தியுள்ளனர் என்று சுகாதாரத் துறையின் நான்கு ஆண்டுகள் வெளியான திட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என்று பூங்கோதை தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

கருத்தடை அறுவை சிகிச்சை செய்துகொள்ளும் ஆண்களுக்கு ரூ.1,100 ஊக்கத்தொகை அளிக்கப்படுகின்றது. பெண்களுக்கு, வறுமைக் கோட்டிற்கு கீழ் இருந்தால், ரூ. 600 என்றும், பொருளாதாரத்தில் உயர்ந்திருந்தால் ரூ.250 அளிக்கப்டுகின்றது என்றும் சுகாதாரத் துறையின் ஆவணங்கள் கூறுகின்றன.

தயக்கம் ஏன்?

ஆண்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்துகொள்வதில் இருக்கும் தயக்கங்களைப் பற்றிக் கேட்டபோது, ''பாலியல் வாழ்க்கையில் தொய்வு ஏற்படும் என்ற எண்ணம், ஆண்மையை இழந்துவிடுவோம் என்ற பயம், சமூகத்தில் தனக்கு அந்தஸ்து குறைந்துவிடும், உடல் சோர்வு ஏற்படும் போன்ற தவறான கருத்துகள் ஆண்களை தடுக்கின்றன,'' என்கிறார் மருத்துவர் ஜெயராணி காமராஜ்.

பெண்களை விட ஆண்களுக்கான அறுவை சிகிச்சை எளிதாகச் செய்யமுடியும், எந்த விளைவையும் ஏற்படுத்தாத, அறுவை சிகிச்சை செய்த இரண்டு மணிநேரத்தில் ஆண்கள் வீட்டுக்குத் திரும்ப முடியும் என்கிறார் மருத்துவர் ஜெயராணி.

படத்தின் காப்புரிமை SAJJAD HUSSAIN/AFP/Getty Images

இந்தியாவில் கருத்தடை செய்துகொள்ளும் ஒவ்வொரு 100 நபர்களில் நான்கு பேர் மட்டுமே ஆண்களாக இருக்கின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.

ஊக்கத்தொகை குறைவாக பெண்களுக்கு அளிக்கப்படுவது மற்றும் ஆண்களுக்கு தயக்கங்களை போக்குவது குறித்து எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணனிடம் கேட்டோம்.

''ஆண்களை ஊக்குவிப்பதற்காகத்தான் பெண்களை விட அதிக ஊக்கத்தொகை அவர்களுக்கு வழங்கப்படுகிறது,'' என்றார் ராதாகிருஷ்ணன்.

பிற செய்திகள்

''தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவின் பல மாநிலங்களிலும் இதுதான் நிலை. சில சமயங்களில் பெண் தனது கணவருக்கு கருத்தடை அறுவை சிகிச்சை வேண்டாம், தானே செய்துகொள்வதாக கூறும் நிலையும் உள்ளது,'' என்றார்.

ஆண்களின் தயக்கங்களைப் போக்க, விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்படுகின்றன என்றார் அவர்.

''ஆண்கள், பெண்கள் என இருதரப்பினருக்கு இடையிலும் ஆண்களுக்கு கருத்தடை சிகிச்சை செய்துகொள்வதில் இருக்கும் தயக்கத்தை போக்கிக்கொண்டால் மட்டுமே இந்த நிலைமாறும்,'' என்றார் ராதாகிருஷ்ணன்.

படத்தின் காப்புரிமை RAVEENDRAN/AFP/Getty Images

முதியோர்களின் மாநிலமாகிவிடுமா தமிழகம்?

சட்டமன்ற உறுப்பினர் பூங்கோதை, மருத்துவர் ஜெயராணி மற்றும் சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் போன்றோர் தெரிவித்த கருத்துகளில் இருந்து முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் கருத்தடை அறுவை சிகிச்சை விவகாரத்தை அணுகிறார் மக்கள்தொகை ஆய்வு நிபுணர் இருதயராஜ்.

கேரளாவிலுள்ள வளர்ச்சி ஆராய்ச்சி மையத்தில் பேராசிரியராக உள்ள இருதயராஜ் தமிழகம் மற்றும் கேரளாவில் மக்கள்தொகை தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டவர்.

தற்போது தமிழகத்தில் கருத்தடை அறுவை சிகிச்சைக்கு ஊக்கத்தொகை ஆண், பெண் என இருவருக்கும் அளிக்கத்தேவையில்லை என்கிறார்.

''குடும்பக்கட்டுபாடு முறைகளை மிகவும் வெற்றிகரமாக தமிழகத்தில் செயல்படுத்திய காரணத்தால், மற்ற மாநிலங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது, தமிழகத்தில் பெரும்பாலான குடும்பங்களில் ஒரு குழந்தை உள்ள நிலைஏற்பட்டுள்ளது. இது தொடர்ந்தால் வருங்கலத்தில் வயதானவர்கள் அதிகமாகவும், இளைஞர்கள் குறைவாகவும் இருக்கும் மாநிலமாக தமிழகம் மாறிவிடும் நிலை உள்ளது,'' என்றார்.

சீனாவில் 'ஒற்றை குழந்தை' திட்டம் தற்போது பின்வாங்கப்பட்டு, இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டதை சுட்டிக்காட்டிய அவர், ''தமிழகத்தில் குடும்பக்கட்டுபாட்டிற்கு ஊக்கத்தொகை அளிப்பதை நிறுத்தி, அதற்கென ஒதுக்கப்படும் நிதியை பிற சுகாதார திட்டங்களுக்கு அளிக்கலாம்,'' என்கிறார் இருதயராஜ்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்