ஆளுனர் கிரண்பேடிக்கு எதிராக புதுச்சேரியில் கட்சிகள் முழு அடைப்புப் போராட்டம்

  • 8 ஜூலை 2017
படத்தின் காப்புரிமை Anbumathi Pondicherry

புதுச்சேரி ஆளுனர் கிரண்பேடிக்கு எதிராக தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நடத்தும் முழு அடைப்புப் போராட்டத்தால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது.

புதுச்சேரியில் சமீபத்தில் மூன்று நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக பா.ஜ.கவின் மாநிலத் தலைவர் சாமிநாதன், பொருளாளர் சங்கர், தனியார் பள்ளிக்கூடம் ஒன்றின் தாளாளர் செல்வகணபதி ஆகியோரை சமீபத்தில் ஆளுநர் கிரண்பேடி பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

இந்த விவகாரம் புதுச்சேரி அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இது தவிர, ஆளுனர் கிரண்பேடி புதுச்சேரியின் நிர்வாகத்தில் தலையிடுவதாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியும் குற்றம்சாட்டிவந்தார்.

இந்நிலையில், ஆளுநர் கிரண்பேடியை புதுச்சேரியிலிருந்து திரும்பப் பெறக்கோரி, இன்று அங்கு முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றுவருகிறது. இந்த போராட்டத்திற்கு ஆளும் காங்கிரஸ் கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Anbumathi Pondicherry

இந்தப் போராட்டத்தின் காரணமாக மாநிலம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான ஆட்டோக்கள், பேருந்துகள் இயங்கவில்லை. திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. தனியார் பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Anbumathi Pondicherry

காலையில் அரசுப் பேருந்துகள் இயங்கிய நிலையில், வெங்கடசுப்பா ரெட்டி சிலையருகில் ஒரு அரசுப் பேருந்து மீது கல்வீசித் தாக்கப்பட்டதில் அதன் முன் பகுதி கண்ணாடி முழுவதும் நொறுங்கியது. இதனால், அரசுப் பேருந்துகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

படத்தின் காப்புரிமை Anbumathi Pondicherry

ஆளுனர் கிரண்பேடியை திரும்பப் பெறக்கோரி, இளைஞர் காங்கிரஸ், தி.மு.க. கட்சியினர் ஆளுனர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்கள் ஆளுனர் மாளிகையை நோக்கி நகரத் துவங்கியப்போது காவல்துறை தடுத்தி நிறுத்தி கைதுசெய்தது. நெல்லித்தோப்பு பகுதியில் கிரண் பேடி மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் உருவ பொம்மைகளை எரித்து தி.மு.க, காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

படத்தின் காப்புரிமை Anbumathi Pondicherry

இந்தப் போராட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கிரண்பேடி, நியமன எம்எல்ஏக்கள் சட்டப்படியே நியமிக்கப்பட்டனர் என்று கூறியதோடு கடமையைச் செய்ததற்காக முழு அடைப்புப் போராட்டம் நடத்தியதை இதுவரை பார்த்ததில்லை என்று கூறினார். நிர்வாகத்தை கவனிக்காமல், சரியாகப் பணியாற்றுபவர்களுக்கு எதிராகப் போராட்டம் நடத்துவது சரியா என்றும் கேள்வியெழுப்பினார்.

படத்தின் காப்புரிமை Anbumathi Pondicherry

இதற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த, முதலமைச்சர் நாராயணசாமி சபாநாயகர் நியமிக்கப்பட்ட பிறகு அவர்தான் பதவிப்பிரமாணம் செய்ய வேண்டுமென்றும் ஆளுனர் செய்தது சட்டவிரோதமென்றும் கூறினார். மேலும், இந்த முழு அடைப்புப் போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி ஆதரவளிப்பதாகவும் ஆட்சி ஆதரவளிக்கவில்லையென்றும் கூறினார்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்