மோனோ ரயில் திட்டம்: தமிழக அரசு மீண்டும் அறிவிப்பு

  • 8 ஜூலை 2017
படத்தின் காப்புரிமை SAJJAD HUSSAIN
Image caption மும்பை மோனோ ரயில் திட்டம்

சென்னையில் மோனோ ரயில் திட்டத்தை 43.48 கி.மீ. தூரத்திற்கு செயல்படுத்தப்போவதாக தமிழக அரசு மீண்டும் தெரிவித்துள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் வெளியிடப்பட்ட போக்குவரத்துத் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் இந்தத் தகவல் இடம்பெற்றுள்ளது.

சென்னை பூந்தமல்லியிலிருந்து கத்திபாராவரையில் முதல் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் இதில் இணைப்பாக போரூரிலிருந்து வட பழனிக்கு ஒரு தடம் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் ஒட்டுமொத்தமாக 20.68 கி.மீ. தூரத்திற்கு ரயில் செல்லும். இந்தத் திட்டத்திற்கு 3,267 கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இரண்டாவது திட்டம் 3,135.63 கோடி ரூபாய் செலவில் வண்டலூர் முதல் வேளச்சேரி வரை 22.8 கி.மீ. தூரத்திற்கு செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2011 ஆம் தமிழக முதலமைச்சராக ஜெயலலிதா பதவியேற்றவுடன், சென்னையில் 111 கி.மீ. தூரத்திற்கு மோனோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படுமென்று அறிவித்தார். ஆனால், அதற்குப் பிறகு இந்தத் திட்டத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

படத்தின் காப்புரிமை Getty Images

பிறகு, 2014ஆம் ஆண்டு மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் இதற்கு கொள்கை அளவில் அனுமதி அளித்து.

நகரில் ஒருங்கிணைந்த போக்குவரத்துத் திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் பயணிகளை ஈர்க்க வேண்டும், புறநகர் ரயில் போக்குவரத்து உட்பட அனைத்துப் பொதுப் போக்குவரத்துத் திட்டங்களையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த திட்டத்தை உருவாக்க வேண்டும், உரிய சட்டத்தின் மூலம் மெட்ரோபாலிடன் போக்குவரத்து ஆணையம் என்ற அமைப்பை உருவாக்கி, நகர்ப்புற போக்குவரத்துத் திட்டங்களை உருவாக்கி செயல்படுத்த வேண்டும், தமிழக அரசும் மத்திய அரசும் இணைந்து மேற்பார்வை அமைப்பு ஒன்றை உருவாக்கும் - ஆகிய நிபந்தனைகளுடன் இந்த மோனோ ரயில் திட்டத்திற்கு மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தத் திட்டத்திற்கான செலவு முழுவதையும் மாநில அரசு, மாநில அரசு ஏஜென்சிகள், இதில் பங்கேற்கும் தனியார் நிறுவனங்களே ஏற்க வேண்டும் என்றும் இதற்கு மத்திய அரசு எந்த நிதியுதவியும் அளிக்காது என்றும் அந்த அனுமதியில் கூறப்பட்டது.

இந்த அனுமதிக்குப் பிறகும்கூட பெரிதாக பணிகள் ஏதும் நடக்காத நிலையில், தற்போது தமிழக அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சென்னையில் ஏற்கனவே சுமார் 17000 கோடி ரூபாய் செலவில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

சென்னையில் தற்போது 27 சதவீதம் பேர் மட்டுமே பொதுப்போக்குவரத்து வசதியைப் பயன்படுத்திவருகின்றனர். இதனை 2026ஆம் ஆண்டில் 46 சதவீதமாக உயர்த்த வேண்டுமென தமிழக அரசு இலக்கு நிர்ணயித்திருக்கிறது.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்