தனியார் பால் நிறுவனங்கள் குறித்து கருத்து தெரிவிக்க அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு இடைக்கால தடை

  • 10 ஜூலை 2017

தனியார் பால் நிறுவனங்கள் குறித்து கருத்து தெரிவிக்க தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

மூன்று தனியார் பால் நிறுவனங்கள் தரப்பில் தொடுக்கப்பட்ட வழக்கின் மீதான விசாரணையில் இன்று திங்கட்கிழமை இந்த உத்தரவு வெளியாகியுள்ளது.

சென்னையை சேர்ந்த ஹட்சன் டெய்லி, திருச்சியைச் சேர்ந்த விஜய் பால் மற்றும் ஹைதராபாத்தைச் சேர்ந்த டோட்லா டெய்ரி ஆகிய பால் நிறுவனங்கள் தரப்பில் தொடுக்கப்பட்டிருந்த வழக்குகள் தொடர்பான விசாரணை, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயனை கொண்ட அமர்வு முன்பாக நடைபெற்றது.

அப்போது உரிய ஆதாரத்தை வெளியிடாமல் குற்றஞ்சாட்டுவது தவறென கூறிய நீதிபதி கார்த்திகேயன், இந்த விவகாரம் தொடர்பாக, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஜுலை 27ஆம் தேதிக்குள் பதிலளிக்க கூறி உத்தரவிட்டார்.

அதேசமயம் ஜூலை 27ஆம் தேதி வரை தனியார் பால் நிறுவனங்கள் மீது குற்றச்சாட்டுகள் தெரிவிக்கும் கருத்துக்களை வெளியிடவும், அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு அந்த அமர்வு தடை விதித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்:

தனியார் பால் உற்பத்தியாளர்கள், பால் கெட்டுப் போகாமல் பதப்படுத்தி வைப்பதற்காக உடலுக்குக் கேடு விளைவிக்கும் ரசாயனத்தை பயன்படுத்துவதாக, கடந்த மே மாதம் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதை தொடர்ந்து தமிழகத்தில் விற்கப்படும் நெஸ்லே மற்றும் சில தனியார் நிறுவனங்களின் பால் பவுடரில் கலப்படம் இருப்பதாக கண்டறியப்பட்டதாகவும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றம் சாட்டிய நிலையில், நெஸ்லே நிறுவனம் அதனைக் கடுமையாக மறுத்தது.

குற்றச்சாட்டுக்கள் உண்மையாக இருந்தால் அமைச்சராக பொறுப்பில் இருக்கும் ராஜேந்திர பாலாஜி, உடனடியாக அந்த நிறுவனங்கள் மீது கலப்பட தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்காமல் தொடர்ந்து பத்திரிகையாளர் சந்திப்புகளில் இது போன்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பது ஏன் என பால் முகவர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் தலைவரான பொன்னுசாமி தொடர்ந்து கேள்வியெழுப்பி வருகிறார்.

இந்நிலையில்தான் தனியார் பால் நிறுவனங்கள் குறித்து வெளிப்படையாக கருத்துக்கூற அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

பிற செய்திகள்:

லண்டன் மார்க்கெட் பகுதியில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ

பருத்தித்துறை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: இருவர் பணி இடைநீக்கம்

அமெரிக்காவிற்குச் செல்லும் மேலும் இரண்டு விமான சேவைகளில் லேப்டாப் தடை நீக்கம்

கேமராவில் பதிவான புலிக்குட்டிகளின் செல்ஃபி

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்