செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தை மாற்றுவது குறித்து தகவல் வரவில்லை: பழனிச்சாமி

  • 11 ஜூலை 2017

செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தை திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்துடன் இணைப்பது குறித்து தமிழக அரசுக்கு இதுவரை எந்தத் தகவலும் வரவில்லையென அந்த அமைப்பின் தலைவரும் தமிழக முதல்வருமான எடப்பாடி கே. பழனிச்சாமி தெரிவித்திருக்கிறார்.

தமிழக சட்டப்பேரவையில் இந்த விவகாரம் தொடர்பாக தி.மு.கவைச் சேர்ந்த பள்ளிக்கல்வித் துறையின் முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வியெழுப்பினார்.

இதனைத் தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டுமென்றும் தெரிவித்தார்.

இதற்கு முதலமைச்சர் பழனிச்சாமி பதிலளித்தபோது, இது பற்றி மத்திய அரசிடமிருந்து தங்களுக்கு எந்தத் தகவலும் வரவில்லையெனக் கூறினார்.

"செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் சென்னை தரமணியில் உள்ள தமிழ்நாடு அரசு சாலைப் போக்குவரத்து நிறுவனத்தில் இயங்கிவருகிறது. பெரும்பாக்கத்தில் 17 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு அந்த நிறுவனத்திற்கான கட்டுமானப் பணிகள் நடந்துவருகின்றன.

ஆனால், அந்த நிறுவனத்தை மாற்றுவது குறித்து ஆட்சிக் குழு தலைவர் என்ற முறையில் எனக்கோ, தமிழ்நாடு அரசுக்கோ எந்தத் தகவலும் வரவில்லை" என்று பழனிச்சாமி தெரிவித்தார்.

அப்படித் தகவல் வரும்பட்சத்தில் தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்குமென்றும் முதலமைச்சர் கூறினார்.

தற்போது சென்னையிலிருந்து செயல்பட்டுவரும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தை (சிஐசிடி) திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்துடன் இணைப்பதற்கான தொடக்கப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வரும் செய்தி கடந்த சில நாட்களுக்கு முன்பாக வெளியானது.

இந்தியாவில் முதன் முதலாக தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து 2004ஆம் ஆண்டில் கிடைத்தது.

சென்னையில் 2008ஆம் ஆண்டு முதல் சிஐசிடி செயல்படுவதற்கு முன்பாக, 2006 மார்ச் முதல் 2008 மே 18 வரை கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள இந்திய மொழிகளின் மத்திய நிறுவனத்தில், செம்மொழித் தமிழ் உயராய்வு மையம் எனும் பெயரில் செயல்பட்டு வந்தது.

தமிழகத்தில் மு.கருணாநிதி முதல்வராக இருந்தபோது அந்த நிறுவனம், தமிழ் அறிஞர்கள் மேற்கொண்ட முயற்சியால் மைசூரில் இருந்து சென்னைக்கு மாற்றப்பட்டது.

பிற செய்திகள்:

`எங்கள் பஸ்ஸின் முன்னால் வந்து சரமாரியாக சுட்டார்கள் '

நடிகை மீது பாலியல் தாக்குதல்: மலையாள நடிகர் திலீப் கைது

உலகின் குட்டி நாட்டின் மக்கள் தொகை 11 பேர்!

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்