கால்நடை விற்பனைக் கட்டுப்பாடு சட்டத்துக்கு உச்சநீதிமன்றம் தடை

இறைச்சிக்காக, கால்நடைகளை விற்பனை செய்வதை முறைப்படுத்தும் மத்திய அரசின் சட்டத்துக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

குழப்பம் தரும் விதிகள்

பட மூலாதாரம், Getty Images

அதாவது, மத்திய அரசின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து, சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை பிறப்பித்த உத்தரவை உச்சநீதிமன்றம் நீடித்துள்ளது.

கடந்த மே மாதம் பிறப்பித்த புதிய சட்டம், கட்டுப்படுத்தப்படாத, முறையற்ற கால்நடை வர்த்தகத்தைக் கட்டுப்படுத்துவதற்காகத்தான் மேற்கொள்ளப்பட்டது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மாடுகள் மட்டுமன்றி, எருமை, ஒட்டகம் ஆகியவற்றை விற்கவும் அரசு தடை விதித்தது. கடந்த மே மாதம் 27-ம் தேதி மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் புதிய விலங்குகள் வதை தடுப்புச் சட்ட (கால்நடைச் சந்தை முறைப்படுத்துதல்) விதிகள் 2017-ஐ அறிவித்தது.

ஆனால் அந்தச் சட்டத்துக்கு நாடு முழுவதும் பெருமளவில் எதிர்ப்பு எழுந்தது.

இதற்கிடையே, அந்த விதிகளின் சில அம்சங்கள் உணர்வுப்பூர்வமான அம்சங்கள் தொடர்புடையது என்பதால், அந்த விதிகளில் சில திருத்தங்களைச் செய்வது குறித்து ஆராய்வதாக மத்திய அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதுதொடர்பாக, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சக செயலர் ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

பட மூலாதாரம், Getty Images

சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஏற்கெனவே, புதிய விதிகளை அமல்படுத்த இடைக்காலத் தடை விதித்துள்ளதாகவும், அந்தத் தடையை நாடு முழுவதும் விரிவுபடுத்துவதற்கு தங்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை என்றும் மத்திய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

அதையடுத்து, தலைமை நீதிபதி ஜே.எஸ். கெஹர் தலைமையிலான அமர்வு, மத்திய அரசின் புதிய உத்தரவை அமல்படுத்த தடை விதித்தது.

எனினும், விதிகளில் சில திருத்தங்களைச் செய்வதென்பது, அதை முழுமையாக விலக்கிக் கொள்ளப்படுவதாக அர்த்தம் இல்லை என்று கூடுதல் சொலிசிடர் ஜெனரல் பி.எஸ். நரசிம்மா தெரிவித்தார்.

இதற்கிடையில், மாநில அரசுகள் தங்களது எல்லைகளுக்குள்பட்ட பகுதிகளில் கால்நடைச் சந்தைகள் விதிமுறைகளின்படி உள்ளனவா என்பதைக் கண்டறியலாம் என்று மத்திய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்ட யோசனையை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை.

பட மூலாதாரம், Getty Images

மத்திய அரசு அனைத்தையும் இறுதி செய்து, திருத்தப்பட்ட விதிமுறைகளை மீண்டும் வெளியிடும் வரை, விதிகளை அமல்படுத்துவதை நிறுத்தி வைப்பதில் முறையான அணுகுமுறை தேவை என்று நீதிபதிகள் சுட்டிக்காட்டினார்கள்.

இதையும் படிக்கலாம்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :