பல்கலைக் கழகங்களில் மகளிரியல் மையங்களுக்கு நிதியை நிறுத்த யுஜிசி முடிவு?

  • 12 ஜூலை 2017
வளையல் கரங்கள் படத்தின் காப்புரிமை Getty Images

பல்வேறு கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் பல்கலைக்கழக மானியக் குழுவின் நிதியுதவியுன் செயல்பட்டுவரும் மையங்களுக்கான நிதி குறித்து பரிசீலிக்கப்போவதாக தெரிவிக்கப்பட்டிருப்பதால், Women Studies எனப்படும் மகளிரியல் மையங்கள் உள்பட பல்வேறு மையங்கள் மூடப்படும் அச்சுறுத்தலை எதிர்நோக்குகின்றன.

மகளிரியல் மையங்களை எடுத்துக்கொண்டால் இந்தியாவில் யுசிஜி நிதியுதவியடன் 159 மையங்கள் இயங்கிவருகின்றன. இந்திய மாநிலங்களிலேயே தமிழ்நாட்டிலும் கேரளத்திலும்தான் இந்த மையங்களின் எண்ணிக்கை மிக அதிகம். தமிழ்நாட்டில் மட்டும் 21 மையங்கள் இப்படி இயங்கி வருகின்றன.

பல்கலைக்கழக மானியக் குழுவின் ஏழாவது திட்ட காலத்திலிருந்தே பெண்கள் தொடர்பான ஆய்வுகளை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் இந்த மையங்கள் துவங்கப்பட்டன. முதலில் பாலினச் சமத்துவம் தொடர்பான ஆய்வுகள் என்ற இலக்கில் துவங்கிய இந்த மையங்கள் தற்போது கலை, கலாசார செயல்பாடுகளில் பெண்களின் பங்களிப்பு, பெண்களை தலைவர்களாக உருவாக்குதல், பல்வேறு விவகாரங்களில் பெண்ணிய நோக்கிலான பார்வை ஆகியவற்றை முன்வைத்து இயங்கிவருகின்றன.

படத்தின் காப்புரிமை Getty Images

பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் இயங்கிவரும் இந்த மையங்களில், பெண்ணியம் தொடர்பான பாடங்கள் கற்றுத் தரப்படுவதோடு ஆய்வுகளும் ஊக்குவிக்கப்படுகின்றன. தவிர, பல்வேறு பயிற்சிப் பட்டறைகள், கருத்தரங்குகளையும் இந்த மையங்கள் நடத்துகின்றன. புத்தகங்களைப் பதிப்பிப்பது, ஆவணப்படுத்துவது, பெண் சார்ந்த விஷயங்களுக்கு ஆதரவாகச் செயல்படுவது, பிற அமைப்புகளுடன் இணைந்து செயல்படுவது ஆகியவற்றிலும் இந்த மையங்கள் ஈடுபடுகின்றன.

இந்த மையங்கள் பல்கலைக்கழங்களிலும் கல்லூரிகளிலும் செயல்பட்டுவந்தாலும், அவை நேரடியாக பல்கலைக்கழகங்களின் நிதியிலிருந்தோ கல்லூரிகளின் நிதியிலிருந்தோ செயல்படுவதில்லை. நேரடியாக, பல்கலைக்கழக மானியக் குழுவின் நிதியுதவியிலிருந்தே செயல்படுகின்றன.

மாறியது முடிவு

இந்த ஆண்டின் மார்ச் மாதத்தில், யுசிஜியின் 12வது ஐந்தாண்டுத் திட்டகாலம் முடிவடையும் நிலையில், இந்த மையங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்து எந்தவித அறிவிப்பையும் யுசிஜி வெளியிடாமல் இருந்தது. பிறகு, மார்ச் 29ஆம் தேதி யுசிஜி வெளியிட்ட அறிவிப்பில் 2017-18ஆம் நிதியாண்டிற்கு மட்டும் இந்த மையங்களுக்கான நிதியுதவி தொடருமென்றும் அவற்றின் பணிகள் மதிப்பீடு செய்யப்படுமென்றும் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், திடீரென கடந்த ஜூன் 9ஆம் தேதி ஓர் அறிவிப்பை யுசிஜி வெளியிட்டிருக்கிறது. அதன்படி, யுசிஜி அளித்த ஒருவருட ஒப்புதல் என்பது, ஆறு மாதங்களாக குறைக்கப்பட்டிருப்பதாகவும் அதன் பிறகு இந்தத் திட்டங்கள் பரிசீலனை செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. ஆகவே, வரும் செப்டம்பர் 30 தேதிக்குப் பிறகு, இந்த மையங்களின் நிலை கேள்விக்குரியாகியிருக்கிறது.

இந்த மையங்கள் மட்டுமல்லாது, யுசிஜியின் 12வது திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் பல திட்டங்களும் இதே போன்ற நெருக்கடியை எதிர்கொண்டிருக்கின்றன.

படத்தின் காப்புரிமை Getty Images

"பல்கலைக்கழக மானியக் குழு ஒவ்வொரு வருடமும் இதுபோன்ற நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்தக்கூடாது. இந்த அமைப்புகள், நிதி ரீதியாகவும் பாடத்திட்டங்கள், ஆய்வுகள் தொடர்பாகவும் சுதந்திரமாக இயங்குவதற்கு யுசிஜி வழிவகுக்க வேண்டும்" என்கிறார் இந்த மையங்கள் குறித்து ஆய்வுகளை மேற்கொண்ட, சென்னை ஐஐடியின் துணைப் பேராசிரியரான கல்பனா.

புதிய யோசனை

மகளிரியல் ஆய்வு மையங்களை, 'கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் தனியாக இயங்கும் மையங்கள்' என்ற நிலையிலிருந்து மாற்றி, அவற்றைப் பல்கலைக்கழகங்களின் ஒரு பகுதியாக அதாவது ஒரு துறையாக மாற்ற வேண்டும் என்ற யோசனையை முன்வைக்கிறார் சென்னை வளர்ச்சி ஆய்வு நிறுவனத்தின் பேராசிரியரான எஸ். ஆனந்தி. சென்னைப் பல்கலைக்கழகத்தில் தற்போது மகளிரியல் ஆய்வு பல்கலைக்கழகத்தின் துறையாகவே செயல்பட்டுவருகிறது.

இந்தியா முழுவதும் இந்த மையங்கள் எப்படி இயங்குகின்றன என்ற ஆய்வை சில வருடங்களுக்கு முன்பாக பேராசிரியர் எஸ். ஆனந்தியும் பேராசிரியர் பத்மினியும் மேற்கொண்டனர். "அதில் கிடைத்த முடிவுகள் திருப்திகரமாக இல்லை என்றாலும் இந்த மையங்கள் தொடர வேண்டும்" என்கிறார் எஸ். ஆனந்தி.

ஒவ்வொரு கட்டத்திலும் இவற்றை மதிப்பீடு செய்வது, அவற்றின் செயல்பாடுகளில் வெளிப்படைத் தன்மையைக் கொண்டுவர வேண்டும் என்கிறார் ஆனந்தி.

தமிழ்நாட்டில் தற்போது மதுரை காமராசர் பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம், மனோன்மனீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம், அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், அவிநாசிலிங்கம் பல்கலைக்கழகம், காந்திகிராமபல்கலைக்கழகம், ஸ்டெல்லா மேரி கல்லூரி, எத்திராஜ் கல்லூரி, எஸ்ஐஇடி, மதுரை தியாகராசர் கல்லூரி, டோக் பெருமாட்டி கல்லூரி, அருளானந்தர் கல்லூரி என 21 இடங்களில் இந்த மையங்கள் செயல்பட்டுவருகின்றன. பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழகத்தின் துறையாகவும் தனியாக மையமாகவும் இவை செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

படத்தின் காப்புரிமை Getty Images

"மகளிரியல் மையங்கள் மட்டுமல்ல தன் நிதியுதவியில் செயல்படுத்தப்படும் மையங்கள் அனத்தையுமே மாநில அரசுகள் ஏற்கவேண்டுமென யுசிஜி கருதுகிறது. ஆகவே, அவற்றை பல்கலைக்கழகங்களின் ஒரு பகுதியாக மாற்ற வேண்டும். இந்த மையங்கள் தொடர்ந்து செயல்பட வேண்டும்" என்கிறார் மகளிரியல் மையங்களின் பிராந்திய சங்கத்தின் செயலரான பேராசிரியர் மணிமேகலை.

இந்த மையங்கள் வெகுதாரம் கடந்து வந்திருக்கின்றன; தற்போது முதுகலை, ஆய்வுப் படிப்பு போன்ற படிப்புகளில் பல மாணவர்கள் படித்து வருகிறார்கள். இவர்கள் நிலை கேள்விக்குறியாகக்கூடாது என்கிறார் மணிமேகலை.

"தற்போது யுசிஜி செப்டம்பருக்குப் பிறகு ஆய்வு மேற்கொள்ளப்போவதாகத்தான் சொல்லியிருக்கிறது. இப்போதே நிதியை நிறுத்திவிட்டதாக அஞ்சத் தேவையில்லை. ஆனால், பல பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் மையத்தின் தலைவர் போன்ற பணிகள், வேறு துறையிலிருப்பவர்களால் நிரப்பப்பட்டாலும், அதற்குக் கீழுள்ள ஆசிரியர், பணியாளர்கள் நேரடியாக யுசிஜி நிதியையே நம்பியிருக்கின்றனர். யுசிஜி நிதி நிறுத்தப்பட்டால் அவர்களது பணி நிலை கேள்விக்குரியாகும். ஆய்வு மாணவர்களின் நிலையும் கேள்விக்குறியாகும்" என்கிறார் அவர்.

இந்த மையங்களின் செயல்பாடுகளை விரிவாக்கம் செய்யவேண்டும், அதன் எல்லைகளை விரிவடையச் செய்ய வேண்டும் என்கிறார் கல்பனா. குறிப்பாக பெண்ணிய இயக்கங்களின் வரலாறு, அவற்றின் போராட்டம் குறித்த ஆய்வுகள், பாடங்கள் இடம்பெற வேண்டும் என்கிறார் அவர்.

ஆனால், தற்போது மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு பயிற்சியளிக்கச் செய்வது போன்றவற்றில் இந்த மையங்கள் ஈடுபடுத்தப்படுகின்றன. இதற்காக இந்த மையங்கள் தோற்றுவிக்கப்படவில்லை என்கிறார் கல்பனா.

இதையும் படிக்கலாம்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்