காஷ்மீரில் பாஜக கொடியை உயர்த்திப் பிடிக்கும் முஸ்லிம் பெண்

  • 13 ஜூலை 2017
ஹீனா பட்

காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் பாரதிய ஜனதா கட்சியில் ஒரு முஸ்லிம் பெண் முகம் தென்படுகிறது, அவர் ஹீனா பட். சில காலத்திற்கு முன் இதுபோன்ற ஒரு விஷயத்தை கற்பனைகூட செய்து பார்த்திருக்கமுடியாது.

ஆனால், இன்று இது நிஜம். காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் பாரதிய ஜனதா கட்சிக்கு மூன்று லட்சம் செயல்படும் உறுப்பினர்கள் இருப்பதாக, கூறும் ஹீனா பட், "இன்று லால் செளக்கில் பாரதிய ஜனதா கட்சியின் கொடி பறக்கிறது, நாங்கள் பேரணிகள் நடத்தும்போது கட்சியின் கொடியை ஏற்றுகிறோம்".

காஷ்மீர் பள்ளத்தாக்கில் முஸ்லிம் சமுதாயத்தில் பாரதிய ஜனதா கட்சியின் துணிவுமிக்க தலைவர் ஹீனா. 2015இல் ஸ்ரீநகரில் இருந்து சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட மூன்று முஸ்லிம் பெண்களில் இவரும் ஒருவர்.

ஸ்ரீநகரில் கட்சி 14 வேட்பாளர்களை களம் இறக்கியது. ஹீனா சொல்கிறார், "எங்கள் தோல்வியிலும் ஒரு வெற்றி மறைந்திருந்தது, ஏனெனில் இங்கு ஆட்சியில் இருந்தபோதும்கூட காங்கிரஸ் கட்சி ஸ்ரீநகரில் 14 வேட்பாளர்களை நிறுத்தியதில்லை".

படத்தின் காப்புரிமை Getty Images

ஆனால் இங்கு வசிக்கும் பொதுமக்கள் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக இருக்கின்றனர்.

ஹீனாவின் தந்தை மொஹம்மத் ஷஃபி பட், சட்டமன்ற உறுப்பினராகவும், மாநில அமைச்சரகவும் பதவி வகித்தவர். ஆனால் அவர் தேசிய மாநாட்டுக் கட்சியைச் சேர்ந்தவர்.

ஹீனா ஏன் பாரதிய ஜனதாவி்ல் இணைந்தார்?

அரசியலில் ஈடுபட தனது தந்தைதான் ஊக்கமளித்தார் என்றாலும், பாரதிய ஜனதா கட்சியின் தேசியவாத சித்தாந்தங்களே தன்னை அந்தக் கட்சியில் இணையத் தூண்டியது என்கிறார் ஹீனா.

ஆனால் இந்த முடிவை எடுப்பது சுலபமானதாக இல்லை. "ஒரு பெண் அரசியலில் நுழைவது ஒரு பிரச்சனை என்றால், பள்ளத்தாக்குப் பகுதியில் விரும்பத்தகாத கட்சியாக பார்க்கப்பட்ட பாரதிய ஜனதா கட்சியில் சேர்வது பல கேள்விகளை எழுப்பியது".

எது எப்படியிருந்தாலும், தான் இந்த பிரச்சனையை சுலபமாக எதிர்கொண்டு வெற்றிபெற்றதாக ஹீனா கூறுகிறார்.

மாநில முதலமைச்சர் மெஹபூபா முஃப்தியும் ஒரு பெண். ஆனால், பள்ளத்தாக்குப் பகுதியில் பரம்பரை முஸ்லிம் சமுதாயத்தில் பெண்கள் அரசியலுக்கு வருவது மிகவும் சிரமமானதே.

படத்தின் காப்புரிமை Getty Images

`மண்ணின் மகள்`

"பள்ளத்தாக்கில் வசிக்கும் முஸ்லிம் பெண்கள் அரசியலுக்கு வரவேண்டும், குடும்பத்தை உருவாக்கும் பெண்களால் நாட்டையும் உருவாக்க முடியும்" என்று சொல்கிறார் ஹீனா.

34 வயதாகும் ஹீனா, ஸ்ரீநகரில் மக்கள் அதிகமாக வாழும் பகுதியில் வசிக்கிறார். அவரது வீட்டில் இருந்து பிரிவினைவாத ஹூரியத் மாநாடு கட்சியின் அலுவலகம் அருகிலேயே அமைந்திருக்கிறது.

காஷ்மீரில் நிலவும் வன்முறை மற்றும் முஸ்லிம் இளைஞர்களின் மரணங்கள் பற்றி பொதுமக்களுக்கு அவர் எந்த கோணத்தில் புரியவைக்கிறார்?

"நானும் காஷ்மீரை சேர்ந்தவள்தான். இங்கேயே பிறந்து வளர்ந்தவள். இங்கு வசிக்கும் சகோதரர்களின் இறப்பு எனக்கும் வலியை தருகிறது".

ஆனால், வன்முறையால் உயிரிழப்பது காஷ்மீரை சேர்ந்தவர்கள் மட்டுமல்ல, பாதுகாப்பு படையினரும்தான். இரு தரப்பினரின் மரணமும் எங்களுக்கு வேதனை ஏற்படுத்துகிறது.

அமைதிக்கான நம்பிக்கை

அரசியல் நோக்கங்களுக்காக, இளைஞர்களை கல்வீச பயன்படுத்துகிறார்கள். ஹூரியத் தலைவர்களே இதற்கு காரணம் என்று குற்றம்சாட்டும் ஹீனா, மனித உரிமைகள் மீறப்படுவதையும் ஒப்புக்கொள்கிறார்.

மாநிலத்தில் பி.டி.பியுடன் ஹீனாவின் கட்சி கூட்டணியில் இருக்கிறது. இரு கட்சிகளுக்கும் இடையே பல பிரச்சனைகள் நிலவுவதால், குளிர்ச்சியான காஷ்மீரில், அரசியல் மட்டும் எப்போதும் சூடாகவே இருப்பதாக கூறப்படுகிறது.

சித்தாந்தங்களின் அடிப்படையில் இரு கட்சிகளும் ஒன்றுடன் மற்றொன்று மாறுபட்டிருப்பதால், கருத்து வேறுபாடு ஏற்படுவது இயல்பானதுதான் என்று சுட்டிக்காட்டும் ஹீனா, எந்தவொரு கூட்டாளிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்படுவது இயற்கையானதுதானே என்று எதிர்கேள்வி எழுப்புகிறார்.

தான் சார்ந்திருக்கும் பாரதிய ஜனதா கட்சி, காஷ்மீரின் நிலையை சீராக்கும் அனைத்துவிதமான முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளதாக கூறும் ஹீனா, "காஷ்மீரில் விரைவில் அமைதி ஏற்படும்" என்ற நம்பிக்கையை வெளியிட்டார்.

காஷ்மீர்: தொடரும் மோதலும் தணியாத பதற்றமும்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
காஷ்மீர்: தொடரும் மோதலும் தணியாத பதற்றமும்

பிற செய்திகள்

''எங்கள் மீது கற்களை வீசுவதும் மனிதத்தன்மையற்றதுதான்'' : காஷ்மீர் சி.ஆர்.பி.எஃப் படையினர்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
''எங்கள் மீது கற்களை வீசுவதும் மனிதத்தன்மையற்றதுதான்''

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :