மலையாள நடிகர் திலீப்பிற்கு 2 நாட்கள் போலீஸ் காவல்

  • 12 ஜூலை 2017

மலையாள நடிகை ஒருவர் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்ட வழக்கில், கைதுசெய்யப்பட்ட நடிகர் திலீப்பை இரண்டு நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க கொச்சி அங்கமாலி நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் 19ஆம் தேதியன்று மலையாள முன்னணி நடிகை ஒருவர் கேரளாவின் நெடும்பசேரியில் உள்ள பரம்பயத்திற்கு அருகில் சென்றுகொண்டிருந்தபோது, அவரது காரில் வலுக்கட்டாயமாக ஏறிய நபர்கள், நடிகையின் மீது பாலியல் தாக்குதலில் ஈடுபட்டனர். இதனை அவர்கள் படம் பிடித்ததாகவும் கூறப்பட்டது.

இந்த விவகாரம் குறித்து வழக்குப் பதிவு செய்த கேரள காவல்துறை, சுனில் குமார் என்ற பல்ஸர் சுனிலை முதலில் கைது செய்தது. மேலும் நடிகையின் கார் ஓட்டுநர் மார்ட்டின், கோயம்புத்தூரைச் சேர்ந்த வாடிவால் சலீம் மற்றும் பிரதீப் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

நடிகை மீது பாலியல் தாக்குதல்: மலையாள நடிகர் திலீப் கைது

இவர்களிடமிருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில் மலையாள திரைப்பட உலகின் முக்கிய நடிகர்களில் ஒருவரான திலீப்பிடமும் இயக்குனர் நாதிர்ஷா ஆகியோரிடமும் காவல்துறை விசாரணை நடத்தியது. திலீப்பின் மனைவி காவ்யா மாதவனுக்குச் சொந்தமான கடையிலும் சோதனை நடத்தப்பட்டது.

இந்த நிலையில், திங்கட்கிழமையன்று காலையில் விசாரணைக்கு அழைக்கப்பட்ட நடிகர் திலீப், மாலையில் கைதுசெய்யப்பட்டதாக காவல்துறை அறிவித்தது.

அதற்குப் பிறகு, கொச்சி அங்கமாலி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட திலீப்பை 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அவர் அலுவா சிறையில் அடைக்கப்பட்டார்.

செவ்வாய்க்கிழமையன்று சிறைவாசலில் ஏராளமானவர்கள் கூடி, திலீப்பிற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். திலீப்பிற்கு சொந்தமான ஹோட்டல்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.

இதையடுத்து அவரது திரைப்படம் ஓடும் திரையரங்குகள், அவரது ஹோட்டல்கள், வீடு ஆகியவற்றுக்கு காவல்துறையின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தனக்கு ஜாமீன் வழங்கும்படி கோரி, திலீப் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

திலீப்பை மூன்று நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதியளிக்க வேண்டுமெனக் கோரி காவல்துறையினரும் மனு தாக்கல் செய்தனர். திலீப்பிற்கு ஜாமீன் அளிக்க மறுத்த நீதிபதி, இரண்டு நாட்கள் அவரை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளித்துள்ளார்.

திலீப் கைதுசெய்யப்பட்ட பிறகு, மலையாளர் நடிகர் சங்கமான 'அம்மா'வின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் பொருளாளர் பதவியிலிருந்தும் அவர் நீக்கப்பட்டுள்ளார்.

நடிகை மீது பாலியல் தாக்குதல் கேரள முதல்வருக்கு நடிகர் சங்கம் கடிதம்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
தென்னிந்திய நடிகை மீது பாலியல் தாக்குதல்: விஷால் கண்டனம்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :