கொடைக்கானலில் திருமணம் செய்கிறார் இரோம் ஷர்மிளா

கொடைக்கானலில் திருமணம் செய்கிறார் இரோம் ஷர்மிளா

மணிப்பூர் மாநிலத்தில் சிறப்பு ஆயுதப் படைச் சட்டத்தை எதிர்த்துப் போராடி வந்த இரோம் ஷர்மிளா, தனது தோழரை மணப்பதற்காக திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள சார் - பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார்.

மணிப்பூர் மாநில சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு தற்போது திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள அப்சர்வேட்டரி பகுதியில் வசித்துவரும் இரோம் ஷர்மிளா, தனது நீண்ட நாள் தோழரான அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த டெஸ்மாண்ட் அந்தோணி ஹட்டின்ஹோவைத் திருமணம் செய்து கொள்வதற்காக கொடைக்கானல் சார் - பதிவாளர் அலுவலகத்தில் மனு செய்திருக்கிறார்.

புதன்கிழமையன்று காலை பத்து மணியளவில் டெஸ்மாண்டுடன் சார் - பதிவாளர் அலுவலகத்திற்கு வந்த இரோம் ஷர்மிளா, இதற்கான விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்தார்.

டேஸ்மாண்ட் வெளிநாட்டவர் என்பதால் 30 நாட்கள் காத்திருக்க வேண்டியிருக்கும். இந்த 30 நாட்களுக்குள் யாரும் ஆட்சேபணை தெரிவிக்காதபட்சத்தில், இருவரும் திருமணம் செய்துகொள்ள முடியும்.

இவர்களது திருமணம் தொடர்பான அறிவிப்பு தற்போது சார் - பதிவாளர் அலுவலக அறிவிப்புப் பலகையில் ஒட்டப்பட்டுள்ளது.

"30 நாட்களுக்குள் யாரும் இதற்கு ஆட்சேபணை தெரிவிக்காத நிலையில், அதன் பிறகு அவர்கள் திருமணத்தை பதிவுசெய்துகொள்ள முடியும்" என கொடைக்கானல் சார் - பதிவாளர் ராஜேஷ் பிபிசியிடம் தெரிவித்தார்.

கடந்த 2000வது ஆண்டு நவம்பர் மாதம் நடந்த மாலோம் படுகொலைகளையடுத்து, மணிப்பூர் சிறப்பு ஆயுதப் படைச் சட்டத்தை விலக்கிக்கொள்ள வேண்டுமெனக்கோரி உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கினார் ஷர்மிளா.

16 ஆண்டுகளாக இந்தப் போராட்டத்தை நடத்திவந்தவர், 2016ஆம் ஆண்டு ஜூலை 26ஆம் தேதியன்று தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக்கொண்டார்.

அதற்குப் பிறகு, மக்கள் மீளெழுச்சி மற்றும் நீதிக்கான கூட்டணி என்ற கட்சியைத் துவங்கி மணிப்பூர் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டார் ஷர்மிளா. ஆனால், அதில் அவர் தோல்வியடைந்தார்.

இதற்குப் பிறகு அரசியலில் இருந்து விலகப்போவதாக அறிவித்த இரோம் ஷர்மிளா, தற்போது கொடைக்கானலில் தங்கியுள்ளார். சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு திருமணம் செய்துகொள்ளப் போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :