''சேரி பிஹேவியர் என்ற வார்த்தையை நான் காயத்ரிக்கு சொல்லிக்கொடுக்கவில்லை'': கமல்

படத்தின் காப்புரிமை Getty Images

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் எனப்படும் ரியாலிட்டி நிகழ்ச்சி தொடர்பாக எழுப்பட்ட சர்ச்சைகள் குறித்து அந்த நிகழ்ச்சியைத் தொகுத்துவழங்கும் நடிகர் கமல்ஹாசன் விளக்கமளித்துள்ளார்.

கடந்த சில வாரங்களாக பிக் பாஸ் நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் நிலையில், சமூக ஊடகங்களில் இந்த நிகழ்ச்சி குறித்து கடுமையான வாத பிரதிவாதங்கள் செய்யப்பட்டுவருகின்றன.

இந்நிலையில், இந்த நிகழ்ச்சி கலாசார சீரழிவை ஏற்படுத்துவதாகக்கூறி இந்து மக்கள் கட்சியினர் சென்னையில் இன்று காவல்துறையில் புகார் அளித்தனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றிருப்பவர்களையும் நிகழ்ச்சித் தொகுப்பாளர் கமல்ஹாசனையும் கைது செய்ய வேண்டுமென அவர்கள் தங்கள் புகார் மனுவில் கூறியிருந்தனர்.

இந்த நிகழச்சியில் பங்கேற்ற காயத்ரி ரகுராம், மற்றொருவரின் செயல்பாட்டைப் பற்றிக் குறிப்பிடும்போது, "சேரி பிஹேவியர்" என்று கூறியதும் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென மதுரையில் ஓர் அமைப்பு புகார் கூறியது.

இந்த சர்ச்சைகள் குறித்து விளக்கமளிப்பதற்காக இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் நடிகர் கமல்ஹாசன். அவரைக் கைது செய்ய வேண்டுமெனப் புகார் அளிக்கப்பட்டிருப்பது குறித்து கேட்டபோது, "சட்டத்தின் மீது தனக்கு நம்பிக்கை இருக்கிறது என்றும். சட்டத்திற்கு நியாயம் உண்டு. சட்டம் என்னைப் பாதுகாக்கும். நீதி மீது நம்பிக்கை இருக்கிறது" என்று கூறினார்.

பிக் பாஸ் நிகழ்ச்சி இந்தியாவில் பல்வேறு தொலைக்காட்சிகளில் 11 வருடங்களாக நடைபெற்று வருவதாகவும் இந்தி தெரிந்திருந்தால் அது தெரிந்திருக்கும் என்றும் கூறினார். கன்னடத்தில்கூட இந்நிகழ்ச்சி வந்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

முத்தக்காட்சியில் நடித்தபோது

கெட்டுப்போனதா கலாசாரம்?

மேலும் சட்டம் என் கையில் படத்தில் தான் முத்தக் காட்சியில் நடித்தபோது கெட்டுப்போகாத கலாசாரம் தற்போது கெட்டுப்போகாது என்றும் அவர் குறிப்பிட்டார். இந்து மக்கள் கட்சியினர் எதிர்ப்புத் தெரிவிப்பதற்கு தன்னுடைய கறுப்புச் சட்டை காரணமாக இருக்கலாம் என்றும் கமல்ஹாசன் கூறினார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption மகள் அக்ஷராவுடன் கமல்ஹாசன் (கோப்புப்படம்)

இம்மாதிரியான பிக் பாஸ் நிகழ்ச்சி சமூகத்திற்கு தேவையா என கேள்வி எழுப்பப்பட்டபோது, கிரிக்கெட் எந்த அளவுக்கு தேவையோ அதே அளவுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியும் தேவை என்று குறிப்பிட்டார் கமல்.

சேரி பிஹேவியர் என்ற வார்த்தையை தான் காயத்ரி ரகுராமிற்கு சொல்லிக்கொடுத்து, அவர் சொல்லியிருந்தால் தான் அதற்கு பதில் கூறியிருப்பேன் என்றும் கமல் தெரிவித்தார்.

சைவமும் மதமும்

"நீங்கள் சைவமாக இருந்துகொண்டு, இப்படி கோபப்படலாமா?" என்று நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய நடிகர் கஞ்சா கறுப்புவிடம் கமல் கேட்டது குறித்தும் கேள்வியெழுப்பப்பட்டது.

"சைவம் என்பது இங்கு மட்டும்தான் மதத்தோடு இணைத்துப் பார்க்கப்படுகிறது" என்று கூறினார் கமல்.

ஆமிர் கான் தொகுத்து வழங்கிய சத்யமேவ ஜயதே போன்ற ஒரு நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்கியிருக்கலாமே என்று கேட்டபோது, தன் வாழ்வில் அதைக் கடைப்பிடிப்பதாகவும் தன் நற்பணி மன்றங்கள் மூலம் அதைச் செய்து வருவதாகவும் கமல் கூறினார்.

சமூகத்தில் ஜாதி என்று குறிப்பிட்டுப் பேசுவதை நீக்க முடியுமா என்று கேள்வியெழுப்பிய கமல், அப்படி இருக்கும் நிலையில்தான், நிகழ்ச்சிகளில் ஒவ்வாத அம்சங்களில் நீக்க வேண்டுமென நாம் கோருவதாகக் கூறினார்.

விளம்பரம், சினிமா, தொலைக்காட்சி நிகழ்ச்சி என எதைச் செய்தாலும் அதை தான் விருப்பத்துடனேயே செய்வதாகவும் பணம் வாங்காமல் அதைச் செய்கிறேன் என்று சொன்னால் அரசியல்வாதிகள் பேசுவதைப் போலாகிவிடும் என்றும் கூறினார்.

இதையும் படிக்கலாம்:

''ஜி.எஸ்.டி வரிவிதிப்பால் தமிழ் திரைப்படத்துறை சின்னாபின்னமாகும்'' : கமல் ஹாசன்

திரைத்துறையும் திராவிடக் கட்சிகளின் ஆட்சியும்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :