ஆதார் விவகாரம்: அடுத்த வாரம் அரசியல் சாசன அமர்வு விசாரணை

  • 12 ஜூலை 2017
படத்தின் காப்புரிமை MANSI THAPLIYAL

இந்தியாவில் அரசின் பல்வேறு சலுகைகளை அனுபவிக்க கட்டாயமாக்கப்பட்டுள்ள ஆதார் எண்ணுக்கான பதிவு முறையால் தனி நபர் உரிமைகள் பறிக்கப்படுவதாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு வரும் 18,19 ஆகிய நாள்களில் விசாரிக்கும் என்று உச்ச நீதிமன்றம் இன்று தெரிவித்தது.

இது தொடர்பாக மூன்று மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

வழக்கறிஞர்கள் கோரிக்கை

இந்த நிலையில், இந்திய அரசின் தலைமை சட்ட ஆலோசகர் (அட்டர்னி ஜெனரல்) கே.கே.வேணுகோபால், மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர் ஷியாம் திவான் ஆகியோர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கெஹர் தலைமையிலான அமர்வு முன்பு இன்று (புதன்கிழமை) ஆஜராகி, "மூன்று மனுக்கள் மீதான விசாரணையை அவசர விவகாரமாகக் கருதி, விரைவில் நடத்த வேண்டும்" என கேட்டுக்கொண்டனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தின் எட்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்து தனி நபர் உரிமை என்பது அடிப்படை உரிமையாகாது என்று கூறியுள்ளது என்று கே.கே.வேணுகோபால் கூறினார்.

வழக்கறிஞர் ஷியாம் திவான் வாதிடும்போது, "இந்த மனுக்கள் மீது கடந்த வாரம் நீதிபதி செலமேஸ்வர் கருத்து தெரிவிக்கையில், ஆதார் விவகாரத்தில் ஒட்டுமொத்தமாக முடிவெடுக்க வேண்டும் என்பதால் ஒன்பது நீதிபதிகள் அமர்வு இந்த மனுக்களை விசாரிக்கலாம் என கூறியுள்ளார்" என்றார்.

அப்போது அரசின் தலைமை சட்ட ஆலோசகர் கே.கே.வேணுகோபாலும், "இந்த மனுக்களை முதலில் எவ்வளவு நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரிக்கப் போகிறது என்பதை முடிவு செய்ய வேண்டும்" என்று யோசனை தெரிவித்தார்.

தலைமை நீதிபதி கருத்து

இதையடுத்து தலைமை நீதிபதி ஜே.எஸ்.கெஹர், "ஆதார் எண்ணுக்கான பதிவு முறை அமலால் தனி நபர் உரிமைகள் பறிக்கப்படுகிறதா என்பதை ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு மாற்ற வேண்டுமா அல்லது ஏற்கனவே இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் அமர்வை விட அதிக நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரிக்க வேண்டுமா என்பது பற்றி ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும்" என்று குறிப்பிட்டார்.

இதையடுத்து கே.கே.வேணுகோபால், "இது தொடர்பாக விரிவாக விவாதிக்க குறைந்தது இரு வாரங்களாவது தேவை" என்று கேட்டுக்கொண்டார்.

எனினும் தலைமை நீதிபதி, "வரும் 18,19 ஆகிய நாள்களில் இந்த மனுக்கள் தொடர்பாக ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும்" என்று குறிப்பிட்டார்.

பின்னணி

ஆதார் பெறுவதற்காக விழி, கைவிரல், உள்ளங்கை ஆகியவற்றின் பதிவுகள் பெறப்படுவதால், தங்களின் தனி நபர் உரிமைகள் பறிக்கப்படுவதாகக் கூறி, தேசிய குழந்தைகள் உரிமைகள் கவுன்சில் முன்னாள் தலைவர் சாந்தா சின்ஹா, கேரள முன்னாள் அமைச்சர் பினாய் விஸ்வம், ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி வோம்பொ்கெரே ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் சில மாதங்களுக்கு முன்பு மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

ஆதார் பதிவு கட்டாயமாக்கப்படாது என்று தொடக்கத்தில் அறிவித்து விட்டு, அரசு மானியம், ஓய்வூதியம், வங்கி மற்றும் காப்பீட்டு சேவைகள், வரி, கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதார சேவைகள் உள்ளிட்டவைகளில் அரசின் சலுகைகளைப் பெற ஆதார் எண் கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்து வருவதால் ஆதார் எண்ணைப் பெறும் நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர் என்று அவர்கள் மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

பொதுமக்களின் கண் கருவிழி, பயோ மெட்ரிக் முறையில் கைரேகை பதிவுகள் பெறப்படுவதால் தனி நபர் உரிமைகள் பறிக்கப்படுவதாகக் கூறி மனுதாரர்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்களில் முறையிட்டனர்.

இடைக்கால உத்தரவு

இதையடுத்து, வருமான வரி செலுத்துவதற்காக பான் (நிரந்தர கணக்கு எண்) எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது நீங்கலாக, மற்ற விஷயங்களுக்கு ஆதார் எண்ணை இணைப்பது பற்றி அரசியல் சாசன அமர்வு முடிவு செய்யும்வரை அதை கட்டாயமாக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் கடந்த ஜூன் 9-ஆம் தேதி இடைக்காலமாக உத்தரவிட்டது.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளபோதே, அரசின் சலுகைகளை பெற ஆதார் எண் பெறுவதை மத்திய அரசு கட்டாயமாக்கி வருவதற்கு ஆட்சேபம் தெரிவித்து மனுதாரர்கள் உச்ச நீதி்மன்றத்தில் முறையிட்டனர்.

இதில் சில மனுக்களை கடந்த மாதம் விசாரித்த நீதிபதி செலமேஸ்வர் அடங்கிய மூன்று நீதிபதிகள் அமர்வு, ஆதார் விவகாரத்தில் ஏற்கெனவே ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்துள்ளதால் அந்த விவகாரத்தை அதே அரசியல் சாசன அமர்வு விசாரிப்பதே சரியாக இருக்கும் என்பது தனது தனிப்பட்ட கருத்து என்றும் இதில் தலைமை நீதிபதியின் முடிவே இறுதியானது என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து தலைமை நீதிபதி முன்னிலையில் ஆஜராகி இந்த மனுக்கள் குறித்து அரசு மற்றும் மனுதாரர்கள் தரப்பில் புதன்கிழமை வலியுறுத்தப்பட்டது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்