லஞ்சம் வாங்கிக் கொண்டு சசிகலாவுக்கு சிறையில் கூடுதல் வசதிகளா? டிஜிபி மீது டிஐஜி புகார்

  • 13 ஜூலை 2017
படத்தின் காப்புரிமை Getty Images

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு, கர்நாடக மாநிலத்தில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு சிறையில் கூடுதல் வசதிகளைச் செய்து தருவதற்காக டிஜிபி சத்யநாராயணா இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக சிறைத் துறை டிஐஜி ரூபா குற்றம்சாட்டியிருக்கிறார். ஆனால், சத்யநாராயணா தை மறுத்திருக்கிறார்.

அ.தி.மு.க. அம்மா அணியின் பொதுச் செயலாளர் சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் நான்காண்டு சிறை தண்டனை பெற்று பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், கர்நாடக மாநில சிறைத் துறையின் டிஐஜியாக ரூபா என்பவர் நியமிக்கப்பட்டார். கடந்த பத்தாம் தேதியன்று பரப்பன அக்ரஹார சிறைக்குச் சென்று ஆய்வு நடத்திய ரூபா, அந்த ஆய்வின் அடிப்படையில் சிறைத் துறை டிஜிபி சத்யநாராரயணாவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பினார்.

அந்தக் கடிதத்தில், 'சசிகலாவுக்கு தனியாக சிறப்பு சமையல் அறை வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அவர் விரும்பும் உணவை செய்துகொடுக்க சில கைதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்காக நீங்கள் 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதில் தாங்கள் பணம் பெறவில்லையென்றால், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறியிருந்தார். இதே அறிக்கையை ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்கும் அனுப்பியிருப்பதாக ரூபா தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் வியாழக்கிழமையன்று செய்தியாளர்களைச் சந்தித்த டிஜிபி சத்யநாராயணா இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்தார். 'ஆரம்பத்திலிருந்தே சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்துதரப்பட வேண்டும் என்று கோரப்பட்டாலும் அவை மறுக்கப்பட்டிருக்கின்றன. மற்ற கைதிகளைப் போலத்தான் அவர் பெண்கள் சிறையில் இருந்துவருகிறார். சிறையில் என்ன நடந்தாலும் என் கவனத்திர்கு வந்துவிடும். அங்கு அதிகாரிகள் இருக்கிறார்கள். தன்னார்வ அமைப்புகள் இருக்கின்றன. அப்படி ஏதும் நடக்கவில்லை' என்று சத்ய நாராயணா கூறினார்.

Image caption கர்நாடக சிறைத்துறை டிஜிபி சத்யநாராயணா

"சிறையில் ஏதாவது தவறுகள் இருந்தால் சரிசெய்யப்படும். அப்படிதான் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நடந்து வருகிறது. ரூபா எழுதிய கடிதம் நிர்வாகம் சம்பந்தப்பட்டது. அதன் மீது எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து தெரிவிக்க முடியாது. கடந்த பதினைந்து நாட்களில் இரு முறை தன்னை நேரில் சந்தித்தப்போது இது குறித்து தன்னிடம் ரூபா ஏன் எதுவும் தெரிவிக்கவில்லை" எனவும் சத்யநாராயணா கேள்வியெழுப்பினார்.

"இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியதாக கூறப்படும் குற்றச்சாட்டு உண்மையல்ல. நான் விசாரணைக்குத் தயாராகவே இருக்கிறேன். உண்மையில் சசிகலாவைப் பார்க்கவரும் அ.தி.மு.க. எம்.பிகள், தமிழக அமைச்சர்களுக்குக்கூட உரிய விதிமுறைகளின் அடிப்படையிலேயே அனுமதி அளிக்கப்படுகிறது. நான் யாரிடமிருந்தும் ஒரு பைசாகூட வாங்கியதில்லை. சிறையிலிருந்து ஒரு பிஸ்கட்டைக்கூட தொட்டதில்லை" என்றும் சத்யநாராயணா கூறினார்.

சத்யநாராயணா விளக்கமளித்த சிறிது நேரத்தில் மீண்டும் செய்தியாளர்களைச் சந்தித்த ரூபா, தன் குற்றச்சாட்டுகளை மீண்டும் உறுதிப்படுத்தினார்.

படத்தின் காப்புரிமை Google
Image caption பரப்பன அக்ரஹார சிறை வளாகம்

"நான் அனுப்பிய அறிக்கை மீது சந்தேகம் இருந்தால், உண்மையை அறிய விசாரணை நடத்த வேண்டும். அறிக்கையில் தவறு இருந்தால், நடந்தது என்ன என்பது குறித்து விசாரிக்கட்டும். அங்கு என்ன நடக்கிறது என்பது குறித்து விசாரணை நடக்கட்டும். என்னுடைய அறிக்கை குறித்து எதுவும் சொல்ல மாட்டேன். ஆதாரமில்லாத எதையும் அறிக்கையில் நான் எழுதவில்லை" என ரூபா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அறிக்கையில் குறிப்பிட்டுள்ள ஒவ்வொரு வார்த்தைக்கும் ஆதாரம் உள்ளது என்றும் அறிக்கை மீது என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து சத்யநாராயணாதான் முடிவெடுக்க வேண்டுமென்றும் ரூபா கூறியிருக்கிறார்.

சசிகலா தனக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனை குறித்து உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு ஒன்றைத் தாக்கல்செய்திருக்கிறார். இந்த நிலையில், இந்த விவகாரம் வெளிவந்துள்ளது.

இது குறித்து ஊடகங்களில் கருத்துத்தெரிவித்துள்ள அ.தி.மு.க., அம்மா அணியினர், அரசியல் காரணங்களுக்காகவே இம்மாதிரி குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதாக கூறியுள்ளனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :