ஏற்கனவே உள்ள திட்டத்தை புதிதாக அறிவித்தாரா பால்வளத் துறை அமைச்சர்?

  • 13 ஜூலை 2017

தமிழகத்தில் பால் விற்பனையில் ஈடுபட்டுள்ள அரசு அமைப்பான ஆவின், 10 ரூபாய்க்கு 225 மி.லி பால் பாக்கெட்களை விற்பனை செய்யும் என பால்வளத் துறை அமைச்சர் அறிவித்த நிலையில், அதே போன்ற விலையில் ஏற்கனவே அதே நிறுவனம் பாலை விற்றுவருகிறது என்கிறார்கள் பால் முகவர்கள்.

கடந்த 11ஆம் தேதியன்று தமிழக சட்டப்பேரவையில் பால் வளத்துறை மீதான மானியக் கோரிக்கையில் பேசிய பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, பல அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதில், ஏழை மக்கள் பால் அருந்துவதற்கு ஏதுவாக 225 மில்லி லிட்டர் பால் பாக்கெட்கள் பத்து ரூபாய் விலையில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அறிவித்தார்.

ஆனால், தமிழகத்தின் பல மாவட்டங்களில் ஏற்கனவே 200 மற்றும் 250 மி.லி. பால் 9 ரூபாய் முதல் 11 ரூபாய் வரையிலான விலையில் விற்கப்படுவதாக பால் முகவர்கள், தொழிலாளர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.

ஆனால், இதற்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மறுப்புத் தெரிவித்தார். "சில மாவட்டங்களில் மட்டும் சோதனை முயற்சியாக சில காலம் 200-250 மி.லி பால் விற்கப்பட்டுவந்தது" என்று குறிப்பிட்டார்.

அமைச்சர் அளிக்கும் தகவல் தவறு என்கிறார் தமிழ்நாடு பால் முகவர்கள் மற்றும் தொழிலாளர் நல சங்கத்தின் தலைவரான பொன்னுச்சாமி.

"1980களுக்கு முன்பாக பாட்டில்களில் பாலை விற்று வந்த ஆவின், பிளாஸ்டிக் பாக்கெட்களில் பாலை அறிமுகப்படுத்தியபோது அந்த காலகட்டத்திலேயே திருச்சியில் கால் லிட்டர் பால் 70 காசு என்ற விலையில் அறிமுகப்படுத்தியது. அப்போதிலிருந்தே கால் லிட்டர் பாக்கெட்கள் விற்கப்பட்டுவருகின்றன. இப்போதும் மதுரை, திருச்சி என பல மாவட்டங்களில் 200 மிலி, 250 மிலி பால் பாக்கெட்கள் 9 ரூபாய் முதல் 11 ரூபாய் வரையிலான விலையில் விற்கப்பட்டுவருகின்றன. இப்படி ஒரு பொருள் விற்கப்படுவது அமைச்சருக்குத் தெரியாதா?" என்கிறார் பொன்னுச்சாமி.

கடந்த ஆண்டு சென்னையில் கால் லிட்டர் பாக்கெட் 11 ரூபாய் விலையில் அறிமுகப்படுத்தப்பட்டு, பிறகு முகவர்களில் வரவேற்பு இல்லாததால் விற்பனை நிறுத்தப்பட்டது என்கிறார் அவர்.

இதற்கிடையில் புதன்கிழமையன்று ஆவின் மேலும் ஒரு விளக்கத்தை வெளியிட்டது.

அதில் ஏற்கனவே 11 ரூபாய்க்குத்தான் சென்னையில் பால் அறிமுகப்படுத்தப்பட்டதாகவும் சில மாவட்டங்களில் 10.50 -11 ரூபாய் விலைக்கு கால் லிட்டர் விற்கப்படுவதாகவும் கூறியிருப்பதோடு, தற்போது பத்து ரூபாய் விலையில் அறிமுகப்படுத்துவது புதிய திட்டம் எனவும் கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்:

தனியார் பால் நிறுவனங்கள் குறித்து கருத்து தெரிவிக்க அமைச்சருக்கு இடைக்கால தடை

பால் கலப்பட சர்ச்சை: குற்றச்சாட்டுகள் உண்டு, நடவடிக்கைகள் இல்லை

பால் வளத்துறை அமைச்சர் தற்கொலை செய்துகொள்வாரா?: மு.க. ஸ்டாலின் கேள்வி

ஏற்கனவே 250 மிலி பாலை 11 ரூபாய்க்கு விற்ற நிலையில், இப்போது 225 மிலி பாலை பத்து ரூபாய்க்கு விற்பதை புதிய திட்டம்போல சட்டப்பேரவையில் ராஜேந்திர பாலாஜி அறிமுகப்படுத்துவது ஏன் எனக் கேள்வியெழுப்புகிறார் பொன்னுசாமி.

தனியார் நிறுவனங்கள் ஏற்கனவே 10 ரூபாய் விலையில் பாலை விற்றுவருவதைச் சுட்டிக்காட்டுகிறார் அவர்.

கடந்த சில மாதங்களாக, தனியார் விற்கும் பாலில் கலப்படம் இருப்பதாக ராஜேந்திர பாலாஜி கூறிவந்த நிலையில், ஆதாரமில்லாமல் அவ்வாறு கூறக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிபிசியின் பிற செய்திகள்:

அன்னை தெரசாவின் சீரூடை சேலைக்கு பிராண்ட் அடையாளம்

துரத்தும் ஊழல் விசாரணை: கலங்கி நிற்கும் நவாஸ் ஷெரீப்

''சேரி பிஹேவியர் என்ற வார்த்தையை நான் காயத்ரிக்கு சொல்லிக்கொடுக்கவில்லை''

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்