மாதவிடாய் காலத்தில் பெண் ஊழியர்களுக்கு விடுமுறை சாத்தியமா?

  • 17 ஜூலை 2017
படத்தின் காப்புரிமை Blush

மாதவிடாய் காலங்களில் பெண்கள் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம்!?... இது சாத்தியமா என்ன? ஆம் சாத்தியம் என்கிறது மும்பையைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று.

மாதவிடாய் காலத்தின் வலியை சகஜமாக எடுத்துக் கொண்டு தங்களின் அன்றாட பணிகளில் இயல்பாக ஈடுபடுவது பெண்களுக்கு பழகிப் போன ஒன்றுதான் என்ற போதும் அச்சமயத்தில் ஓய்வு கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கும் பல பெண்கள் உண்டு.

அது மும்பையைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனப் பெண் ஊழியர்களுக்கு சாத்தியமாகியுள்ளது. பணிபுரியும் பெண்கள் தங்களின் மாதவிடாய் காலத்தின் முதல் நாளில் விடுமுறை எடுத்துக்கொள்ளலாம் என்று சொல்கிறது மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் `கல்ச்சர் மிஷன்` என்ற டிஜிட்டல் மீடியா நிறுவனம்.

பெண்கள் முன்னேற்றம் குறித்து நிகழ்ச்சி தயாரிக்கும் தங்களின் நிறுவனம் ஏன் தங்களின் நிறுவனக் கொள்கையில் அதனை பிரதிபலிக்கக் கூடாது என்ற எண்ணம் தோன்றிய போது எழுந்த யோசனைதான் இந்த மாதவிடாய் விடுமுறை என்கிறார் கல்ச்சர் மிஷன் நிறுவனத்தின் மனித வள மேம்பாட்டுத் துறை தலைவர் தேவ்லீனா மஜும்தார்.

படத்தின் காப்புரிமை Culture machine
Image caption கல்ச்சர் மிஷன் நிறுவனத்தின் மனித வள மேம்பாட்டுத் துறை தலைவர் தேவ்லீனா மஜும்தார்.

இதனால் தங்களின் வர்த்தகம் எந்த வகையிலும் பாதிக்கப்படாது என்று உறுதியாக நம்புகிறார் தேவ்லீனா.

மேலும் இதற்கு சக ஆண் ஊழியர்களிடமிருந்து எந்த எதிர்ப்பும் வரவில்லை என்றும் அவர்கள் இதற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து வருவதாகவும் தெரிவிக்கிறார்.

"ஃப்ர்ஸ்ட் டே ஆஃப் பிரியட்" என்ற வீடியோ ஒன்றை தயாரித்து தங்கள் நிறுவனத்தின் பெண்களுக்கென்ற சேனலான `ப்ளஷில்`வெளியிட்டுள்ளனர்.

வைரலாகியுள்ள அந்த வீடியோவில், நிறுவனத்தின் பெண் ஊழியர்கள் தங்கள் மாதவிடாய் காலத்தில் தாங்கள் எவ்வாறு உணர்வார்கள் என்றும், அவர்கள் மனநிலை குறித்தும் பேசுகிறார்கள்; வீடியோவின் முடிவில் இந்த விடுமுறையை சட்டப்பூர்வமானதாக மாற்ற வலியுறுத்த, மத்திய அமைச்சர்கள் மேனகா காந்தி மற்றும் பிரகாஷ் ஜாவடேகரை நோக்கிய கையெழுத்து பிரசாரம் ஒன்றிற்கும் அழைப்பு விடுக்கின்றனர்.

இதுவரை சுமார் 26,000 பேர் கையழுத்து பிரசாரத்தில் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இது ஒருபுறம் இருக்க, மாதவிடாய் கால விடுமுறை குறித்தும், அது நடைமுறையில் எந்தளவு சாத்தியம் என்பதையும் அரசு ஊழியராக பணிபுரியும் சுஷ்மிதாவிடம் கேட்ட போது,

Image caption சுஷ்மிதா

"தங்களது அலுவலகத்தில் மாதவிடாய் என்று காரணம் காட்டி விடுமுறை எடுக்கும் வழக்கம் துளியளவும் இல்லை என்றும் பிற உடல் உபாதைகளை காட்டி விடுமுறை எடுக்க முயன்றாலும் கூட இதை காரணம் காட்டுவது இயலாத காரியம்" என்கிறார் சுஷ்மிதா.

மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலியால் எந்த ஒரு நிறுவனத்திலும் பணிபிரிய முடியாத தனது நிலையை நம்மிடம் விளக்கினார் சென்னையைச் சேர்ந்த ஷர்மிளா.

"மாதவிடாய் காலத்தில் தனக்கு வரும் வலியானது வயிற்றிலிருந்து முழங்கால் வரை பரவக்கூடிய அளவு கடுமையானதாக இருக்கும் என்றும் ஆகையால் தன்னால் எந்த நிறுவனத்திலும் பணிபுரிய முடியவில்லை" என்றும் தெரிவிக்கிறார் அவர்.

ஷர்மிளா, இதற்கு முன்பு விமான சேவை நிறுவனம் ஒன்றில் பணியாற்றியுள்ளார்; தனக்கு ஏற்படும் வலியால் மாதம் மூன்று நாட்கள் தொடர்ந்து விடுமுறை எடுக்க வேண்டிய கட்டாயம் வருவதால் தன்னால் எந்த நிறுவனத்திலும் தொடர்ந்து பணியாற்ற முடியவில்லை என்கிறார்.

உடல் வலியுடன் சேர்ந்த மனவலி

மாதவிடாய் காலம் என்பது உடல்வலி தொடர்புடையது மட்டுமல்ல. மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படக் கூடிய உதிரப்போக்கு மற்றும் வயிற்று வலியால் அவர்கள் மனரீதியாகவும் பாதிப்புகளுக்கு உள்ளாவதால் அவர்களுக்கு ஓய்வு அவசியமான ஒன்றுதான் என்று கூறுகிறார் மகப்பேறு மருத்துவர் தங்கத்தாய்.

மாதவிடாய் காலத்தில் சராசரியாக 30-50மி.லி உதிரப் போக்கு ஏற்படுகிறது, உதிரப் போக்கால் ஹீமோக்ளோபின் அளவில் குறைப்பாடு, இரும்புச் சத்து குறைபாடு என உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பெண்கள் சோர்வடைகின்றனர் என்கிறார் தங்கத்தாய்.

மேலும் மாதவிடாய் காலத்தில் கழிப்பிடத்தை அதிகமாகப் பயன்படுத்த நேரிடும். நாப்கின்களை மாற்றக் கூடிய நிலை அங்கு நிலவ வேண்டும் எனவே அலுவலகத்திற்குச் செல்லும் போது அது அனைத்தையும் கருத்தில் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.

மேலும் மாதவிடாய் காலத்தில் பணிக்கு வந்தாலும் கூட, வலி ஏற்படுவதனால் அவர்களால் பணிகளில் சரியாக கவனம் செலுத்த முடியாது நிலையும் ஏற்படும் என்கிறார் மருத்துவர்.

வேண்டும் வெளிப்படைத் தன்மை

மாதவிடாய் காலங்களில் முதல் நாள் என்றில்லாமல், முதல் மூன்று நாட்களில் எந்த நாளிலும் பெண்களுக்கு வலி ஏற்படும் என்றும் எனவே இது மூன்று நாட்களில் ஏதாவது ஒரு நாள் விடுமுறை என்றிருந்தால் செளகர்யமானதாக இருக்கும் என்கிறார் அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கத் தலைவர் வாசுகி.

Image caption அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கத் தலைவர் வாசுகி

இன்றைய யதார்த்த சூழலில் பல நிறுவனங்களில் பெண்களுக்கு சட்டப்படி கிடைக்க வேண்டிய பிரசவ கால விடுப்பு கிடைப்பதில் கூட சிரமம் இருக்கும்பட்சத்தில் இந்த கோரிக்கை உடனடியாக வெற்றிப் பெறுவதற்கு வாய்ப்பில்லை என்றபோதும் இந்த தொடக்கம் கொள்கை ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய அவசியமான ஒன்று என்கிறார் வாசுகி.

"இம்மாதிரியாக பேசுவதற்கு தயங்குகிற விஷயங்களை சுதந்திரமாக பேசுவதற்கான களச் சூழலை மத்திய மாநில அரசுகள் தங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் பல துறைகள் மூலமாக முயற்சிகளை செய்ய வேண்டும்; மேலும் பள்ளிகளும், கல்லூரிகளும் ஆண்களுக்கு இது குறித்த அறிவியல் ரீதியான பார்வைகளை உருவாக்குவதற்கு முன்வர வேண்டும்."

தொடர்புடைய செய்திகள்:

"பெண்களின் இயற்கையான உடல் வளர்ச்சி மற்றும் உடல் சுழற்சியின் ஒரு பகுதிதான் இந்த மாதவிடாய். எனவே அதனை தூய்மையற்றது என்ற உணர்வின் காரணமாகத்தான் வெளியில் பகிர முடியாத நிலைமை உள்ளது."

"மதம் என்ற பெயரில் மாதவிடாய் என்பது தூய்மையற்றது என்ற எண்ணத்தை புகுத்தும் போது இயல்பாகவே பொது வெளியில் பகிர்ந்து கொள்ள முடியாத ஒரு விஷயமாக அது மாறிவிடுகிறது."

எனவே இது தூய்மையற்றது என்ற விஷயத்தை மாற்றினால் அதை மக்கள் இயல்பாக பார்க்க தொடங்குவார்கள் என்கிறார் வாசுகி

இது நவீன சமூகம் என்று கூறிக்கொண்டாலும் நாப்கின்களை கருப்பு கவர்களில் சுருட்டி கொடுப்பதில் நவீனத்துவம் மங்கிவிடுகிறது. மாதவிடாய் என்பது மூடி மறைப்பது, பேச தயங்குவது போன்ற குற்றமல்ல என்பதை நாம் உணர வேண்டும். அது பெண்களிடத்தில் இருந்தே தொடங்க வேண்டும்.

அது ஓர் இயற்கையான மாற்றம் என்பதை புரிந்துக் கொண்டு அறிவியல் கண்ணோட்டத்துடன் அதனை அணுக வேண்டும்.

அது எல்லாவற்றிற்கும் மேலாக, அச்சமயத்தில் பெண்களுக்கு ஏற்படும் வலியை புரிந்துக் கொள்வதும் கூட பெண் முன்னேற்றத்திற்கான செயல்பாடுகளில் ஒன்றுதான் என்பதையும் நாம் உணர வேண்டும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்