இரோம் ஷர்மிளா கொடைக்கானலில் திருமணம் செய்ய விஜயகாந்த் கட்சி பிரமுகர் எதிர்ப்பு

  • 14 ஜூலை 2017

மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலரான இரோம் ஷர்மிளா கொடைக்கானலில் திருமணம் செய்துகொள்ளக் கூடாது என்று ஆட்சேபணை தெரிவித்து தே.மு.தி.கவைச் சேர்ந்தவரும் சமூக ஆர்வலருமான மகேந்திரன் என்பவர் மனு செய்திருக்கிறார்.

படத்தின் காப்புரிமை PTI

மணிப்பூர் மாநிலத்தில் சிறப்பு ஆயுதப் படைச் சட்டத்தை எதிர்த்துப் போராடி வந்த சமூக ஆர்வலரான இரோம் ஷர்மிளா, தனது நீண்ட நாள் தோழர் டெஸ்மாண்ட் அந்தோணி ஹட்டின்ஹோவை மணப்பதற்காக திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள சார் - பதிவாளர் அலுவலகத்தில் புதன்கிழமையன்று விண்ணப்பித்திருந்தார்.

டெஸ்மாண்ட் வெளிநாட்டவர் என்பதால், சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் திருமணம் செய்வதற்காக இரோம் ஷர்மிளா விண்ணப்பம் செய்திருந்தார்.

இந்தச் சட்டப்படி, யாருக்காவது ஆட்சேபணை இருக்கிறதா என்பதை அறிய, 30 நாள் கால அவகாசம் அளிக்க வேண்டும் என்பதால், அவரது திருமணம் குறித்த அறிவிப்பு கொடைக்கானல் சார்பதிவாளர் அலுவலகத்தில் ஒட்டப்பட்டது.

இந்நிலையில், கொடைக்கானல் பெருமாள்மலை பேத்துப்பாறை பகுதியைச் சேர்ந்த வி. மகேந்திரன் என்பவர் இரோம் ஷர்மிளா கொடைக்கானலில் திருமணம் செய்துகொள்ள அனுமதிக்கக்கூடாது என்று கொடைக்கானல் சார் பதிவாளர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

"திருமணம் முடிந்த பிறகு கொடைக்கானலில் உள்ள பழங்குடியின மக்களின் உரிமைக்காக குரல் கொடுப்பேன் என்று கூறியுள்ளார். கொடைக்கானல் என்பது சர்வதேச சுற்றுலாத்தலம். அதனை அமைதியான சுற்றுலாத் தலமாக வைத்திருக்க நினைக்கும் சமூக சேவகர்களுக்கு ஷர்மிளாவின் கருத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அவர்களை திருமணம் செய்ய அனுமதித்தால் அவர்கள் நிரந்தரமாக தங்கிவிட வாய்ப்பிருக்கிறது. அவர்கள் திருமணம் செய்துகொள்ள அனுமதிக்கக்கூடாது" என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து பிபிசியிடம் பேசிய மகேந்திரன், "மூன்று மாதங்களுக்கு முன்பாக இரோம் ஷர்மிளா கொடைக்கானலுக்கு வந்தபோது, நான்தான் அவரை ஷால்வை அணிவித்து வரவேற்றேன். ஆனால், அவர் இங்கு வந்து போராடுவேன் என்று சொல்வதை ஏற்க முடியாது. அவருக்கு நம் கலாசாரம் தெரியாது" என்று கூறினார்.

விஜயகாந்த் தலைமையிலான தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தின் ஒன்றிய இளைஞர் அணி செயலாளராக மகேந்திரன் இருக்கிறார்.

இவருடைய மனு விரைவில் சார் - பதிவாளரால் விசாரிக்கப்படும் என்று தெரிகிறது.

இதுகுறித்து சார் பதிவாளர் ராஜேஷிடம் கேட்டபோது, "மனு குறித்து அரசின் கருத்தைக் கேட்டிருக்கிறோம். என்ன முடிவெடுப்போம் என்பதை இப்போது தெரிவிக்க முடியாது" என்று தெரிவித்தார்.

கடந்த 2000வது ஆண்டு நவம்பர் மாதம் நடந்த மாலோம் படுகொலைகளை அடுத்து, மணிப்பூர் சிறப்பு ஆயுதப் படைச் சட்டத்தை விலக்கிக்கொள்ள வேண்டுமெனக்கோரி உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கினார் ஷர்மிளா.

பிற செய்திகள்

அதற்குப் பிறகு, மக்கள் மீளெழுச்சி மற்றும் நீதிக்கான கூட்டணி என்ற கட்சியைத் துவக்கி மணிப்பூர் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டார் ஷர்மிளா. ஆனால், அதில் அவர் தோல்வியடைந்தார்.

இதற்குப் பிறகு அரசியலில் இருந்து விலகப்போவதாக அறிவித்த இரோம் ஷர்மிளா, தற்போது கொடைக்கானலில் அப்சர்வேட்டரி பகுதியில் தங்கியுள்ளார். மணிப்பூர் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு திருமணம் செய்துகொள்ளப் போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :