"இரட்டை இலை" சின்னத்தைப் பெற லஞ்சம் தர முயற்சி? நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்

  • 14 ஜூலை 2017

அதிமுகவின் இரட்டை இலை தேர்தல் சின்னத்தை, அதிமுக (அம்மா) அணி பொதுச்செயலாளர் சசிகலாவின் தலைமைக்கு சாதகமாக பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் டெல்லி தீஸ் ஹசாரி மாவட்ட நீதிமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நகர காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

படத்தின் காப்புரிமை BHASKER SOLANKI

தற்போது திஹார் சிறையில் நீதிமன்ற காவலில் உள்ள சுகேஷின் ஜாமீன் மனுவை விசாரணை நீதிமன்றம் (தீஸ் ஹசாரி மாவட்ட நீதிமன்றம்) இரண்டு முறையும் டெல்லி உயர் நீதிமன்றம் ஒரு முறையும் நிராகரித்துள்ளன.

இந்த வழக்கை டெல்லி தீஸ் ஹசாரி மாவட்ட நீதிமன்ற சிறப்பு நீதிபதி பூணம் செளத்ரி விசாரித்து வருகிறார்.

அவர் விடுமுறையில் உள்ளதால் 701 பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திரிகையை, அதே நீதிமன்றத்தில் உள்ள மற்றொரு சிறப்பு நீதிபதி மனோஜ் ஜெயின் முன்னிலையில், நகர காவல்துறை அதிகாரிகள் இன்று தாக்கல் செய்தனர்.

அதை பதிவு செய்து கொண்ட சிறப்பு நீதிபதி மனோஜ் ஜெயின், வழக்கை விசாரித்து வரும் சிறப்பு நீதிபதி பூணம் செளத்ரி, இந்த குற்றப்பத்திரிகை தொடர்பாக வரும் 17-ஆம் தேதி விசாரிப்பார் என்று கூறி வழக்கை தள்ளிவைத்தார்.

படத்தின் காப்புரிமை Getty Images

சுகேஷை கைது செய்தபோது அவரது அறையில் மாநிலங்களவை உறுப்பினருக்கான போலி அடையாள அட்டை, இந்திய இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர் அட்டை போன்றவையும் இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த குற்றப்பத்திரிகையில் சுகேஷ் சந்திரசேகரின் பெயர் மட்டும் சேர்க்கப்பட்டுள்ளது. அவருக்கு எதிரான ஆதாரங்கள், சாட்சியங்கள் ஆகியவை வலுவாக இருப்பதால், அவரை வழக்கு விசாரணைக்கு உள்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

அதே சமயம், குற்றப்பத்திரிகையில் தினகரன், மல்லிகார்ஜுனா, நாது சிங், லலித் ஆகியோரின் பெயர்கள் சேர்க்கப்படவில்லை. இதற்கான விளக்கமும் காவல்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் உள்ளது.

காவல்துறை விளக்கம்

அதில், சாட்சிகள் அளித்துள்ள வாக்குமூலம், குற்றம் சாட்டப்பட்டோர் மற்றும் சாட்சிகளின் தொலைபேசி அழைப்பு விவரங்கள், அவை தொடர்பான தொழில்நுட்ப ஆய்வுகள் ஆகியவை அடிப்படையில் வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.

சுகேஷ் சந்திரசேகரும் தினகரனும் தேர்தல் ஆணையத்தில் நிலுவையில் உள்ள இரட்டை இலை தேர்தல் சின்ன விவகாரம் பற்றி விவாதித்துள்ளதை உறுதிப்படுத்தும் தொழில்நுட்ப ஆதாரங்கள் உள்ளன. அவற்றைக் கொண்டு இந்த விவகாரத்தில் குற்றச்சதியில் இருவரும் ஈடுபட்டுள்ளது தெரிய வருகிறது.

ஆதாரங்கள் வலுவாக இருப்பதால், முதலாவதாக சுகேஷுக்கு எதிராக மட்டும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சுகேஷ், தினகரன் உள்ளிட்டோர் இடையிலான உரையாடல்கள், அவர்கள்வசம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ள செல்லிடப்பேசிகளின் குரல் பதிவுகள் ஆகியவை மீதான விசாரணை நிலுவையில் உள்ளது.

சுகேஷ் கைது செய்யப்பட்டபோது, அவர் தங்கியிருந்த ஹோட்டல் அறையில் ரூ.50 கோடி ரொக்கம் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யட்டது. அந்த பணத்தை சட்டவிரோத வழிகளில் டெல்லிக்கு சுகேஷ் கொண்டு வந்துள்ளார்.

சுகேஷ் பயன்படுத்திய கார்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவை தொடர்பாக புல்கித் குந்த்ரா என்பவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

36 சாட்சிகள்

இது குறித்து டெல்லியில் மாநிலங்களவை செயலகத்தின் செயலாளர், சென்னையைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் பி.குமார், பெங்களூரைச் சேர்ந்த வெளிநாடுவாழ் இந்தியர் அமைப்பின் வி.சி.பிகராஷ், இந்திய இளைஞர் காங்கிரஸ் பிரமுகர் அம்ரீந்தர் ராஜா உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தி அவர்கள் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். மொத்தம் 36 பேர் வழக்கில் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக, இந்த வழக்கில் சுகேஷ் சந்திரசேகரை டெல்லியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் அறையில் டெல்லி காவல்துறை கடந்த ஏப்ரல் 16-ஆம் தேதி கைது செய்தது.

அதைத்தொடர்ந்து, அதிமுக அம்மா கட்சி துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜுனா, நரேஷ் என்கிற நாது சிங், லலித் குமார் என்கிற பாபு பாய் ஆகியோரை கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அடுத்தடுத்து காவல்துறை அடுத்தடுத்து கைது செய்தது.

போலீஸ் காவலில் விசாரிக்கப்பட்ட அவர்கள், பின்னர் ஒரு மாதத்துக்கும் மேலாக டெல்லி திஹார் சிறையில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டனர்.

இதையடுத்து சுகேஷ் நீங்கலாக மற்ற நால்வரையும் டெல்லி நீதிமன்றம் கடந்த மாதம் ஜாமீனில் விடுவித்தது.

சின்னவிவகாரம்: பின்னணி என்ன?

தமிழக முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி உயிரிழந்த பிறகு மாநில முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதன் பிறகு அக்கட்சியின் பொதுக்குழுவில் சசிகலா இடைக்கால பொதுச்செயலாளராக கடந்த ஆண்டு டிசம்பர் 22-ஆம் தேதி நியமிக்கப்பட்டார்.

அதைத்தொடர்ந்து, தமிழக முதல்வராக சசிகலா பதவி ஏற்க வேண்டும் என்று அதிமுக எம்.எல்.ஏ.க்களில் ஒரு பிரிவினர் குரல் கொடுத்தனர். இதையடுத்து முதல்வர் பதவியை பன்னீர்செல்வம் கடந்த பிப்ரவரி 5-ஆம் தேதி ராஜிநாமா செய்தார்.

படத்தின் காப்புரிமை Getty Images

இதையடுத்து சசிகலா பதவி ஏற்புக்கான முன்மொழிவுகள் தீவிரமான நிலையில், சென்னையில் ஜெயலலிதாவின் சமாதியில் தியானம் செய்த பன்னீர்செல்வம், ஜெயலலிதா சாவில் மர்மம் உள்ளதாகவும் சசிகலாவுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளையும் சுமத்தினார்.

தமிழகத்தில் ஜெயலலிதாவின் ஆட்சி தொடர அதிமுக தொண்டர்கள் ஆதரவளிக்க வேண்டும் என அவர் அழைப்பு விடுத்தார். இதனால் தமிழக அரசியலில் திருப்பம் ஏற்பட்டது.

அதன் பின்னர் பன்னீர்செல்வத்தை அதிமுகவில் இருந்து நீக்குவதாக சசிகலா கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி அறிவித்தார்.

இந்த நிலையில், ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு எதிரான சொத்துகள் குவித்ததாக தொரப்பட்ட வழக்கில் ஜெயலலிதா நீங்கலாக மற்றவர்களுக்கு பெங்களூரு விசாரணை நீதிமன்றம் விதித்த சிறை தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தி கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி தீர்ப்பளித்தது.

இதையடுத்து பெங்களூரு சிறையில் அடைக்கப்படும் முன்பாக, அதிமுக துணை பொதுச்செயலாளராக முன்னாள் எம்.பி.யும் தமது உறவினருமான டி.டி.வி.தினகரனை அதிமுக துணை பொதுச் செயலாளராக சசிகலா நியமித்தார்.

இந்த நிலையில் சசிகலா தலைமைக்கு எதிராகவும் அவரால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நடவடிக்கை செல்லாது என அறிவிக்கக் கோரியும் தேர்தல் ஆணையத்தில் அதிமுகவில் அவைத் தலைவராக இருந்த மதுசூதனன் முறையிட்டார்.

அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்ட நடவடிக்கை கட்சி விதிகளுக்கு எதிரானது என்று முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்தில் புகார் மனு அளித்தார்.

மேலும், அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை சசிகலா தரப்பு பயன்படுத்தக் கூடாது என்றும் பன்னீர்செல்வம் முறையிட்டார்.

இதற்கிடையே ஜெயலலிதா போட்டியிட்ட ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதிக்கு தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் அறிவித்தது. அதில் போட்டியிட சசிகலா ஆதரவாளரான டி.டி.வி.தினகரனும், பன்னீர்செல்வம் ஆதரவாளரான மதுசூதனனும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் அதிமுகவில் இரு பிரிவுகள் இருப்பதை கடந்த மார்ச் 22-ஆம் தேதி உறுதிப்படுத்திய தேர்தல் ஆணையம், அக்கட்சியின் இரட்டை இலை தேர்தல் சின்னத்தை மறுஉத்தரவு பிறப்பிக்கப்படும்வரை யாரும் பயன்படுத்தக் கூடாது என்று கூறி முடக்கியது.

இதையடுத்து சசிகலா அணி அதிமுக அம்மா கட்சி என்றும் பன்னீர்செல்வம் அணி, அதிமுக புரட்சித் தலைவி அம்மா கட்சி என்றும் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளலாம் என தேர்தல் ஆணையம் கூறியது.

இந்த நிலையில் தேர்தல் சின்ன விவகாரத்தில் சசிகலா தரப்புக்கு சாதகமாக தேர்தல் ஆணையம் உத்தரவிடுவதற்காக அதன் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க சுகேஷ் மூலம் தினகரன் முயன்றதாக டெல்லி காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :