பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக ஆயுதம் ஏந்திய விவசாயிகளின் கதை

  • 15 ஜூலை 2017

1857-ம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக இந்திய சிப்பாய்கள் கலகத்தை தொடங்கினார்கள், இது சுதந்திரத்திற்கான முதல் போர் என குறிப்பிடப்படுகிறது.

படத்தின் காப்புரிமை Getty Images

இக்கலகத்தில், சாதாரண விவசாயிகளும் ஆயுதம் ஏந்தி இந்திய சிப்பாய்களுக்கு ஆதரவாக நின்றனர். ஆனால், விவசாயிகளின் பங்களிப்பு பலராலும் மறக்கப்பட்டது. விவசாயிகளில் பங்களிப்பு குறித்த நினைவுகளை ஓர் ஆராய்ச்சி குழுவினர் வெளிக்கொண்டுவர முயற்சி எடுத்துள்ளனர். அதுகுறித்து, சுனைனா குமார் விவரிக்கிறார்.

பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராக 1857ம் ஆண்டு நடந்த கலகத்தின் 160-வது ஆண்டு நிறைவினை ஒட்டி, உத்தரப்பிரதேச மாநிலத்தின் மீரட் மாவட்டத்தில் உள்ள பிஜ்ராவுள் கிராமத்தில் மே 10-ம் தேதி ஒரு சிறிய விழா நடைபெற்றது.

கலகத்தில் பங்குபெற்ற தங்களது மூதாதையர் ஷா மால்லுக்கு, இக்கிராமத்தில் வசிப்பவர்கள் மரியாதை செலுத்தினர். 1857-ம் ஆண்டு கிட்டதட்ட 84 கிராமத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள், தங்களது நிலங்களை விட்டு வெளியேறி ஆயுதம் ஏந்திப் போராடியதற்கு இவர் முக்கிய காரணியாக இருந்தார்.

ஆனால், வளரம் படைத்த இந்த ஜமீன்தாரைப் பற்றி இந்தியர்கள் பலருக்குத் தெரியாது.

இக்கலகத்தை ஒடுக்க அமைக்கப்பட்ட தன்னார்வ காவல் படை குறித்து ``சர்விஸ் அண்டு அட்வென்சர் வித் காக்கி ரெசலா`` என்ற புத்தகம் வரலாற்று ஆவணமாக விளங்குகிறது. இப்புத்தகத்தை எழுதிய பிரிட்டிஷ் உயர் அதிகாரி ராபர்ட் ஹென்றி வாலஸ் டன்லொப்,``கலகத்தில் வென்றது நம் படையா அல்லது பிரிட்டிஷ் படையா என்பதை அறிய அக்கிராம மக்கள் ஆர்வமாக இருந்தனர்`` என அப்புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

படத்தின் காப்புரிமை AMIT PATHAK

ஷா மாலிடம் அசாதாரணமான துணிச்சல் இருந்தது. தில்லியில் உள்ள கலகக்காரர்களுக்கு தேவையான பொருட்களை சேகரித்து அனுப்பிவைத்த அவர், பிரிட்டிஷ் தலைமையிடமான தில்லிக்கும் மீரட்டிற்கு இடையிலான அனைத்துத் தொடர்பினையும் துண்டிக்கும் விதமாக யமுனை நதி மீது படகுகளால் அமைக்கப்பட்ட பாலத்தை தகர்த்தார்.

1857 ஜூலையில், ஷா மால் தலைமையில் 3,500 விவசாயிகள் பழங்கால வாள் மற்றும் ஈட்டிகளை வைத்துக்கொண்டு, குதிரைப்படை, காலாட்படை மற்றும் பீரங்கிப் படையினை கொண்ட பிரிட்டிஷ் படைவீரர்களுடன் மோதினர்.

படத்தின் காப்புரிமை SACHIN KUMAR

ஜமீன்தார் ஷா மால் இச்சண்டையில் கொல்லப்பட்டார்.

`` யாரும் அறியாதவர் முக்கிய கலகக்காரர் ஆனார்`` என ஷா மாலின் கதையினை பிரிட்டிஷ் வர்ணிக்கிறது.

ஷா மாலை போல கலகத்தின் ஒரு முக்கிய பகுதியாக இருந்தவர்கள் பலரும், மக்களாலும் விவசாயிகளாலும் மறக்கப்பட்டனர். இந்நிலையில் மீரட்டில் இருக்கும் அர்ப்பணிப்புள்ள வரலாற்று ஆசிரியர்கள் வரலாற்றை மிட்டெடுக்க முயல்கின்றனர்.

1857 எழுச்சியின் முக்கிய அங்கமாக ''வட இந்தியா முழுவதிலும் ஆயிரக்கணக்கான தன்னார்வ விவசாயிகள் கலகத்தில் ஈடுபட்டனர்.`` என நக்சல்பாரி எழுச்சி என்ற புத்தகத்தில் கலாசார வரலாற்று ஆசிரியர் சுமந்தா பேனர்ஜி எழுதியுள்ளார்.

``இந்தக் கலகத்தில் விவசாயிகள் பங்கினை முதலாளித்துவ வரலாற்று ஆசிரியர்களால் மூடி மறைக்கப்பட்டது`` என சுமந்தா பேனர்ஜி கூறுகிறார்.

படத்தின் காப்புரிமை ALKAZI FOUNDATION

பிரிட்டிஷ் பதிவுகள்

கலகத்தில் பங்கேற்ற மேல்குடியினர், மிராசுதார்கள் மட்டுமே பெரும்பாலான வரலாற்றுப் பதிவுகளில் இடம்பெற்றுள்ளனர். கலகத்தில் விவசாயிகளின் பங்களிப்பு பற்றிப் பரந்த அளவிலான தகவல் பிரிட்டிஷ் ஆவணங்களில் இருப்பதால், வரலாற்றார்கள் அந்த காலகட்டத்தின் பிரிட்டிஷ் ஆவணங்களை ஆராய்ந்துள்ளார்.

மேலும், மீரட் கிராம மக்களை பிரிட்டிஷ் தாக்கியது பற்றிய தகவல்களும் 1858- ஆம் ஆண்டின் ஆவணங்களில் இடம்பெற்றுள்ளன.

`` ஒரு காலை நேரத்தில் முக்கிய கிராமங்கள் படையினரால் சூழப்பட்டது. கணிசமான எண்ணிக்கையிலான ஆண்கள் கொல்லப்பட்டனர். நாற்பது போர் சிறையில் அடைக்கப்பட்டு பின்பு தூக்கிலிடப்பட்டனர்``

கலாசாரம் மற்றும் வரலாற்று சங்கம் என்ற லாபநோக்கமற்ற சங்கத்தின் நிறுவனர்களான மீரட்டை சேர்ந்த வரலாற்று எழுத்தாளர் அமித் பாதக், வரலாற்றுப் பேராசிரியர் சர்மா, ஆராய்ச்சியாளர் மற்றும் வரலாற்றாசிரியர் ராய் ஜெய்ன் ஆகியோர், ஷா மால்லை போல கலகத்தில் ஈடுபட்டவர்களின் வரலாற்றை மீட்டெடுக்க வரலாற்று ஆவணங்களை கவனமாக ஆராய்ந்து வருகின்றனர்.

10 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சிப்பாய் கலத்தின் 150-ம் ஆண்டு நினைவு தினத்தின் போது, ``கலக கிராமங்கள்`` என்ற ஆராய்ச்சியை இவர்கள் ஆரம்பித்தார்கள்.

பிரிட்டிஷால், கலக கிராமங்கள் என பிரகடனப்படுத்தப்பட்ட இக்கிராமங்கள், சுதந்திரத்திற்காகப் போராடின. பிறகு இப்பிராந்தியங்களை மீண்டும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்த பிரிட்டிஷார் இக்கிராமங்களை பழிவாங்கினார்கள்.

இத்தகைய கிராமங்கள் அடையாளம் கண்ட பிறகு, கலகத்தில் பங்கேற்றவர்களில் வாரிசுகளைச் சந்தித்து அவர்களது நினைவுகளை வரலாற்றார்கள் ஆவணப்படுத்தியுள்ளனர். பல தலைமுறையினரையும் சந்தித்து சேகரித்த ஆவணங்களை உறுதிப்படுத்தியுள்ளனர்.

படத்தின் காப்புரிமை AMIT PATHAK

`` இந்த எழுச்சியின் முக்கிய பங்கு கிராமப்புறத்தில் இருந்தது`` என பிபிசியிடம் கூறுகிறார் பாதக்.

``கலகக்காரர்களில் வாரிசுகள் இன்னும் வறுமையில் சிக்கியுள்ள சோகத்தை இக்கிராமங்களில் நாங்கள் பார்த்தோம்`` என்கிறார்

தில்லியின் தோல்விக்கு பின்னர், இந்த எழுச்சியும் வீழ்ச்சியைச் சந்தித்தது. பிறகு கலகக்காரர்கள் தூக்கிலிடப்பட்டதுடன், அவர்களில் நிலங்கள் பறிமுதல் செய்யப்பட்டு பிரிட்டிஷாருக்கு விசுவாசமாக இருந்தவர்களுக்குக் கொடுக்கப்பட்டது.

``புசோத் கிராமத்திற்கு நாங்கள் சென்றபோது, பிரிட்டிஷாரல் நிலக்கிழார்கள் நிறைந்த வளமான கிராமம் என பதிவு செய்யப்பட்ட கிராமம், நிலமற்ற கூலி தொழிலாளர்கள் நிறைந்த கிராமமாக மாறியிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தோம்`` என பாதக் கூறுகிறார்.

இதுபோன்ற 18 கிராமங்களில் விவரங்களை ஆராய்ச்சியாளர்கள் இதுவரை சேகரித்துள்ளனர்.

ஆனால், அரசு அதிகாரிகள் எப்போதாவது மட்டுமே இக்கிராமங்களுக்கு வருகின்றனர். சில கிராமங்களில், புரட்சியாளர்களின் குடும்பத்தினர் தங்களது வரலாற்றைப் பற்றி சிறிதும் அறியாமல் இருப்பதையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை SACHIN KUMAR

ஷா மாலை போன்றவர்களின் கதைகள் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளன என்கிறார் ஜெயின்.

ஷா மலுடன் இணைந்து போராடிய நிம்பலி கிராமத்தின் விவசாயிகள் தலைவர் குலாப் சிங்கின் ஐந்தாவது தலைமுறை வம்சாவளியாக பிரமோத்குமார் தமா உள்ளர்.

பள்ளி ஒன்றில் ஆசிரியராக உள்ள ஐம்பது வயதான தமா, குலாப் சிங்கின் பங்களிப்புகளை களஞ்சியமாக நினைவில் வைத்துள்ளார்.

``நாட்டிற்காக போராடிய ஒரு பெரிய குடும்பத்தில் இருந்து நான் வந்தவன் என சிறு வயதில் என்னிடம் கூறினார்கள். ஓர் ஆசிரியராக மாற இது என்னை ஊக்கப்படுத்தியது`` என்கிறார் தமா

ஜூலை 18-ம் தேதி பிஜ்ராவுல் கிராம மக்கள், கலகத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துகின்றனர். இக்கிராமத்திற்கு அருகில் இருக்கும் ஆலமரத்தில் ஷா மாலுடன் 26 போராளிகள் தூக்கிலிடப்பட்ட இடத்திலும் நினைவஞ்சலி செலுத்தப்படும்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :