ஆபத்தான நேரங்களில் உயிர் தப்புவது எப்படி?

  • 18 ஜூலை 2017

"உலோகங்கள் உராய்வால் ஏற்பட்ட அந்த சப்தத்தை எப்போதுமே மறக்க முடியாது" என்கிறார் 1973 ஆம் ஆண்டு சென்னையில் இருந்து டெல்லிக்கு சென்ற இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த ஜார்ஜ் லார்சன்.

படத்தின் காப்புரிமை Alamy
Image caption விமான விபத்தின்போது, சீட்பெல்ட் அணிந்தவர்களைவிட, அணியாதவர்கள் உயிரிழக்கும் வாய்ப்பு நான்கு மடங்கு அதிகம்

இரவு 10.30 மணி, இருள் சூழ்ந்த நேரம். விமானம் தரையிறங்கும்போது, முதலில் பின்புற சக்கரம் தரையைத் தொட்டது, லார்சன் தனது இருக்கையிலிருந்து தூக்கியெறியப்பட்டார்.

விமானம் நகர்கிறது, மின்சார கேபிள்களில் இருந்து தீப்பொறிகள் பறந்து விமானத்தின் முக்கியப் பகுதியில் பிளவு ஏற்படத் தொடங்கியதும் சக பயணிகள் அச்சத்தில் கூச்சலிட்டார்கள்.

லார்சனுக்கு நினைவு வந்தபோது, அவரின் முதுகில் விமானத்தின் இடிபாடுகள் அழுத்திக் கொண்டிருந்தன. கால்களை நகர்த்த முடியவில்லை. அப்போது, விமான இறக்கைகளில் இருந்த எரிபொருள் டாங்குகளில் ஒன்று வெடித்தது.

அவரைச் சுற்றி விமானத்தின் இடிபாடுகள் நிறைந்திருக்க, உயிர் பிழைக்க வேண்டுமானால் தான் துரிதமாக செயல்படவேண்டும் என்று அவர் உணர்ந்தார். "முதலில் ஆழமாக மூச்சை இழுத்துவிட்டேன், காற்று மிகவும் சூடாக இருந்தது. கஷ்டப்பட்டு இடிபாடுகளை உதறித்தள்ளிவிட்டு, உருண்டேன், தப்பிப்பதற்கான வழிகளை தேடினேன்". தீ பரவுவதற்கு முன்னதாக லார்சன் சமயோசிதமாக செயல்பட்டு, இடிபாடுகளுக்கிடையே தவழ்ந்துபோய், உயிர்பிழைத்துவிட்டார்.

அந்த விமானத்தில் பயணித்த 65 பேரில் அவருடன் சேர்த்து 17 பேர்தான் உயிர் பிழைத்தார்கள்.

உண்மையிலேயே லார்சன் அதிர்ஷ்டசாலி. வழக்கமான பாதுகாப்பு நடவடிக்கைகளை அவர் அன்று மேற்கொள்ளவில்லை. பின்புற இருக்கையில் அமர்ந்திருந்த அவர், பாதுகாப்பு பெல்ட் அணியாமல் விமானப் பணியாளருடன் அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்.

விமான விபத்து ஏற்படும்போது, பாதுகாப்பு பெல்ட்டை அகற்ற முடியாதவர்கள், இடிபாடுகளிடையே சிக்கி வெளியேற முடியாதநிலையில் உயிரிழந்தது துரதிர்ஷ்டமே.

ஆபத்தான சூழ்நிலைகளில் துரிதமான செயல்பாடே உயிரை காப்பாற்றுகிறது. அப்போது என்ன செய்யக்கூடாது என்று சொல்வதை, என்ன செய்யவேண்டும் என்று சொல்வதாகவே பெரும்பாலானோர் புரிந்துக் கொள்வதாக, 1987இல் கிங்க்ஸ் கிராஸ் தீ விபத்தில் சிக்கி, உயிர்பிழைத்த ஜோன் லீச் கூறுகிறார்.

அந்த விபத்தில் 80 முதல் 90 சதவிகிதத்தினர் பொருத்தமற்ற முறையில் செயலாற்றியதாக, லெய்செஸ்டெர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரியும் ஜான் லீச் சொல்கிறார்.

2011இல் ஜப்பான் நிலநடுக்கத்தின்போது, இடிந்து விழுந்து கொண்டிருக்கும் பல்பொருள் அங்காடியில் இருந்து மது பாட்டில்களை எடுக்க, உயிரை பணயம் வைக்கும் புகைப்படங்கள் மக்களின் மனநிலையை தெளிவாகக் காட்டுகிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் டென்வெரில் விமான நிலையத்தில் விமானம் ஒன்று தீப்பற்றி எரியும்போது, வெளியேற்றப்பட்ட பயணிகள், தீயை வேடிக்கை பார்த்துக் கொண்டும், மொபைலில் செல்ஃபி எடுத்துக் கொண்டிருப்பதையும் பார்க்க முடிகிறது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption 2011 ஜப்பான் நிலநடுக்கத்தின்போது, பாதிக்கப்பட்ட பல்பொருள் அங்காடியில் இருந்து மது பாட்டில்களை எடுக்கும் மக்கள்

ஆபத்து காலத்தில் புத்திசாலித்தனம் உதவுவதில்லை, மூளை அவசரகாலத்திற்கு ஏற்றாற்போல் செயல்பட பழக்கப்படுத்தப்படவேண்டும். 2001இல் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழக பேராசிரியர், வைட்டுத் தீவுப்பகுதியில் படகு ஓட்டும்போது சீற்றமிகுந்த அலைகளால் அலைகழிக்கப்பட்டார்.

படகை இறுகப் பற்றிக்கொண்டிருந்த அவருக்கு தன்னிடம் மொபைல் போன் இருந்தது இருபது நிமிடங்களுக்கு பிறகே நினைவுக்கு வந்தது. இருக்கும் இடத்தில் இருந்து 5000 கிலோமீட்டர் தொலைவில் கேம்ப்ரிட்ஜில் இருக்கும் சகோதரிக்கும், பிறகு துபாயில் இருக்கும் தந்தைக்கும் தகவல் தெரிவித்தார். துரிதமாகவும், தெளிவாகவும் சிந்தித்து செயல்பட்ட குடும்பத்தினர் கடலோர காவல் படைக்கு உடனடியாக தகவல் கொடுத்து அவரது உயிரைக் காப்பாற்றினார்கள்.

உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையை எதிர்கொண்டால், தவிர்க்க வேண்டிய செயல்கள் என்ன?

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கடந்த ஆண்டு துபாயில் நடைபெற்ற விமான விபத்தில் விமானம் தீப்பற்றி எரியும்போதும் பயணிகள் தங்கள் உடமைகளை எடுப்பதற்காக நிற்கிறார்கள்

1. முடக்கம்

பேரழிவைப் பற்றி நினைத்தாலே பொதுமக்களின் ஆவேசம்தான் முதலில் நினைவுக்கு வருகிறது. குறைந்தபட்சம் திரைப்படங்களில் ஆபத்தான சூழலில் அனைவரும் தாறுமாறாக நடந்து கொள்வார்கள், ஓடுவார்கள். ஆனால் உண்மையில், ஒரு சிக்கலான சூழ்நிலையில் மனிதர்கள் உறைந்துபோய், எதுவும் செய்யாமல் திகைத்து நிற்பார்கள்.

அண்மையில் நடைபெற்ற லண்டன் பிரிட்ஜ் தாக்குதலின்போது, தாக்குதல்காரர்களை சமாளித்த ஒரு காவல்துறை அதிகாரியின் கருத்து இது, "மக்கள் செயல்படாமல் சிலைபோல் திகைத்து நின்றார்கள்". இதுதான் உலகளவிலான சாமானிய மக்களின் நிலை. இதுகுறித்து மனோதத்துவ நிபுணர்கள் சொல்வதைப் பார்ப்போம்.

செயலற்று நிற்பதாக வெளிப்படையாக தெரிந்தாலும், ஏற்படும் அச்சமானது மூளையில் தீவிரமாக பிரேக்குகளை போட்டு, அதன் செயல்பாட்டை முடக்குகிறது. உடலில் உருவாகும் அட்ரினலின் உந்துதல் உடல் மற்றும் தசைகளை இறுக்குகிறது; கழுத்தின் அடிப்பகுதியில் உள்ள "சிறிய மூளை" ஒரு சமிக்ஞையை அனுப்புகிறது.

எலி முதல் முயல் தொடங்கி அனைத்து விலங்கினங்களுக்கும் இதே நடைமுறை பொருந்தும். ஆனால் இந்த நடைமுறையில் இருந்து மாறுபட்டு செயல்படுவதுதான் வாழ்வா சாவா போராட்டம்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption 1987இல், பூமிக்கு அடியில் அமைந்திருக்கும் கிங்க்ஸ் கிராஸ் நிலையத்தில் ஏற்றப்பட்ட தீவிபத்தில் 31 பேர் உயிரிழந்தனர்

2. சிந்திக்கும் திறன் இழந்துபோவது

1990களின் தொடக்கத்தில் வளைகுடா போர் நடந்த காலகட்டத்தில், இராக்கின் தாக்குதலில் இருந்து இஸ்ரேல் தன்னை தற்காத்துக்கொண்டது. 1980களில் விஷவாயுவை இராக் ராணுவம் பெருமளவு பயன்படுத்தியதில் இருந்து, இஸ்ரேலிய அரசு மோசமான நிகழ்வுகளை சமாளிப்பதற்கு தயாராகிவிட்டது.

மூச்சுக்காற்றுக்கான பைகளும், நரம்பை செயல்படச் செய்யும் மாற்று மருந்துகளும் மக்கள் அனைவருக்கும் விநியோகிக்கப்பட்டது. வீடுகளில், காற்றுப்புகாத அறைகளில் பாதுகாப்பாக இருக்குமாறு இஸ்ரேல் நாட்டு மக்கள் அறிவுறுத்தப்பட்டனர். அபாய எச்சரிக்கை ஒலித்ததும் மக்கள் தங்கள் காற்று பைகளை எடுத்து மாட்டிக்கொள்வார்கள்.

ஜனவரி 19 முதல் 21 வரை மொத்தம் 23 தாக்குதல்கள் நடந்தன. அவற்றில் மக்கள் நெருக்கம் அதிகமன டெல் அவிவ் நகரில் 11 ஆயிரம் கிலோ (சுமார் 12 டன்) அளவிலான அதிக சக்திவாய்ந்த குண்டுகள் போடப்பட்டன.

ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்படாவிட்டாலும், ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டனர். 11 பேர் உயிரிழந்தனர், அதில் ஏழு பேர் ஆக்சிஜன் பையை பொருத்தும்போது, ஃபில்டரை திறந்துவிட மறந்ததால் இறந்தார்கள் என்பதுதான் சோகம். எவ்வளவு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்தாலும், ஒரு சிறிய கவனக்குறைவோ, தவறோ உயிரைப் பறித்துவிடுகிறது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption உலக வர்த்தக மையத் தாக்குதலின்போது, உயர்வான தளங்களில் இருந்தவர்களால் காப்பாற்றப்படுவதற்குமுன், முதல் ஐந்து நிமிடங்கள் செயல்படமுடியவில்லை

ஆபத்தான நேரங்களில், நமது மூளையின் செயல்பாடு படுமோசமாகிவிடுகிறது. முதலில் நம்மை சரியாக உணரவைக்கும் டோபோமைன் ஹார்மோன் உடலில் உருவாகவேண்டும். ஆபத்தை எதிர்கொள்ள உடலை தயார் செய்வதில் டோபோமைன் முக்கிய பங்காற்றுகிறது. மேலும், அட்ரினல் மற்றும் மன அழுத்தத்தை சமாளிக்கும் கோர்டிசோல் ரசாயனம் என உடலுக்கு தேவையான ஹார்மோன்களை உருவாக்குவதில் டோபோமைன் முக்கிய பங்காற்றுகிறது.

3. குறுகிய கோணம்

பிரச்சனை ஏற்படும்போது, அதை பல கோணங்களில் புதுமையாக சிந்திக்கவேண்டும் என்றுதான் அனைவரும் நினைப்போம். ஆனால், அதற்கு எதிர்மாறாக ஒரே செயலை தொடர்ந்து செய்வது இயல்பு. இது விமானங்களில் சீட்பெல்ட் விசயத்தில் அடிக்கடி நிகழ்வது.

ஆபத்துக்காலத்தில் மக்கள் பொதுவாக விமானத்தின் சீட்பெல்டுகளை கழற்ற இடுப்புப் பகுதியிலேயே தேட வேண்டியிருக்கிறது. சீட்பெல்டுகளின் முந்தைய வடிவமைப்பில் தலைவழியாக கழற்றும் முறையும் இருந்தது. அவை ஆபத்துக் காலத்தில் பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தின. சில நேரங்களில் விமானத்தில் பிரச்சனை ஏற்படும்போது, விமான ஓட்டிகள் ஒரே கருவியை கவனிப்பதிலேயே கவனத்தை செலுத்துவார்கள்.

படத்தின் காப்புரிமை Getty Images

4. வழக்கமான செயல்களில் தேங்கி நிற்பது

இது மற்றுமொரு முட்டுக்கட்டை. "ஆபத்து நேரத்தில், பர்ஸ், நகை போன்ற பொருட்களை எடுப்பதற்காக தங்கிவிடுவதால் பலர் உயிரை இழக்கின்றனர்" என்று ஹவாய் பல்கலைக்கழகத்தில் பேரிடர் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை நிபுணர் ஜேம்ஸ் கோஃப் கூறுகிறார்.

சுனாமிக்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கும் பகுதிகளில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் பல ஆண்டுகளாக ஈடுபட்டிருக்கும் அவர், சிக்கலான சூழ்நிலைகளை மனிதர்களின் செயல்பாடுகள் நம்ப முடியாததாக இருப்பதாக கூறுகிறார். தினசரி வாழ்க்கையில் ஏற்படும் சாதாரணமான நிகழ்வுகளில் கூட இதை காணமுடிகிறது என்கிறார் அவர்.

கடந்த ஆண்டு துபாய் சர்வதேச விமானநிலையத்தில், எமிரேட்ஸ் விமானம் 531, அவசரமாக தரையிறக்கப்பட்டபோது, பயணிகள் புகை சூழ்ந்த நிலையிலும், பைகளை எடுப்பதில் அதிக கவனம் செலுத்தினார்கள். அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாரும் உயிரிழக்கவில்லை என்றாலும், தீயணைப்பு வீரர் ஒருவர் உயிரிழந்தார். மக்களின் இதுபோன்ற செயல்பாடுகள் ஒரு வருடத்திற்கு முன்பும், 2013 இலும் இப்படித்தான் இருந்தது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஆபத்துக்காலத்திலும் மக்கள் நிதனமாக செயல்படுகிறார்கள்

நம்மை அறியாமல் நடக்கும் இந்த அனிச்சை செயல்களை எப்படி தவிர்ப்பது?

வழக்கமான நமது செயல்களுடன் நாம் இணைந்திருக்கிறோம். சாதாரண சூழ்நிலையில் நமது பையை பாதுகாக்கும் முயற்சியையே, அவசர காலத்திலும் எடுக்கிறோம். ஒருபோதும் எதிர்கொள்ளாத திடீர் சூழலில் எப்படி செயல்படுவது என்று நமக்கு தெரிவதில்லை. ஆபத்துகாலத்தில் நிகழ்காலத்தில் இருக்கவேண்டும், எதிர்காலத்தில் அல்ல என்கிறார் லீச்.

புதிய சூழ்நிலை என்பது மூளைக்கு அதிக சுமையை ஏற்படுத்தும், விரைவில் சோர்வடையச் செய்யும், இதை வெளிநாட்டிற்குப் போகும்போதும், புதிய வேலையை தொடங்கும்போதும் உணரலாம். புதிய சூழலில் செயல்படுவது மூளைக்கு சுமையாக இருக்கலாம்.

5. மறுப்பு

மிகவும் ஆபத்தான கட்டங்களில், ஆபத்தை மனம் முற்றிலுமாக புறந்தள்ளிவிடுகிறது. இது 50 சதவிகித மக்களுக்கு பொதுவானது. சுனாமியை பார்க்க கடலுக்கு அருகில் செல்வதை உதாரணமாக கூறலாம். 2004 ஆம் ஆண்டு இந்திய பெருங்கடலில் சுனாமி ஏற்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பார்த்தால் இது உண்மை என்பது விளங்கும். இதற்கு இரண்டு காரணங்களை சொல்லலாம். ஒன்று ஆபத்தை உணராதது, மற்றொன்று ஆபத்தை விரும்பாதது. இரண்டாவது மனப்போக்கை காட்டுத்தீ ஏற்படும் சமயங்களில் மக்களிடம் காணலாம்.

"வீடு தீப்பிடித்த சூழ்நிலையில் புகை வரும்வரை யாரும் வீட்டை விட்டு வெளியேறுவதில்லை. அது உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகளை குறைக்கிறது. தீயின் தாக்கத்தை சமாளிக்க போதுமான அனுபவம் அல்லது பயிற்சி இல்லாமல் உள்ளே சிக்கிக் கொண்டவர்களை வெளியேற்றுவதும் சிக்கல் நிறைந்தது என்கிறார் ரிஸ்க் ஃப்ரண்டியர்ஸ் என்ற அவசரகால பேரிடர் மேலாண்மை நிறுவனத்தில் பணிபுரியும் நிபுணர் ஆண்ட்ரூ கிஸ்ஸிங்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption போர்ச்சுகலில் அண்மையில் ஏற்பட்ட தீ விபத்தில், பலர் கடைசி நிமிடங்களில்தான் தப்பிக்க முயன்றனர்

இடர்பாடுகளை கணிப்பதில் மக்கள் மிகவும் மோசமாக செயல்படுவதாக விஞ்ஞானிகள் பல தசாப்தங்களாக கூறிவருவது குறிப்பிடத்தக்கது. புற்றுநோய் அறிகுறிகள் தெரிந்த பின்னரும் மருத்துவரை பார்க்கப் போவதை தாமதப்படுத்துவது, 9/11 உலக வர்த்தக மையத் தாக்குதலின்போது, உயரமான மாடிகளில் இருந்தவர்கள் மீட்கப்படுவதற்கு முன் சராசரியாக ஐந்து நிமிடங்கள் தாமதித்தது உட்பட பல சம்பவங்களை உதாரணம் காட்டமுடியும்.

ஆனால் சிலர் ஆபத்துகாலத்தில் துரிதமாக செயல்பட்டு உயிர்பிழைக்கிறார்கள் யோசி ஹாசனைப் போல.

2004இல் சுனாமி தாக்கியபோது, தாய்லாந்தில் தனது தோழியுடன் ஸ்கூபா டைவிங்கில் ஈடுபட்டிருந்தார் ஒரு பெண். கடலில் பல மைல்கள் தூரம் உட்புறமாக இருந்த அவர்களுக்கு அழுத்தம் ஏற்பட்டது. பிறகு தீவுக்கு திரும்பிவிட்டார்கள்.

சுனாமியால் தாக்கப்பட்ட தீவு சின்னாபின்னமாகிக் கிடந்தது. இடிபாடுகளும், சடலங்களும் சிதறிக்கிடந்த நிலையிலும் ஹோட்டலுக்கு போய் பையை எடுத்துவரலாம் என்ற அவரிடன், "உங்கள் ஹோட்டலே இப்போது இருக்காது, பை எங்கே இருக்கப்போகிறது" என்று படகு ஓட்டுனர் சொன்னாராம்.

படத்தின் காப்புரிமை Michael Spencer/ Wikimedia Commons
Image caption சுனாமித் தாக்குதலின்போது கடற்கரையில் மக்கள் இருந்தனர்

ஆபத்தான சூழ்நிலையில் என்ன செய்யவேண்டும்?

ஆபத்தான சூழ்நிலையில் நமது உள்ளுணர்வுகளை நம்ப முடியாவிட்டால், பிறகு எதை நம்பவேண்டும் என்று ஆச்சரியப்படுகிறீர்களா?

பேரிடரில் இருந்து உயிர் பிழைப்பது என்பது ஒருவரின் திட்டமிடலைப் பொறுத்தது என்கிறார் கோஃப். துரிதமாகவும், உடனடியாகவும் செயல்பட்டால் சுனாமியில் இருந்து தப்பிக்கலாம், ஆனாலும் கடினமானது என்கிறார் அவர்.

ராணுவத்தில் பணிபுரிந்திருக்கும் லீச், மயிர் கூச்செரியும் பல ஆபத்துகாலங்களில் செயல்பட்டிருக்கிறார். பிணைகைதிகளை காப்பாற்றியதில் இருந்து, தண்ணீரில் மூழ்கிய ஹெலிகாப்டரை மீட்பது என பல அவசரகால நடவடிக்கைகளில் பங்களித்திருக்கும் லீச், "உயிர் பிழைக்கும் நடவடிக்கைகள் உங்களின் இயல்பாக மாறும்வரை தொடர்ந்து பயிற்சி செய்யவேண்டும்" என்கிறார்.

ஆனால், சில சமயங்களில் அதிர்ஷ்டம் கைகொடுக்கும்

இந்தியன் ஏர்லைன்ஸ் 440 விமான விபத்தில் உயிர் பிழைத்த லார்சன் என்ன சொல்கிறார்? ஆபத்தில் இருந்து உயிர் பிழைத்தது பெரிய விசயமல்ல, அதன் பிறகு நடந்ததுதான் முக்கியமானது. சில உள்ளூர்வாசிகளால் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். முதல் மற்றும் இரண்டாம் கட்ட தீக்காயங்களால் பாதிக்கப்பட்ட அவரது முடி கருகிவிட்டது. தீயினால் தலையில் பாதிப்பு, இடுப்பெலும்பு உடைந்தது, சிறுநீர்ப்பை சேதமடைந்தது.

அவரது உள்ளுறுப்புகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் அறுவை சிகிச்சைகளால் சரிசெய்யப்பட்டன.. சில வாரங்களில் அவரது எடை குறையத் தொடங்கியது, காயங்கள் ஆறவில்லை. இப்படி சில பிரச்சனைகளை அவர் எதிர்கொண்டாலும், அவர் உயிருடன் இருக்கிறார் என்பதுதான் முக்கியமானது.

மிக மோசமான நிலைமைகளை எதிர்கொள்ளும்போது, அதற்கு தயாராவது, துரித செயல்பாடு, நடைமுறையில் மாறுதல், எதையும் தவிர்க்காமல் இருப்பது என பல வழிகளில் சிந்தித்து துரிதமாக செயல்படவேண்டும். ஆனால், சில சமயங்களில் அதிர்ஷ்டமும் கைகொடுக்கவேண்டும் என்று லார்சன் தனது அனுபவத்தில் இருந்து கூறுகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :