காலம் தாழ்ந்து அறிவிக்கப்படும் தமிழக அரசின் விருதுகளால் பலன் உண்டா?

  • 15 ஜூலை 2017

தமிழக அரசின் சிறந்த திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்களுக்கான விருதுகள் 2008ஆம் ஆண்டிலிருந்தே வழங்கப்படாத நிலையில், இவற்றில் சில ஆண்டுகளுக்கான விருதுப் பட்டியலை தற்போது அறிவித்துள்ளது தமிழக அரசு. அதேபோல, செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் வழங்கும் கருணாநிதி விருதுகள் 6 ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருந்த நிலையில், தற்போது பரிந்துரைகளைக் கோரியுள்ளது.

தமிழக அரசு வருடம் தோறும் தமிழ் சினிமா, தொலைக்காட்சி தொடர்பான விருதுகளை வழங்குவது வழக்கம். சிறந்த திரைப்படம், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் எனப் பல்வேறு விரிவுகளில் இந்த விருதுகளை வழங்குவது வழக்கமாக இருந்தது. அதேபோல எம்.ஜி.ஆர். அரசு திரைப்பட பயிற்சிக் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் எடுக்கும் குறும்படங்களுக்கும் விருதுகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாமல் தற்போது அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

ஆனால், 2008ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த விருதுகள் வழங்கப்படவேயில்லை. இந்த நிலையில் தி.மு.க. ஆட்சியின் இறுதிக் காலத்தில், 2009 மற்றும் 2010ஆம் ஆண்டுகளுக்கான சினிமா விருதுகளையும், 2008, 2009, 2010 ஆகிய ஆண்டுகளுக்குரிய அரசு திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்கான விருதுகளையும் தேர்வுசெய்ய உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி எஸ்.மோகன் தலைமையில் தேர்வுக் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு தனது அறிக்கையை அப்போதைய அரசிடம் தாக்கல் செய்துவிட்டது. ஆனால், அதற்குப் பிறகு ஆட்சி மாற்றம் ஏற்படவே விருதுகள் அறிவிக்கப்படவில்லை.

படத்தின் காப்புரிமை Getty Images

தொலைக்காட்சித் தொடர்களுக்கும் கடந்த 2006ஆம் ஆண்டிலிருந்து தமிழக அரசின் விருதுகள் வழங்கப்பட்டுவந்த நிலையில், அந்த விருதும் 2008ஆம் ஆண்டுக்குப் பிறகு வழங்கப்படவில்லை. அதற்குப் பிறகு, 2011ல் 2009, 2010ஆம் ஆண்டுகளுக்கான சின்னத்திரை விருதுகளை தேர்வுசெய்ய ஓய்வுபெற்ற நீதிபதி சண்முகம் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு தனது அறிக்கையை அளிப்பதற்கு முன்பே அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததால், அந்த விருதுகளும் பல ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருந்தன.

சினிமா விருதுகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருந்த நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இதுகுறித்து தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் வாகை சந்திரசேகர் சட்டப்பேரவையில் கேள்வியெழுப்பினார். அதற்குப் பதிலளித்த அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, விரைவில் குழு அமைக்கப்பட்டு, விருதுகள் வழங்கப்படும் என்று அறிவித்தார்.

அதன் பிறகு, ஓய்வு பெற்ற நீதிபதி எ. ராமன் தலைமையில் திரைப்பட விருதுகளுக்காக ஒரு குழுவும், தொலைக்காட்சி தொடர்களுக்கான விருதுகளைத் தேர்வு செய்ய எம். தணிகாச்சலம் தலைமையில் ஒரு குழுவும் அமைக்கப்பட்டன. முதல்வர் ஜெயலலிதா மறைந்துவிட்ட நிலையில், தற்போது இந்தக் குழுவின் பரிந்துரைகள் ஏற்கப்பட்டு, விருதுகளை அறிவித்துள்ளது தமிழக அரசு.

இவர்களில் விருதுகள் அறிவிக்கப்பட்ட பலர் இறந்தேபோய்விட்டனர். மாயாண்டி குடும்பத்தார் படத்தை இயக்கிய ராசு மதுரவன், 2009ஆம் ஆண்டின் சிறந்த பின்னணி பாடகர் விருதை வென்ற டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா, ஈரம் படத்தின் தொகுப்பாளர் கிஷோர் ஆகியோர் தற்போது உயிரோடு இல்லை.

படத்தின் காப்புரிமை facebook
Image caption மாயாண்டி குடும்பத்தார் படத்தை இயக்கிய ராசு மதுரவன்

தற்போதும்கூட 2014ஆம் ஆண்டுவரையே சினிமா விருதுகளும் 2013ஆம் ஆண்டு வரையிலான தொலைக்காட்சி விருதுகளும் மட்டுமே அறிவிக்கப்பட்டிருக்கின்றன. அதற்குப் பிந்தைய ஆண்டுகளுக்கு அறிவிக்கப்படவில்லை.

"ஒரு கலைஞனுக்கு மகிழ்ச்சியே அவர் அங்கீகரிக்கப்பட்டு பாராட்டப்படுவதுதான். அந்தப் பாராட்டும் அங்கீகாரமும் வாழும்வரை கிடைக்காவிட்டால் அர்த்தமே இல்லாமல் போய்விடும். தொலைக்காட்சிக்கான விருதுகளில் கே. பாலச்சந்தர் தயாரித்த இரு தொடர்களுக்கு விருது கிடைத்திருக்கிறது. வியட்நாம் வீடு சுந்தரத்திற்கு விருது கிடைத்திருக்கிறது. இருவருமே தற்போது உயிரோடு இல்லை" என்கிறார் நடிகையும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான குஷ்பு.

தி.மு.க. ஆட்சிக் காலத்தில் திரைப்படங்களுக்காக நீதிபதி எஸ். மோகன் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவில் இடம் பெற்றிருந்தார் குஷ்பு. "இப்போதாவது கொடுத்தார்களே என்பதில் சந்தோஷம்தான். மறுபடியும் ஏழு ஆண்டுகள் தள்ளிப்போடாமல், அடுத்தடுத்த ஆண்டு விருதுகளை அவ்வப்போது அறிவிக்க வேண்டும்" என்கிறார் அவர்.

இதேபோல, செம்மொழி மத்திய நிறுவனத்தின் கலைஞர் மு. கருணாநிதி விருதும் ஜெயலலிதா முதல்வரான பிறகு வழங்கப்படவேயில்லை.

செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் சென்னைக்கு வந்த பிறகு, சன் டிவியிலிருந்து தனக்கு வந்த பங்குத் தொகையில் இருந்து ஒரு கோடி ரூபாயை எடுத்து செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் ஓர்அறக்கட்டளையை நிறுவி, அதிலிருந்து வருடந்தோறும் தனது பெயரில் மூத்த தமிழ் அறிஞருக்கு விருது வழங்க ஏற்பாடு செய்தார் அப்போதைய முதல்வர் கருணாநிதி. இந்த விருதில் பத்து லட்சம் ரூபாய் பணமும் ஐம்பொன்னிலான கருணாநிதியின் உருவச் சிலையும் அடங்கும். செம்மொழி மாநாட்டிலேயே முதலாவது விருது, பின்லாந்து நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் அஸ்கோப்ர்ப்போலாவுக்கு வழங்கப்பட்டது.

படத்தின் காப்புரிமை facebook

அதுதான் முதலும் கடைசியுமாக வழங்கப்பட்ட கலைஞர் விருது. அதற்குப் பிறகு அந்த விருது வழங்கப்படவேயில்லை. ஆனால், அந்த அமைப்பால் வழங்கப்படும் தொல்காப்பியர் விருது, இளம் அறிஞர் விருதுகள் தொடர்ந்து வழங்கப்பட்டன.

"கருணாநிதியின் பெயர் இருந்ததாலேயே அந்த விருது வழங்கப்படாமல் நிறுத்தப்பட்டது" என்கிறார் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் துவங்கப்பட்டபோது அமைக்கப்பட்ட எண்பேராயம் குழுவில் இருந்தவரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளருமான து. ரவிக்குமார்.

"இதற்கு மாநில அரசை மட்டும் குற்றம் சொல்ல முடியாது. செம்மொழி நிறுவனத்தில் இருந்தவர்கள் விருதுக்கான பரிந்துரைகளை அனுப்பியிருக்க வேண்டும். ஆனால், அவர்கள் ஆட்சியாளர்களைக் குஷிப்படுத்தவோ அல்லது அச்சப்பட்டோ அந்த விருதுக்கு மட்டும் பரிந்துரைகளை அனுப்புவதைத் தவிர்த்தார்கள்" என்கிறார் அவர்.

ஆனால், அதிகாரிகள் இம்மாதிரி அச்சமடையக்கூடிய சூழலை ஏற்படுத்தியது அப்போதைய முதல்வர் ஜெயலலிதாதான் என்கிறார் ரவிக்குமார்.

Image caption ''அதிகாரிகள் இம்மாதிரி அச்சமடையக்கூடிய சூழலை ஏற்படுத்தியது அப்போதைய முதல்வர் ஜெயலலிதாதான்''

இப்போது 2011லிருந்து 2016ஆம் ஆண்டு வரையிலான ஆறு ஆண்டுகளுக்குப் பரிந்துரைகளைக் கோரியிருக்கிறது அந்த நிறுவனம்.

திரைப்பட விருதுகளைப் பொறுத்தவரை, திரைத் துறையைச் சேர்ந்தவர்கள் தமிழக அரசை பல முறை அணுகி, இந்த விருதுகளை அறிவிக்க செய்ததாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில், இந்தத் தாமதம் குறித்து பெரிதாக எதிர்க் குரல்கள் ஏதும் எழவில்லை. இப்போதாவது அறிவிக்கப்பட்டதே என்ற மகிழ்ச்சியே நிலவுகிறது.

இது தொடர்பாக அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, ஜெயலலிதா இருந்தபோதே விருதுக்கான பணிகள் துவங்கிவிட்டன; அவை இப்போது அறிவிக்கப்பட்டிருக்கின்றன என்று மட்டும் தெரிவித்திருக்கிறார்.

செம்மொழி நிறவனத்தின் கருணாநிதி விருது வழங்கப்படாதது குறித்து கடந்த 2014ஆம் ஆண்டில், தி.மு.க. தலைவர் கருணாநிதி கேள்வியெழுப்பியபோது, அப்போதைய உயர்கல்வித் துறை அமைச்சர் வீரமணி அதற்குக் கடுமையாக எதிர்வினையாற்றினார். அதற்குப் பிறகும் அந்த விருதுகள் வழங்கப்படாத நிலையில், தற்போது பழனிச்சாமி முதல்வரான பிறகு, விருதுகளை வழங்குவதற்கான பணிகள் துவங்கியிருக்கின்றன.

துணிவு பிறந்துவிட்டது!

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்