நேப்கின்னுக்கு ஜி.எஸ்.டி வரி: பெண்கள் சுகாதாரம் பாதிக்கப்படும் என குற்றச்சாட்டு

  • 17 ஜூலை 2017
இந்திய மாணவர் சங்கம் படத்தின் காப்புரிமை SFI
Image caption மதுரையில் இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் நேப்கின் மீதான ஜி.எஸ்.டி வரியை நீக்கக் கோரி மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெய்ட்லிக்கு நேப்கினை அனுப்பிவைத்தனர்.

மாதவிடாய் காலத்தில் பெண்களுக்குத் தேவைப்படும் நேப்கினுக்கு மத்திய அரசு 12 சதவீதம் ஜி.எஸ்.டி (சரக்கு மற்றும் சேவை வரி) வரி விதித்துள்ளதை கண்டித்து வரியை திரும்பப் பெறவேண்டும் என்று தமிழகத்தை சேர்ந்த பெண்கள் நல அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஜி.எஸ்.டி வரி விதிப்பால் நேப்கின் பயன்பாடு குறைந்து, பழைய முறையில் பெண்கள் துணியைப் பயன்படுத்தும் நிலை வரலாம் என்றும் அவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

சமூகவலைத்தளத்தில் மத்திய அரசுக்கு பெண்கள் கண்டனம்

கடந்த வாரம் மதுரையில் இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் நேப்கின் மீதான ஜி.எஸ்.டி வரியை நீக்கக் கோரி மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெய்ட்லிக்கு நேப்கினை அனுப்பிவைத்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

சமூக வலைத்தளங்களில் #Bleedwithoutfear என்ற தலைப்பில் பலரும் நேப்கினுக்கு விதிக்கப்பட்டுள்ள வரியை எதிர்த்து தங்களது கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.

நேப்கின் மீதான ஜிஎஸ்டி வரிவிதிப்பை எதிர்த்து 'ஷி' (she) என்ற முகநூல் பக்கம் ஜுலை மாதம் தொடங்கப்பட்டுள்ளது.

மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தப்படும் நேப்கின் அலங்கார பொருள் இல்லை என்றும், ஆணுறைக்கு முழு வரிவிலக்கு அளித்த அரசு, நேப்கினின் முக்கியத்துவத்தை அறிந்து உடனடியாக வரிவிலக்கு அளிக்கவேண்டும் என்று 'ஷி' முகநூல் பக்கத்தில் கருத்து வெளியிடப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை SFI
Image caption மதுரையில் இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் நேப்கின் மீதான ஜி.எஸ்.டி வரியை நீக்கக் கோரி போராட்டம் நடத்தினர்.

இதற்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பெண்களும் ஆதரவான கருத்துக்களை பதிவிட்டு, படங்கள் மற்றும் காணொளிகளை வெளியிட்டுவருகின்றனர்.

நேப்கினுக்கு இதுவரை இருந்த வரிவிதிப்பு என்ன, ஜி எஸ் டி வரிவிதிப்பை முழுவதுமாக நீக்கவேண்டும் என்று கோரிக்கை வலுப்பெற காரணம் என்ன, இதில் மத்திய மற்றும் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்று பிபிசி தமிழ் கேட்டறிந்தது.

வரிவிதிப்பு நேப்கின் பயன்பாட்டை நிறுத்துமா?

நேப்கின் மீதான வரியை முழுவதுமாக நீக்க வேண்டும் என்று கோரி தமிழக அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது என திருச்சியில் உள்ள மாதவிடாய் சுகாதார மேலாண்மை கூட்டமைப்பிற்கு தலைமை வகிக்கும் கண்ணகி சந்திரசேகர் தெரிவித்தார்.

''மாதவிடாய் காலத்தில் தூய்மையாக இருக்க வேண்டும் என்பது அவசியம். மிக சமீபமாகவே பெண்கள் நேப்கினை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். அவர்களை ஊக்குவிக்கும் வகையில், பயன்படுத்திய நேப்கினை எவ்வாறு சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காமல் அகற்றுவது என்று சொல்லிக் கொடுக்கவேண்டிய நேரம் இது. தற்போது அதிக வரிவிதித்தால், நேப்கின் விலை கூடும், அதனால் வாங்குவதைப் பலர் நிறுத்த வாய்ப்புள்ளது,'' என்றார்.

நேப்கின் விழிப்புணர்வு கூட்டம்

நேப்கின் பயன்பாட்டை அரசு பள்ளிகளில் ஊக்குவிக்கும் நிகழ்வு கடந்த வாரம் தேவகோட்டையில் உள்ள சேர்மன் மாணிக்கவாசகர் அரசு உதவி பெறும் பள்ளியில் நடத்தப்பட்டது.

பெண் குழந்தைகள், அவர்களின் தாய்மார்களுக்கு சிறப்பு முகாம் நடத்தவேண்டிய தேவை இருந்தது என அப்பள்ளியில் தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

''மாணவிகளிடம் ஏன் மாதவிடாய் காலத்தில் சுகாதரமற்ற முறையில் இருக்கிறார்கள் என்று கேட்டபோது, அவர்களின் பெற்றோருக்கு கூட அது குறித்த புரிதல் இல்லை என்று தெரியவந்தது. மாதவிடாய் காலத்தில் எவ்வாறு சுத்தமாக இருக்கவேண்டும் என்ற விவரங்களை மாணவிகள் மற்றும் பெற்றோருக்கு உள்ளூர் மருத்துவ குழுவினர் விளக்கினர். துணி பயன்பாடு சிறுபிள்ளைகளுக்கு ஏற்றதாக இல்லை என்றும் பழைய துணியை பயன்படுத்துவது போன்ற பழக்கத்தை நிறுத்தி, ஒவ்வொரு முறையும் புதிய பருத்தி நேப்கினை பயன்படுத்தவேண்டும் என்று தெளிவுபடுத்தப்பட்டது,'' என்றார்.

பத்து வயதில் உள்ள குழந்தைகள் கூட பருவமடைந்து விடுகிற சூழலில், நேப்கினுக்கு அதிக வரி விதித்தால், அது குழந்தைகளின் சுகாதாரத்தை சீர்குலைத்துவிடுமோ என்ற பயம் உள்ளது என்கிறார்.

வாழ்வாதாரமான நேப்கின் தயாரிப்பு தொழில்

நேப்கின் பயன்பாடு என்ற அளவில் மட்டுமல்லாமல் நேப்கின் தயாரிப்பு என்ற தொழில் தமிழகத்தில் 140க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வாழ்வாதாரமாக உள்ளது என்கிறார் சென்னையைச் சேர்ந்த ஆர்.சுஜாதா.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption தயாரிப்பு மற்றும் விற்பனை என இரண்டு பக்கமும் சுய உதவிக்குழு பெண்கள் வரியைச் செலுத்தியாகவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது

மாதவிடாய் சுகாதாரம் தொடர்பான தமிழக அரசின் திட்டங்களை செயல்படுத்த, சுயஉதவிக் குழுக்களுக்கும் அரசுக்கும் இடையில் ஆலோசகராக சுஜாதா பணியாற்றுகிறார்.

''நேப்கின் தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் மீது 6 சதவீத ஜிஎஸ்டி வரி செலுத்தவேண்டும். தயாரிப்புக்குப் பிறகு, நேப்கின் விற்கப்படும்போது 12 சதவீத வரியை விலையோடு சேர்த்து விற்கவேண்டும் என்பதால், தயாரிப்பு, விற்பனை என இரண்டு பக்கமும் சுய உதவிக்குழு பெண்கள், வரியைச் செலுத்தியாகவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது,'' என்கிறார் சுஜாதா.

உள்ளூர் மற்றும் பன்னாட்டு நிறுவன நேப்கின் விலை என்ன ?

சாதாரணமாக உள்ளூரில் தயாரிக்கப்படும் நேப்கின் ஒன்று ரூ.3 முதல் ரூ.5 விலைக்கு விற்கப்படுகிறது. பன்னாட்டு நிறுவனங்களின் நேப்கின் குறைந்தபட்சம் அதே விலையில் அல்லது ரூ.4க்கு கிடைக்கிறது.

12% வரிவிதிப்பால், பன்னாட்டு நிறுவங்களுடன் போட்டிபோட்டு, உள்ளூர் தயாரிப்பாளர்கள், விலையை குறைக்கமுடியாத சூழல் ஏற்படும் என்கிறார் சுஜாதா.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
18 சதவீத வரி ஆடம்பரம் என நினைக்கிறதா அரசு?

''சமீபத்தில் உலக வங்கிக்காக நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் தமிழகத்தில் 78 சதவீத பெண்கள் நேப்கின் பயன்படுத்துவது தெரியவந்துள்ளது. மேலும் நேப்கின் பயன்பாடு பற்றி பொது தளத்தில் விவாதிக்கும் நிலை தமிழகத்தில் உள்ளது,'' என்று கூறிய சுஜாதா, அதிக வரி விதிப்பு பலரை மீண்டும் துணியை பயன்படுத்த வேண்டும் என்ற நிலைக்குக் கொண்டு செல்லும் என்றார் சுஜாதா.

தமிழக அரசின் நிலைப்பாடு என்ன?

இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசின் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் கேட்டபோது நேப்கின் உள்பட பல அத்தியாவசிய பொருட்களுக்கு வரி விலக்கு வேண்டும் என்பதை மத்திய அரசிடம் முதல்வர் எடுத்துரைக்கவுள்ளார் என்று கூறினார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption சாதாரணமாக உள்ளூரில் தயாரிக்கப்படும் நேப்கின் ஒன்று ரூ.3 முதல் ரூ.5 விலைக்கு விற்கப்படுகிறது.

''ஆவணங்களைத் தயாரிக்க, கூட்டங்கள் நடத்தப்பட்டன. நேப்கின் பெண்களுக்கு மிகவும் தேவையான ஒன்று என்பதால், அதற்கு வரி விலக்கு கோர வேண்டும் என்பது எங்களின் எண்ணம்.பெண்களின் நலனில் அக்கறை கொண்ட எங்கள் அரசு அதற்கான முயற்சிகளை எடுத்துவருகிறது,'' என பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

ஆனால் நேப்கினுக்கு விதிக்கப்பட்டுள்ள வரி குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் ஜி.எஸ்.டி வரி விதிப்பு முன்னர் இருந்த வாட்(VAT) மற்றும் கலால் வரிகளை போல அதே அளவு அல்லது குறைவாக உள்ளதாக தெரிவித்துள்ளது. ''நேப்கினுக்கு கலால் வரி 6 சதவீதம், வாட் வரி 5 சதவீதம் இருந்தது. தற்போது கூட்டாக ஜி எஸ் டி 12 சதவீதம் என்று முடிவுசெய்யப்பட்டது,'' என்று தெரிவித்தது .

மேலும் நேப்கினுக்கு வரியை முழுதுமாக நீக்கினால், இறக்குமதியாகும் நேப்கின் வரியில்லாமல் விற்கப்படும்போது, உள்ளூரில் உற்பத்தியாகும் நேப்கின் நிறுவனங்களுக்கு அதிக நஷ்டம் ஏற்படுத்தும் நிலை உருவாகும் என்று கூறியுள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :