தமிழக விவசாயிகளின் நூதனப் போராட்டம் டெல்லியில் மீண்டும் தொடங்கியது

  • 17 ஜூலை 2017
சங்கிலியால் பிணைத்துக் கொண்டு போராட்டம்
Image caption சங்கிலியால் பிணைத்துக் கொண்டு போராட்டம்

தமிழக விவசாயிகள் டெல்லியில் மீண்டும் தங்களது நூதனப் போராட்டத்தைத் துவக்கியிருக்கிறார்கள்.

ஏற்கெனவே, ஏப்ரல் 23-ஆம் தேதி வரை 41- நாட்கள் டெல்லியில் போராட்டம் நடத்திய அவர்கள், தாற்காலிகமாக தங்கள் போராட்டத்தைக் கைவிட்டு தமிழகம் திரும்பினார்கள்.

இந் நிலையில், மீண்டும் அவர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை டெல்லிக்கு வந்தார்கள். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்புச் சங்கத்தின் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் பிரதமர் வீட்டுக்குச் செல்ல முயன்ற விவசாயிகளை போலீசார் தடுத்து, நேற்று நாள் முழுவதும் காவல் நிலையத்தில் வைத்திருந்தனர்.

இதைத் தொடர்ந்து இன்று திங்கட்கிழமை காலை முதல் ஜந்தர் மந்தர் பகுதியில் மீண்டும் தங்களது போராட்டத்தை விவசாயிகள் துவக்கினார்கள். கால், கைகளை சங்கிலியால் பிணைத்த பூட்டுப் போட்டுக் கொண்டு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து, செய்தியாளர்களிடம் பேசிய அய்யாக்கண்ணு, மத்திய அரசின் சார்பில் இணை அமைச்சர் அய்யாக்கண்ணு தங்களிடம் அளித்த உறுதிமொழி நிறைவேற்றப்படவில்லை என்று சுட்டிக்காட்டினார். அடுத்த ஓராண்டுக்கு கடன்கள் வசூலிக்கும் நடவடிக்கையில் வங்கிகள் இயங்காது என்பது உள்பட பல உறுதிமொழிகளை அவர் அளித்தாலும், அப்படி நடக்கவில்லை என்றும், வங்கிகள் கெடுபிடியாக வசூலிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

அதேபோல, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும் விவசாயிகள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெறுவது உள்பட பல்வேறு உறுதிமொழிகளை அளித்தாலும் அதைச் செய்யவில்லை என்று அய்யாக்கண்ணு தெரிவித்தார்.

இந்த நிலையில்தான், தாங்கள் மீண்டும் டெல்லியில் போராட்டத்தைத் துவக்கியிருப்பதாகவும், அடுத்த 100 நாட்களுக்கு, ஒவ்வொரு நாளும் நூதன வழியில் போராட்டம் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும், விவசாய உற்பத்திப் பொருட்களுக்கு லாபகரமான விலை வழங்க வேண்டும், விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்பட முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதையும் படிக்கலாம்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்