சசிகலாவுக்கு சிறப்பு சலுகையா? கேள்வி எழுப்பியதால் டிஐஜி ரூபா பணியிட மாற்றமா?

  • 18 ஜூலை 2017

பெங்களுரு பரப்பன அக்ரஹார சிறையில் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு தனி சமையலறை உள்பட பல்வேறு சிறப்பு சலுகைகள் ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளதாக ஆதாரத்துடன் அம்பலப்படுத்தியதாகச் சொல்லப்படும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஐ.பி.எஸ் அதிகாரி ரூபா திவாகர், போக்குவரத்து காவல் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

படத்தின் காப்புரிமை Facebook

பணியிட மாற்றம் செய்யப்பட்டதை அடுத்து, அவரைப் பற்றி சமூக வலைத்தளங்களில் அவர் இதற்கு முன்னர் வகித்த பதவிகள், அவர் பணியாற்ற விதம் பற்றி விவாதிக்கப்பட்டு வருகிறது.

ரூபாவின் ட்விட்டர் பக்கத்தில் 14,000க்கும் மேற்பட்டோர் அவரை பின்தொடருகின்றனர். அவர் இடமாற்றம் செய்யப்பட்ட செய்தி வெளியானவுடன், பலரும் அதை கண்டித்ததோடு மட்டுமல்லாமல் அவரின் நடவடிக்கை நேர்மையானது என்று கூறி வாழ்த்து செய்திகளை பதிவிட்டனர்.

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ரூபாவின் பெற்றோர் அரசு அதிகாரிகளாக பணியாற்றியவர்கள், அவரது கணவர் முனிஷ் மௌட்கில் அதே மாநிலத்தில் குடிநீர் மற்றும் சுகாதார துறையில் பணியாற்றும் ஐஏஎஸ் அதிகாரி ஆவார்.

2000-ஆவது ஆண்டில் இந்திய குடிமைப் பணி தேர்வில் வெற்றிபெற்று ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வானார்.

தொடர்புடைய செய்திகள்:

சைபர் குற்றப்பிரிவின் முதல் பெண் கண்கானிப்பாளாராக பொறுப்பேற்ற ரூபா தனிப்பட்ட நபர்களின் ஏடிஎம் கார்டு தகவல்களை விற்கும் நிறுவனங்களை கண்டறிவதில் சிரமம் உள்ளது என்றும் சைபர் குற்றத்தில் ஈடுபட்டுள்ள வெளிமாநிலத்தவர்களை கண்டறிய அந்தந்த மாநில காவல்துறையின் ஆதரவு கிடைப்பதில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

2009ல் யாதகிரி என்ற புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டபோது அதன் முதல் காவல்துறை கண்காணிப்பாளராக பணியமர்த்தப்பட்டவர்.

பொருளாதார குற்றப்பிரிவு மற்றும் பெங்களூரு நகரத்தின் ஆயுத பாதுகாப்பு படை பிரிவின் உதவி காவல் ஆணையாளராக பதவி வகித்தவர்.

2013ல் முன்னாள் முதல்வர் எடியூரப்பா உட்பட பலருக்கு அங்கீகாரம் இன்றி அளிக்கப்பட்டிருந்த காவல்துறையின் பாதுகாப்பு வாகனங்கள் மற்றும் அதிகாரிகளை திரும்பப்பெற்றார்.

தொடர்புடைய பிற செய்திகள்:

2016ல் கர்நாடகாவில் அனுபம் ஷெனாய் என்ற மூத்த பெண் ஐபிஎஸ் அதிகாரி தொழிலாளர் நலத்துறை அமைச்சருடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்தபோது, சிக்கல்கள் வந்தால், வேலையை ராஜினாமா செய்வது தீர்வாகாது என்று கருத்து தெரிவித்திருந்தார்.

2016ல் சிறந்த சேவையைப் பாராட்டி குடியரசுத் தலைவரின் பதக்கம் ரூபாவுக்கு வழங்கப்பட்டது.

சமீபத்தில் சிறைத்துறை டிஐஜியாக பொறுப்பேற்ற ரூபா, சிறையில் நுழையும் போதே கைதிகளுக்கு முழு உடல் பரிசோதனை செய்யவேண்டும் என்ற விதியை கொண்டுவந்தார்.

பிபிசியின் பிற செய்திகள்:

1973, இரவு 10.30, சென்னை - டெல்லி விமானம் சிதறிய நேரம்...

'பேச்சாற்றல், நீண்ட அரசியல் அனுபவம், சர்ச்சை கருத்துக்கள்' - வெங்கைய நாயுடு யார்?

சௌதி: மரபை மீறி கவர்ச்சி ஆடை அணிந்து காணொளி வெளியிட்ட பெண்ணால் பரபரப்பு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்