`அவரது செயலை சகிக்க முடியாமல் தயக்கத்தோடு அம்மாவிடம் சொன்னேன்'

  • சிந்துவாசினி திரிபாதி
  • பிபிசி ஹிந்தி
உருவகப்படம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

உருவகப்படம்

'சித்தப்பா தினமும் வீட்டுக்கு வருவார். அனைவரிடமும் கலகலப்பாக சிரித்துப் பேசுவார், தின்பண்டங்கள் வாங்கிவருவார். அவரை எல்லோருக்கும் பிடித்தாலும் எனக்கு அவரை ஒருதுளி கூட பிடிக்காது.'

'சித்தப்பா வீட்டுக்கு வந்ததும் அவரது மடியில் என்னை உட்கார வைத்து தொட்டுத்தொட்டு பேசுவார். மீசையால் என் முகத்தில் உரசுவார். அவர் மடியில் இருந்து எழுந்து ஓடிவிடலாம் என்று தவிப்பேன். அவரது கன்னத்தில் பளார் பளார் என்று அறைய வேண்டும், நகங்களால் பிறாண்ட வேண்டும் என்று உத்வேகம் உந்தும்.'

இதைச் சொல்லும் 23 வயது அனாமிகாவின் முகத்தில் வேதனையும், கண்ணில் சீற்றமும் பொங்குகிறது. ஏழு அல்லது எட்டு வயது சிறுமியாக இருந்தபோது அவருக்கு ஏற்பட்ட அனுபவத்தின் சுவடுகள் இப்போதும் மனதில் ஆழமாக பதிந்திருக்கின்றன.

'குற்றவாளி அருகிலேயே இருப்பார்'

குடும்பத்திற்கு நெருங்கியவர்களாலேயே பெரும்பாலானோர், பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு ஆளாவதே இந்தக் கொடுமையின் உச்சகட்டம்.

எதிரி, உறவினர், நண்பர் என்ற முகமூடியில் நம்மைச் சுற்றியே இருப்பதால், குழந்தைகள் சுலபமாக பாலியல் சீண்டல்களுக்கு ஆளாகின்றனர்.

குழந்தைக்கு இதைப் பற்றி போதுமான விழிப்புணர்வு இல்லாவிட்டாலும் கூட, எப்போதாவது அதைப் பற்றிச் சொன்னால் குடும்பத்தினர் அதை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை.

பட மூலாதாரம், Getty Images

தீர்வு காண்பது அடுத்த கட்டம், அதை விசாரிப்பது கூட இல்லை என்பது வேதனையளிக்கிறது.

உண்மையிலேயே இதுபோன்ற பாலியல் துஷ்பிரயோகங்கள் பற்றி புகாரளிப்பதோ, விசாரிப்பதோ அவ்வளவு கடினமானதா? நெருக்கமான உறவினரே இதுபோன்ற பலாத்காரச் செயல்களில் ஈடுபடும்போது அந்தப் பெண்ணுக்கு ஏற்படும் மன உளைச்சல் எப்படிப்பட்டது? அது அந்தப் பெண்ணின் மனதில் ஏற்படுத்தும் தாக்கங்கள் என்ன? இதுபோன்ற நிலையில் என்ன செய்வது? யாரிடம் உதவி கேட்பது?

இதுபோன்ற சில பல முக்கியமான கேள்விகளை முன்வைத்து தீர்வுக்கான தேடலுக்காக பல கோணங்களில் அலசி ஆராயும் பிபிசியின் தொடர் இது.

இந்தத் தொடரில் பெண்களும், இளம் சிறுமிகளும் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்கின்றனர். மேலும், பெண்களுக்கான சட்ட உரிமைகள் மற்றும் கிடைக்கக்கூடிய உதவிகள் குறித்தும் இந்தத் தொடரில் ஆராயலாம்.

இந்தத் தொடரின் முதல் பகுதியில் அனாமிகாவின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) சீற்றத்தையும், மனசெல்லாம் பரவிக்கிடக்கும் வலியையும் பதிவு செய்கிறோம்.

உதவி

அனாமிகா சொல்கிறார், "அவரது செயலை சகிக்க முடியாமல் போனபோது, தயக்கத்துடன் அம்மாவிடம் இதைப் பற்றிச் சொன்னேன். கெளரவ் சித்தப்பாவின் மீசை என் முகத்தில் படுவது எனக்குப் பிடிக்கவில்லை, எப்படியோ இருக்கிறது என்று சொன்னேன். வேறு எதாவது செய்தாரா என்று அம்மா கேட்டார், நான் இல்லை என்றே தலையசைத்தேன்".

பட மூலாதாரம், Getty Images

அவர் மேலும், "அதன்பிறகு கெளரவ் சித்தாப்பாவை என்னிடம் நெருங்கவிடாமல் அம்மா பார்த்துக்கொண்டார். அவரை முன்னறையிலேயே உட்கார வைத்து பேசத் தொடங்கிவிடுவார் அம்மா. என்னைப் பற்றி சித்தப்பா விசாரித்தால், நான் படித்துக் கொண்டிருக்கிறேன் அல்லது விளையாடப் போயிருக்கிறேன் என்று சொல்லி அவரை நான் சந்திப்பதை அம்மா தவிர்த்துவிடுவார்" என்றார்.

அம்மாவுக்கு கூட அந்த விஷயம் மறந்து போயிருக்கும். ஆனால், பாலியல் துன்புறுத்தல் அல்லது அது தொடர்பான எதாவது வார்த்தைகளை கேட்கும்போது, மனதில் அழுந்திக்கிடக்கும் பழைய நினைவுகள் பீறிட்டு எழும்.

இந்த ஆதங்கமும், கோபமும் அனாமிகா என்ற ஒரு பெண்ணுடையது மட்டுமல்ல… எண்ணிக்கைக்குள் அடக்க முடியாத அளவிலான குழந்தைகள், சிறுமிகள், பதின்ம வயது பெண்கள், என எல்லா வயதை சேர்ந்தவர்களுக்கும் இதுபோன்ற அனுபவங்கள் ஏற்பட்டிருக்கிறது.

உற்றார்-உறவினர்கள், சொந்த-பந்தங்கள், அண்டை-அசலார் என குடும்பத்திற்கு நெருக்கமானவர்களே பெண்களை பாலியல்ரீதியாக துன்புறுத்துவதாக புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

அனாமிகாவை அதிர்ஷ்டசாலி என்றே கூறலாம். ஏன் தெரியுமா? அவர் சொன்னதைப் புரிந்து கொண்டு அதற்கான தீர்வை ஏற்படுத்திக் கொடுத்தார் தாய். ஆனால், இதுபோன்ற உதவியும், ஆதரவும் மிகச்சிலருக்கே கிடைக்கிறது என்பது வேதனை.

பட மூலாதாரம், Getty Images

புள்ளிவிவரங்கள்

தேசிய குற்ற ஆவண பணிப்பகத்தின் புள்ளிவிவரங்களின்படி, பெண்களுக்கு எதிராக பதிவாகியுள்ள 3,27,394 குற்ற வழக்குகளில் கற்பழிப்பு வழக்குகள் 34,651 என்றால், 33,098 வழக்குகளில் பாதிக்கப்பட்டவர், குற்றவாளியை நன்கு அறிந்தவர் என்பது அதிர்ச்சியளிக்கும் தகவல்.

பெண்களின் நலனுக்காக பணிபுரியும் 'பிரேக்த்ரூ' அமைப்பின் உயரதிகாரி பாலின் கோமேஜ், ''பேத்தியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய தாத்தா, மாமியாரை பலாத்காரம் செய்த மருமகன், மகளை காம இச்சையுடன் அணுகிய தந்தை, சகோதரியை பாலியல் வன்கொடுமை செய்த சகோதரன்'' என கேட்பதற்கே அதிர்ச்சியளிக்கும், ஆனால் அசலான சம்பவங்களை பார்த்திருக்கிறோம் என்கிறார்.

இதுபோன்ற சூழ்நிலையில் எப்படி செயல்படவேண்டும்?

இதற்கும் பதிலளிக்கிறார் பாலின். ''நீங்கள் சொல்வதை குடும்பத்தினர் அலட்சியப்படுத்தினால், அவர்கள் நம்பும் வரை அழுத்தமாக சொல்லிக் கொண்டே இருங்கள்.''

''பலரிடம் சொல்லுங்கள். பள்ளியிலும் கல்லூரியிலும் சொல்லுங்கள். காவல் துறை அல்லது நீதிபதியிடம் சென்று உதவி கேளுங்கள். உதவி எண்களை தொடர்பு கொள்ளுங்கள். எதாவது செய்யுங்கள், ஆனால் மனதிற்குள் வைத்து புழுங்காதீர்கள்"

மறுவாழ்வு மற்றும் மேம்பாட்டு மையத்தின் மனநல மருத்துவர் டாக்டர் ஷ்ரவஸ்தி வெங்கடேஷ் சொல்கிறார்: "பாலியல் துன்புறுத்தல்களால் பாதிக்கப்பட்டவர்ளுக்கு கோபமும் குற்ற உணர்வும் ஏற்படுவதோடு, ஏமாற்றப்பட்டதாகவும் உணர்கிறார்கள்."

"பல சமயங்களில் பாலியல் துன்புறுத்தல் நடந்த பல ஆண்டுகளுக்கு பிறகும் அதிலிருந்து முழுமையாக வெளிவரமுடியாமல் தவிக்கும் பெண்களையும் பார்த்திருக்கிறேன். அது போன்ற சமயங்களில் மனநல ஆலோசகர்களிடம் பேசுவது உதவியாக இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது."

பாலின் கோமேஜ் சொல்கிறார், ''பல நேரங்களில் குற்றத்திற்கு எதிராக குரல் எழுப்ப விரும்பினாலும், சட்டம் மற்றும் பிற உதவிகள் பற்றிய தெளிவான புரிதல் இல்லாமல் மனதை மூடி மெளனியாக இருக்கிறார்கள். இது மிகவும் ஆபத்தானது''.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்