அமெரிக்க தேர்தலில் ரஷ்ய தலையீடு விசாரணையில் சாட்சியமளிக்கும் டிரம்ப் மகன்

  • 20 ஜூலை 2017
டொனால்ட் ட்ரம்ப் படத்தின் காப்புரிமை Reuters
Image caption ரஷ்ய அதிகாரிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக டொனால்ட் ட்ரம்ப் ஜூனியர், ஜேர்டு குஷ்னர் மற்றும் பால் மனாஃபோர்ட் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

2016-ம் ஆண்டின் அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் குறுக்கீடு இருந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மூத்த மகன், அவரது மருமகன் மற்றும் தேர்தல் பிரசாரக்குழு நிர்வாகி ஆகியோர் செனட் குழு முன்னிலையில் சாட்சியமளிக்கவுள்ளனர்.

ரஷ்ய அதிகாரிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக டொனால்ட் டிரம்ப் ஜூனியர், ஜேர்டு குஷ்னர் மற்றும் பால் மனாஃபோர்ட் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

ஆனால், டிரம்ப் மற்றும் அவரது கூட்டாளிகள் இதை மறுத்துள்ளனர்.

இதனிடையே, இந்த விசாரணையில் இருந்து அமெரிக்க அரச தலைமை வழக்கறிஞர் ஜெஃப் செசன்ஸ் தன்னைத்தானே விடுவித்துக்கொள்ள இருந்தது முன்னரே எனக்கு தெரிந்திருந்தால் அவரை தலைமை வழக்கறிஞராக முன்னிறுத்தியிருக்க மாட்டேன் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த ஒரு நேர்காணலில், தலைமை வழக்கறிஞரின் முடிவு "மிகவும் நியாயமற்றது" என்று டிரம்ப் தெரிவித்திருந்தார்.

"செசன்ஸ் தன்னை வழக்கிலிருந்து விடுவித்துக் கொள்ளாமல் இருந்திருக்க வேண்டும், ஒருவேளை அவர் தன்னைத் தானே விடுவித்துக் கொள்வதாக இருந்தால், அவர் இந்தப் பணியில் இணைவதற்கு முன்னரே என்னிடம் கூறியிருக்க வேண்டும், நான் வேறு யாரேனும் ஒருவரை தேர்ந்தெடுத்திருப்பேன்" என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய விவகாரம் தொடர்பாக மார்ச் மாதம் செனட் முன் நடைபெற்ற உறுதிப்படுத்துதல் விசாரணையின் போது அமெரிக்காவுக்கான ரஷ்ய தூதரை தான் சந்தித்ததை தெரிவிக்கத் தவறியதால், செசன்ஸ் விசாரணையில் இருந்து தன்னைத்தானே விடுவித்துக் கொண்டார்.

டிரம்பின் சமீபத்திய கருத்துகள் குறித்து எந்தவிதமான கருத்தையும் செசன்ஸ் தெரிவிக்கவில்லை.

ஜி-20 மாநாட்டில் இரவு விருந்தின் போது ரஷ்ய அதிபர் விளாடிமர் புடினுடன் நடத்திய 15 நிமிட பேச்சுவார்த்தையின் போது, சாதாரணமான குசலம் விசாரிக்கும் வகையிலான உரையாடல்களே பரிமாறப்பட்டன என்று அதே நேர்காணலில் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

தத்தெடுப்பது குறித்தும் தாங்கள் பேசியதாக டிரம்ப் தெரிவித்ததை நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ரஷ்ய அதிகாரிகளுக்கு எதிராக அமெரிக்கா மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை எழுப்பியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ரஷ்ய அனாதைக் குழந்தைகளை அமெரிக்கர்கள் தத்தெடுப்பதற்கு ரஷ்யா தடை விதித்தது.

டிரம்ப் மற்றும் புடின் இடையே நடைபெற்ற இரண்டாவது சந்திப்பை ஊடகங்கள் வெளிப்படுத்திய பின்னர்தான் வெள்ளை மாளிகை அந்த சந்திப்பை உறுதிப்படுத்தியது.

டிரம்ப் ஜூனியர் மற்றும் மனஃபோர்ட் ஆகியோர் ஜூலை 26-ம் தேதியன்று நடைபெறவுள்ள விசாரணையின் போது சாட்சியமளிக்க வேண்டும் என்று செனட் நீதித்துறைக் குழு புதன்கிழமை அன்று கூறியது.

ஜூலை 24-ம் தேதி நடைபெறவுள்ள ரகசிய அமர்வில் புலானாய்வுக் குழுவின் கேள்விகளுக்கு குஷ்னெர் பதிலளிக்கவுள்ளார்.

டிரம்ப் ஜூனியர் வெளியிட்ட மின்னஞ்சல்களின் அடிப்படையில், கடந்த ஆண்டு அமெரிக்க தேர்தலில் டிரம்ப்புக்கு எதிராக போட்டியிட்ட ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் மீது சேதம் விளைவிக்ககூடிய ஆதாரங்களை தருவதாக உறுதியளித்த ரஷ்ய வழக்கறிஞருடன் நடத்திய சந்திப்பில் இவர்கள் அனைவரும் கலந்து கொண்டது தெரியவந்தது.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
டொனால்ட் ட்ரம்பின் செல்வாக்கு மகனால் சரியுமா?

தற்போது பரப்புரையாளராக இருக்கும் , முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் புலனாய்வுத்துறை அதிகாரி ஒருவரும் 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் 9-ம் தேதி நியூயார்க் நகரில் உள்ள டிரம்ப் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் கலந்து கொண்டார்.

கடந்த ஆண்டு அமெரிக்க தேர்தலில், டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற உதவி செய்யும் முயற்சியில் ரஷ்யா தலையிட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகள் பற்றி பல்வேறு காங்கிரஸ் குழுக்கள் மற்றும் மத்திய புலனாய்வாளார்கள் ஆராய்ந்து வருகின்றனர்.

ரஷ்ய பிரமுகர்களுக்கும் டிரம்பின் தேர்தல் பிரச்சார குழு உதவியாளர்களுக்கும் இடையே நடைபெற்ற ராஜீயரீதியில் அல்லாத பேச்சுவார்த்தைகளுக்கான இது வரை கிடைத்ததிலேயே மிக உறுதியான ஆதாரமாக இது இருக்கிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :