நீட் தேர்வுக்கு விலக்களிக்கும் மசோதாவுக்கு ஒப்புதல்: பிரதமரிடம் தமிழக அமைச்சர்கள் கோரிக்கை

மருத்துவப் படிப்புகளில் சேர கட்டாயமாக்கப்பட்டுள்ள தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு (நீட்) முறையில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரி, மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றிய மசோதாவுக்கு, குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்றுத் தர ஆதரவளிக்குமாறு டெல்லியில் பிரதமர் நரேந்திர மோதி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோரை தமிழக அமைச்சர்கள் வியாழக்கிழமை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.

நீட் தேர்வுக்கு விலக்களிக்க தமிழக அமைச்சர்கள் கோரிக்கை
படக்குறிப்பு,

நீட் தேர்வுக்கு விலக்களிக்க தமிழக அமைச்சர்கள் கோரிக்கை

இது தொடர்பாக டெல்லியில் பிரதமர் நரேந்திர மோதியை நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் தமிழகத்தைச் சேர்ந்த மக்களவை துணைத் தலைவர் மு.தம்பிதுரை, தமிழக அமைச்சர்கள் டி.ஜெயக்குமார் (நிதி), சி.வி.சண்முகம் (சட்டம்), பி.தங்கமணி (மின்சாரம்), சி.விஜயபாஸ்கர் (மக்கள் நல்வாழ்வு), கே.பி.அன்பழகன் (உயர்கல்வி), மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் ஆகியோர் சந்தித்து மனு அளித்தனர்.

தமிழகத்தில் "நீட்" தேர்வு முறையில் இருந்து விலக்கு அளிக்கக் கோரும் மசோதா, குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவதற்காக அனுப்பிவைக்கப்பட்டு பல மாதங்கள் ஆவதாக அவர்கள் பிரதமரிடம் கூறினர்.

மேலும், அண்மையில் நடைபெற்ற நீட் தேர்வால் தமிழகத்தில் மாநில கல்வித் திட்டத்தின்கீழ் படித்த லட்சக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்பட்டதாகவும் அவர்கள் முறையிட்டனர்.

இதுகுறித்து பின்னர் செய்தியாளர்களிடம் தம்பிதுரை கூறுகையில், நீட் தேர்வு முறையால், தமிழகத்தைச் சேர்ந்த மாநில கல்வித் திட்டத்தின்படி படித்த மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

தமிழ்நாட்டில் மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) பாடமுறைப்படி சுமார் நான்காயிரம் பேர் படிப்பதாகக் கூறிய அவர், மாநில கல்வித் திட்டத்தின்கீழ் சுமார் ஐந்து லட்சம் பேர் படிப்பதால் அவர்கள் நலனை கருத்தில் கொள்ளுமாறு பிரதமரை கேட்டுக் கொண்டோம் என்றார்.

மருத்துவ படிப்புகளில் இன்னும் மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை என்பதால், தமிழக அரசின் மருத்துவ கல்லூரிகளிலும், அரசு சுயநிதி கல்லூரிகளில் காலியாகவுள்ள இடங்களிலும் பிளஸ் டூ அடிப்படையில் மாணவர்களை சேர்க்க அனுமதிக்க வேண்டும் என்றும் மத்திய அமைச்சர்களை கேட்டுக் கொண்டதாக தம்பிதுரை குறிப்பிட்டார்.

இந்த விஷயத்தில் தமிழக அரசின் மசோதாவுக்கு ஒப்புதல் அளித்து மாநில கல்வித் திட்டத்தின்கீழ் படித்த மாணவர்களுக்கு மத்திய அரசு நீதி வழங்கும் என்று நம்புவதாக தம்பிதுரை தெரிவித்தார்.

முன்னதாக, மத்திய அமைச்சர்கள் ஜே.பி.நட்டா (சுகாதாரம்), பிரகாஷ் ஜாவடேகர் (மனித வளம்), ரவி சங்கர் பிரசாத் (சட்டம்) ஆகியோரை சந்தித்து அதே கோரிக்கை தொடர்பான மனுவை தமிழக அமைச்சர்கள் அளித்தனர்.

தொடர்பான செய்திகள்:

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்