தலித் வாக்கு வங்கியா? மாபெரும் கூட்டணியா? மாயாவதி ராஜிநாமாவால் பரபரப்பாகும் அரசியல்

பட மூலாதாரம், MANAN VATSYAYANA
உத்தர பிரதேசத்தின் முதல்வராக நான்கு முறை பதவி வகித்த மாயாவதி, தமது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை திடீரென கடந்த செவ்வாய்க்கிழமை ராஜிநாமா செய்துள்ளார்.
அவரது இந்த நடவடிக்கை, உத்தரப் பிரதேசம் மட்டுமின்றி தேசிய அரசியலிலும் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
தாழ்த்தப்பட்டோரின் நலன்களுக்காப் பாடுபடுவதாகக் கருதப்படும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, தொடக்கத்தில் அந்த சமுதாயத்தினரின் நலன்கள் சார்ந்த பிரச்னைகளுக்காக மட்டும் தீவிரமாகக் குரல் எழுப்பியது.
பின்னர் தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு சிறுபான்மையினர், முன்னேறிய வகுப்பினர் ஆகியோருக்கும் கட்சிக்குள்ளும் அரசு பதவி வகிக்கவும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைமை வாய்ப்பு அளித்தது.
உத்தரப் பிரதேச மாநில அரசியலில், 1995-ஆம் ஆண்டுக்கு பிறகு பகுஜன் சமாஜ் கட்சிக்கு முக்கியத்துவம் கிடைத்தது.
1995-ம் ஆண்டில் நான்கு மாதங்கள், 1997-ஆம் ஆண்டில் ஆறு மாதங்கள், 2002-ஆம் ஆண்டில் இரண்டரை மாதங்கள், 2007-ஆம் ஆண்டில் ஐந்து ஆண்டுகள் என அம்மாநிலத்தின் முதல்வராக நான்கு முறை மாயாவதி பதவி வகித்துள்ளார்.
2012-ஆம் ஆண்டு முதல் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் எதிர்பார்த்த இடங்கள் கிடைக்காத நிலையில்,தேசிய அரசியலில் மாயாவதி கவனம் செலுத்தத் தொடங்கினார்.
பட மூலாதாரம், Getty Images
மாநிலங்களவை உறுப்பினராக அவர், 2012-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தேர்வானார்.
அதைத்தொடர்ந்து, மாநிலங்களவையில் தாழ்த்தப்பட்டோர் நலன்கள் தொடர்பான பிரச்னை மட்டுமின்றி பல முக்கிய விவகாரங்களிலும் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக அவர் குரல் கொடுத்தார்.
இந்த நிலையில், பிகார் மாநில ஆளுநராக இருந்த தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ராம்நாத் கோவிந்த்தை குடியரசுத் தலைவர் வேட்பாளராக மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி கடந்த மாதம் முன்மொழிந்தது.
மாட்டிறைச்சி போன்ற விவகாரங்களில் , குஜராத் , உத்தர பிரதேசம், பிகார், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட பல மாநிலங்களில் தாழ்த்தப்பட்டோருக்கு எதிராக தாக்குதல்கள் நடத்தப்படுவதாக சர்ச்சைகள் எழுந்த நிலையில், ராம்நாத் கோவிந்தை பாஜக முன்மொழிந்தது.
இதையடுத்து மாநில நலன்களை முன்னிறுத்தி அரசியல் நடத்தி வந்த தேசிய கட்சிகள், தங்களின் அணுகுமுறையை மாற்றிக் கொண்டு பாஜகவுக்கு எதிரான வலுவான கூட்டணி அமைக்க ஆயத்தமாகி வந்தன.
இந்த நிலையில், தமது அரசியல் செல்வாக்கை நிலைநிறுத்திக் கொள்வதற்காக, மாநிலங்களவை உறுப்பினர் பதவியில் இருந்து மாயாவதி விலகியிருக்கலாம் என்று அரசியல் நோக்கர்கள் சிலர் கூறுகின்றனர்.
ஆனால், மாயாவதியின் முடிவு அவரது தியாகத்தின் வெளிப்பாடு என்கிறார் பகுஜன் சமாஜ் கட்சியின் உத்தர பிரதேச மாநிலத் தலைவர் ராம் அச்சல் ராஜ்பர்.
மாயாவதியின் செயல்பாட்டை உத்தரப் பிரதேச மாநிலத்தின் முக்கிய அரசியல் கட்சியான சமாஜ்வாடி கட்சி ஆதரித்துள்ளது.
பட மூலாதாரம், Getty Images
அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் ராஜேந்திர செளத்ரி செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறுகையில், "எதிர்க்கட்சிகளின் குரல் மாநிலங்களவையில் நசுக்கப்படுகிறது. மாயாவதியின் ராஜிநாமா நடவடிக்கை, மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி அரசுக்கு எதிராக வலிமையான அணி உருவாக வழிவகுக்கும்" என்றார்.
உத்தர பிரதேச மாநில சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் அஜய் குமார் லாலு, "ஜனநாயகத்தில் மக்கள் பிரதிநிதிகளின் குரல் நசுக்கப்படுவதை அனுமதிக்க முடியாது" என்றார்.
இடதுசாரி கட்சிகளின் தலைவர்களான சீதாராம் யெச்சூரி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), டி.ராஜா (இந்திய கம்யூனிஸ்ட்) ஆகியோர் பிபிசியிடம் கூறுகையில், "மாயாவதியின் ராஜிநாமா முடிவு, தாழ்த்தப்பட்டோர் பிரச்னைகளை நாடாளுமன்றத்தில் எழுப்ப கிடைக்காத அனுமதியின் கோபத்தால் வந்த விளைவு" என்றனர்.
"ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிகளின் குரலுக்கு மதிப்பளிக்காமல் செயல்படும் போக்கு ஆரோக்கியமானது அல்ல" என்றும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கு நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் கிளைகள் உள்ளன.
ஆனால், அவரது "தீவிர அரசியல்" என்பது உத்தர பிரதேச மாநில அரசியலைச் சுற்றியே நடைபெற்று வருகிறது.
சில மாதங்களுக்கு முன்பு (பிப்ரவரி, மார்ச்) நடைபெற்ற உத்தர பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த பிறகு, பகுஜன் சமாஜ் கட்சிக்குள் நிர்வாகிகள் மாற்றம், மாநில அளவிலான அணிகளுக்கு புதிய பொறுப்பாளர்கள் நியமனம் என பல்வேறு மாற்றங்களை மாயாவதி செய்தார்.
பட மூலாதாரம், SAJJAD HUSSAIN
அம்மாநிலத்தின் சாஹரன்பூரில் தாக்குர் சமுதாயத்தினருக்கும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினருக்கும் இடையே நடைபெற்ற மோதல் சம்பவங்களுக்குப் பிறகு, பாதிக்கப்பட்டவர்களை மாயாவதி நேரில் சந்தித்து கள நிலவரத்தை விசாரித்தார்.
இதைத்தொடர்ந்து, மாநிலத்தில் பகுஜன் சமாஜ் கட்சியை நிலைநிறுத்த தமது நேரடி கண்காணிப்பு அவசியம் என்பதை மாயாவதி உணர்ந்துள்ளதால் இனி அவர் தீவிரமாக மாநில அரசியலில் கவனம் செலுத்துவார் என அவரது கட்சியின் பெயர் குறிப்பிடாத மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தனர்.
2007-ஆம் ஆண்டுக்குப் பிறகு பகுஜன் சமாஜ் கட்சியின் வளர்ச்சி என்பது, தேர்தல் காலத்தில் குறிப்பிடத்தக்க அளவுக்கு இல்லை என்பதை முடிவுகள் கூறுகின்றன.
2012 சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வி, 2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தோல்வி, 2017-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தோல்வி என அடுத்தடுத்து சரிவு நிலையிலேயே பகுஜன் சமாஜ் கட்சி செல்வதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 403 இடங்களில் ஆளும் பாஜக அதன் கூட்டணி கட்சிகளின் வெற்றி பெற்ற தொகுதிகளைச் சேர்க்காமல் 312 இடங்களில் வென்றது. அக்கட்சிக்கு தேர்தலில் 39.7 சதவீத வாக்குகள் கிடைத்தன. கடந்த முறை பாஜக கூட்டணி, 47 இடங்களில் மட்டுமே வென்றிருந்தது.
ஆட்சியைப் பறிகொடுத்த சமாஜ்வாடி கட்சி 47 இடங்களில் வென்றது. அக்கட்சிக்கு 21.8 சதவீத வாக்குகள் கிடைத்ததாக இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தேர்தல் புள்ளவிவர குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மாயாவதியின் கட்சி, 19 இடங்களில் மட்டுமே வென்றது. அக்கட்சியின் வாக்கு சதவீதம் 22.2 சதவீதமாக சரிந்தது என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
இந்த நிலையில், மத்தியில் ஆளும் பாஜக கூட்டணிக்கு எதிராக மாபெரும் கூட்டணி அமைப்பதற்கான முயற்சியில் பாஜக கூட்டணியில் இடம்பெறாத அரசியல் கட்சிகள் ஆர்வம் காட்டி வருகின்றன.
அந்த கட்சிகளுக்கு மாயாவதியின் ராஜிநாமா முடிவு, உற்சாகத்தை அளித்துள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
ஆனால், மாயாவதியின் நடவடிக்கை அரசியல் நாடகம் என்று பாஜக குற்றம்சாட்டுகிறது.
பட மூலாதாரம், PRAKASH SINGH
அந்த கட்சியின் தேசிய செய்தித்தொடர்பாளர் நளின் கோஹ்லி ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு வியாழக்கிழமை அளித்த பேட்டியில் மேலும் கூறுகையில், "குற்றம்சுமத்துவது, வருத்தம் தெரிவிப்பது, செயல்பாடு மற்றும் வளர்ச்சியில் கவனம் செலுத்துவது ஆகிய மூன்று வித உத்திகள்தான் ஜனநாயக அரசியலில் உள்ளன. இதில் முதலாவது அரசியலை தமது பாணியாக மாயாவதி கடைப்பிடித்து வருகிறார்" என்றார்.
இந்த நிலையில் மாயாவதியின் ராஜிநாமா வியாழக்கிழமை மாநிலங்களவைத் தலைவர் ஹமீது அன்சாரியால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
இதனால், மாயாவதியின் முழு கவனமும் இனி உத்தர பிரதேச அரசியல் பக்கம் திரும்பும் என்பதால் அம்மாநிலத்தில் ஆளும் பாஜக கலக்கம் அடைந்துள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
அம்மாநில மின்துறை அமைச்சர் ஸ்ரீகாந்த் சர்மாவிடம் இது பற்றி செய்தியாளர்கள் கேட்டபோது, "மாநிலத்தின் அமைதியைக் குலைக்கும் செயலில் மாயாவதி ஈடுபட மாட்டார் என நம்புகிறோம்" என்றார்.
பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதிக்கு, மற்ற கட்சித் தலைவர்களை போல அடிக்கடி கட்சித் தொண்டர்களை சந்திக்கும் வழக்கம் கிடையாது.
அவரது செய்திகள், பேச்சுகள் போன்றவற்றை மாநிலங்களவையில் அவர் முன்வைக்கும் பிரச்னைகள், செய்தியாளர்களின் சந்திப்புகளின்போது தெரிவிக்கும் கருத்துகள் அடிப்படையில்தான் கட்சித் தொண்டர்களும் மற்ற அரசியல் தலைவர்களும் அறிந்து கொள்வர்.
இந்த நிலையில், தமது எம்.பி. பதவியை மாயாவதி ராஜிநாமா செய்து விட்டு, மாநில அரசியலுக்குத் திரும்புவாரா அல்லது எதிர்க்கட்சிகள் இணைந்து உருவாக்கத் திட்டமிட்டுள்ள மாபெரும் கூட்டணியில் முக்கிய பொறுப்பை ஏற்பாரா என்ற எதிர்பார்ப்பு தேசிய மற்றும் உத்தர பிரதேச அரசியலில் ஏற்பட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்