உள்ளாட்சித் தேர்தலை ஆகஸ்ட் 31-க்குள் நடத்த உயர் நீதிமன்றம் ஆணை

தமிழக உள்ளாட்சித் தேர்தலை ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டுமென தமிழகத் தேர்தல் ஆணையத்திடம் சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. வரும் புதன் கிழமைக்குள் தேர்தல் அட்டவணையைத் தரும்படியும் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்
படக்குறிப்பு,

சென்னை உயர் நீதிமன்றம்

தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த ஆண்டு அக்டோபர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் நடைபெறுமென அறிவிக்கப்பட்டது.

ஆனால், தொகுதிகளை ஒதுக்கீடு செய்யும்போது பழங்குடியினருக்கான ஒதுக்கீடு சரிவர கடைப்பிடிக்கப்படவில்லையென தி.மு.க. சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இதையடுத்து உள்ளாட்சித் தேர்தலை அக்டோபரில் நடத்த தடை விதித்த உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன், 8 நிபந்தனைகளை விதித்து, அவற்றைப் பூர்த்திசெய்து டிசம்பர் 31ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க உத்தரவிட்டார்.

தேர்தல் நடத்த விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தமிழக தேர்தல் ஆணையம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் முதலில் மே 14ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்த உத்தரவிடப்பட்டது. ஆனால், நீதிபதி விதித்த நிபந்தனைகளைப் பூர்த்தி செய்து ஜூலை இறுதிக்குள் தேர்தலை நடத்துவதாக தேர்தல் ஆணையம் கூறியது. ஆனால், தேர்தல் நடத்தப்படவில்லை.

இதையடுத்து, தி.மு.கவின் சார்பில் ஆர்.எஸ். பாரதி உயர்நீதிமன்றத்தில் தேர்தலை நடத்த உத்தரவிடக்கோரி மனுச் செய்தார்.

இந்த வழக்குகள் இன்று தலைமை நீதிபதி இந்திரா பேனர்ஜி, சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பாக விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கில் தி.மு.கவின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வில்சன், தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றமோ, உயர் நீதிமன்றமோ தடைவிதிக்காத நிலையில் தமிழக தேர்தல் ஆணையமும் தமிழக அரசும் தேர்தல் நடத்துவதைத் தேவையின்றி தள்ளிப்போடுகின்றன. பொதுமக்களின் அடிப்படை உரிமை பாதிக்கப்படுகிறது. நீதிமன்றம் இரு முறை கெடு விதித்தும் தேர்தல் ஆணையம் இதனை நிறைவேற்றவில்லை என கூறினார்.

தமிழக அரசின் சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் முத்துக்குமாரசாமி, தொகுதிகளை மறுவரையறை செய்வதற்காக குழு அமைக்கப்பட்டிருப்பதாகவும் அந்தக் குழுவின் அறிக்கை கிடைத்தவுடன் தேர்தல் அறிவிக்கப்படும் என்றும் கூறினார்.

தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தனி நீதிபதியின் நிபந்தனைகளை நிறைவேற்றவிருப்பதால், தேர்தலை அறிவிப்பதில் காலதாமதம் ஏற்படுவதாகக் கூறினார்.

இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் தமிழக உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டுமென்றும், வரும் புதன்கிழமைக்குள் தேர்தல் அட்டவணையை நீதிமன்றத்தில் அளிக்க வேண்டுமென்றும் உத்தரவிட்டுள்ளனர்.

இதையும் படிக்கலாம்:

கேட்பொலிக் குறிப்பு,

''நான் நானாக இருக்க விரும்புகிறேன் கமலோடு ஒப்பிட வேண்டாம்''

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :