`அவன் சீண்டிய விதம் ஏதோ தவறு நடப்பதை உணர்த்தியது; நினைத்தாலே அவமானமாக இருக்கும்'

பெண்கள் படத்தின் காப்புரிமை RISHIJA

'எனக்கு ஆறு வயதாக இருக்கும்போது, ஒரு பையன் என்னை தவறான எண்ணத்துடன் சீண்டினான். அதற்கு முன்பு, ஆண் அல்லது பெண்ணின் தொடுதலில் வித்தியாசம் இருக்கும் என்பதே எனக்குத் தெரியாது.'

தவறான தொடுதல்கள் பற்றி பெண்கள் தங்கள் நேரடி அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் தொடரின் இரண்டாம் பகுதி.

இவ்வளவு பழைய சம்பவம் எப்படி நினைவில் இருக்கிறது என்று கேட்கிறீர்களா? இதுபோன்ற தவறான தொடுகைகள், மனதில் பசுமரத்தாணியாக வடுக்களை ஏற்படுத்திவிடுகிறது.

ஆனால், தவறு செய்தவனுக்கு இதுகுறித்த நினைவோ அல்லது குற்ற உணர்வோ இருக்குமா?

சிறுமியான எனக்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. பக்கத்து வீட்டில் இருந்த பையன் என்னை கட்டாயப்படுத்தினான். ஆனால் அது எனக்கு பிடிக்கவில்லை. எதோ தவறாக நடக்கிறது என்று மட்டுமே புரிந்தது. நான் அண்ணா என்று அழைத்த அவன் அப்போது ஆறாவதோ அல்லது ஏழாவது வகுப்போ படித்துக் கொண்டிருந்தான்.

ஒருநாள் காலை நேரம், விளையாடிக் கொண்டிருந்த என்னை அழைத்து மடியில் வைத்துக் கொண்டான். எனது உள்ளாடைக்குள் கைகளை விட்டு சீண்டினான். முதலில் விளையாட்டு மும்முரத்தில் எனக்கு அது தெரியவில்லை. ஆனால் வித்தியாசமாக உணர்ந்தேன். அவன் வேண்டுமென்றே என்னை கிள்ளுகிறான், சீண்டுகிறான் என்றே தோன்றியது. சிறிது நேரத்தில் எதோ தவறாக நடக்கிறது என்று மட்டும் புரிந்தது.

உடனே அவன் மடியில் இருந்து எழுந்து வீட்டிற்குள் ஓடிவிட்டேன். அன்று மதிய உணவு வேளையிலும் அவன் வீட்டுற்கு வந்தான். ஒருவர் வீட்டில் மற்றவர் சாப்பிடுவது சகஜமாகவே இருந்தது.

படத்தின் காப்புரிமை Getty Images

அவனை பார்க்கக்கூடாது, பேசக்கூடாது என்று நினைத்தேன். எதோ ஒரு பொருளை திருடிவிட்டது போன்றும், எங்கள் இருவருக்கும் இடையே எதோ ரகசியம் இருப்பது போன்றும் தோன்றியது.

இதை அம்மாவிடமோ, வேறு யாரிடமோ சொல்ல பயமாக இருந்தது. நல்லவேளையாக சில நாட்களிலேயே நாங்கள் வேறொரு இடத்திற்கு குடி பெயர்ந்துவிட்டோம். அதன்பிறகு அவனை பார்க்கவேயில்லை.

அவன் சீண்டிய விதம் எதோ தவறு நடப்பதை மனதிற்கு உணர்த்தியது. ஆனால், அப்போது சரியாக புரியாவிட்டாலும், அந்த சம்பவத்தை நினைத்தால், அவமானமாகவும், பயமாகவும் இருக்கும்.

வளர்ந்தபிறகே அந்த சீண்டலின் அர்த்தம் புரிந்தது. அதைப் பற்றி நினைக்கக்கூடாது என்று நினைப்பேன். ஆனால், மறக்க வேண்டியவற்றை அடிக்கடி நினைவுபடுத்தி காயத்தை ஆறவிடாமல் செய்கிறது மனம்.

அதன்பிறகு யாரவது ஒரு ஆண் என்னை சற்று உற்றுப் பார்த்தாலும், தேவையில்லாமல் அருகில் வந்தாலும் மனதில் ஒருவிதமான அச்ச உணர்வும், விசித்திரமான எண்ணங்களும் ஏற்பட்டு உடல் இறுகிப்போய் நிற்பேன். அதுவரை குழந்தையாக இருந்த என்னை அந்த ஒரு சம்பவம், ரகசியத்தை காக்கும் மனமுதிர்ச்சி கொண்டவளாக மாற்றிவிட்டது. பறிபோனது என் குழந்தைப்பருவம்…

சாலையில் நடக்கும்போது சீண்டல்

படத்தின் காப்புரிமை Getty Images

நான் பத்தாவது படிக்கும் போது இரண்டாவது சம்பவம் நடந்தது. பள்ளிக்குச் சென்றுக் கொண்டிருந்தபோது ஒருவன் அருகில் வந்து என்னை பின்புறமாக தட்டிவிட்டு, எதுவுமே நடக்காதது போல நடந்துக் கொண்டேயிருந்தான்.

நான் அவனைப் பார்த்து கத்தினேன், ஆனால் அவன் அதைக் கண்டுக்கொள்ளாமல், தனது நண்பர்களுடன் இயல்பாக நடந்துச் சென்றான். என்னால் அழுகையைக் கட்டுப்படுத்தமுடியவில்லை.

இந்த சம்பவத்திற்கு பிறகு, நான் ஒரு வாரம் பள்ளிக்கு செல்லவில்லை. பிறகு பள்ளிக்கு செல்லும்போது, வேறு வழியாகவே செல்வேன்.

இதுபற்றி என் தோழியிடம் சொன்னபோது, ''நீ என்ன அழகு ராணியா?'' என்று கேலி செய்தாள். அவளது இந்த முட்டாள்தனமான பதில், இதைப்பற்றி வெளியே பேசவிடாமல் தடுத்துவிட்டது.

ஆனால் சிறிது காலத்திற்கு பிறகு வேறு சிலரிடம் பேசியபோது, அவர்களுக்கும் இதுபோன்ற அனுபவங்கள் இருந்ததை தெரிந்துக்கொண்டேன்.

இதுபோன்ற பிரச்சனைகளை பொதுத்தளத்தில் பேசவேண்டும் என்ற எண்ணம் எனக்கு அப்போதுதான் தோன்றியது. எனது பெயரை மறைக்கக்கூடாது என்று முடிவெடுத்தேன். இதனால் மற்றவர்களுக்கும் வெளிப்படையாக பேசும் தைரியம் ஏற்படும்.

இதுபோன்ற பிரச்சனைகளை பேச குழந்தைகளையும் ஊக்குவிக்கவேண்டும்.

இதையும் படிக்கலாம்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்