வேலூரில் கணவரின் ஆணுறுப்பை அறுத்து பர்ஸில் எடுத்துச் சென்ற மனைவி கைது

தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில், கணவனுடன் சண்டை போட்டு, அவரது ஆணுறுப்பை அறுத்துச் சென்ற மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தன் பர்ஸில் வைத்திருந்த உறுப்பும் கைப்பற்றப்பட்டது.

குடியாத்தத்தில் உள்ள லிங்கன்றம் என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இங்கு வசித்து வந்த ஜெகதீசன் (39) கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பாக தன்னுடன் தொழிற்சாலையில் வேலை பார்த்த சரசு (29) என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் மூன்று மகள்களும் இருக்கின்றனர்.

எட்டு மாதங்களுக்கு முன்பாக, கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாகக் கருதிய சரசு, அவரிடமிருந்து பிரிந்து சென்று வி.கோட்டாவில் உள்ள தாய் வீட்டில் வசித்து வந்தார். குழந்தைகள் ஜெகதீசனின் தாய் வீட்டில் வசித்துவந்தனர்.

இந்த நிலையில், ஜூலை 17ஆம் தேதியன்று தன் மகனின் பிறந்த நாளுக்காக மீண்டும் கணவனின் வீட்டிற்கு வந்தார் சரசு. அப்போது மகன் கேட்டுக்கொண்டதால், மீண்டும் கணவனுடன் வசிக்க ஆரம்பித்தார்.

"இருந்தபோதும், ஜெகதீசன் தொடர்ந்து அந்தப் பெண்ணுடன் சண்டையிட்டு வந்துள்ளார். புதன்கிழமையன்று இரவில் மீண்டும் குடித்துவிட்டு வந்த ஜெகதீசன் அந்தப் பெண்ணிடம் சண்டையிட்டுள்ளார். ஒரு மணி வரை சண்டை நடந்திருக்கிறது. அதற்குப் பிறகு மீண்டும் நன்றாகக் குடித்துவிட்டு அவர் தூங்கியிருக்கிறார். இந்தச் சண்டைகளினால் மன உளைச்சலில் இருந்த சரசு மூன்று மணியளவில் கணவனின் ஆணுறுப்பை கத்தியால் அறுத்துள்ளார்" என்கிறார் குடியாத்தம் காவல்நிலைய ஆய்வாளர் இருதயராஜ்.

பட மூலாதாரம், John Moore

ஜெகதீசன் குடிபோதையில் இருந்ததால் அவருக்கு வலி தெரியில்லை என்று கூறப்படுகிறது. அதற்குப் பிறகு சரசுவே அவரை எழுப்பி, 'இனி எப்படி வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருப்பாய் என்பதைப் பார்க்கிறேன்' என்று சொல்லிவிட்டு, அருகில் உள்ள ஜெகதீசனின் தாயாரிடமும் போய் விஷயத்தைச் சொல்லியுள்ளார்.

அப்போதும் நடந்தது தெரியாத ஜெகதீசன், ரத்தம் கொட்டக் கொட்ட அருகில் வசிக்கும் தன் தாயின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அதன் பிறகு, அவரது 13 வயது மகனுடன் இரு சக்கர வாகனத்திலேயே சென்று மருத்துவமனையில் சேர்ந்துள்ளார் அவர்.

"இனிமேல் அவர் உயிரோடு இருக்கலாம். அதற்கு மேல் எதிர்பார்க்க முடியாது என மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர்" என்கிறார் ஜெகதீசனின் உறவினரான சந்தோஷ்.

அதன் பிறகு லிங்கன்றத்திலிருந்து புறப்பட்ட சரசு ஆந்திர மாநில எல்லையில் உள்ள துத்திப்பட்டு என்ற இடத்தில் இருக்கும் தனது சின்னம்மாவின் வீட்டிற்குச் சென்று நடந்ததைச் சொல்லியிருக்கிறார். அவர்கள் காவல் துறைக்குத் தகவல் அளித்ததையடுத்து சரசு கைது செய்யப்பட்டு, சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

"நீண்ட நேரத்திற்குப் பிறகு, கணவரின் ஆணுறுப்பை தன் பர்ஸில் வைத்திருப்பதாக சரசு தெரிவித்தார். பின்பு அதைக் கைப்பற்றினோம்" என்கிறார் இருதயராஜ்.

தற்போது சரசு மீது, குற்றவியல் சட்டத்தின் பிரிவு 326ன் (பயங்கரமான ஆயுதங்களை வைத்து அபாயகரமான காயங்களை ஏற்படுத்துதல்) கீழ் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ஜெகதீசனுக்கு ரத்தப் போக்கை நிறுத்த அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்