ஓபிஎஸ் அணியில் இருந்து விலகி முதல்வருடன் சேர்ந்தார் எம்எல்ஏ ஆறுக்குட்டி

ஓபிஎஸ் அணியில் இருந்து விலகி முதல்வருடன் சேர்ந்தார் எம்எல்ஏ ஆறுக்குட்டி

பட மூலாதாரம், ARUN SANKAR/AFP/GETTY IMAGES

அதிமுகவின் ஓபிஎஸ் அணியில் இருந்த, கோவை கவுண்டம்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி, ஞாயிற்றுக்கிழமை காலை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணியில் இணைந்தார்.

சேலத்தில் எடப்பாடி பழனிச்சாமியின் வீட்டில் அவரைச் சந்தித்த ஆறுக்குட்டி, தற்போதைய முதல்வரின் நடவடிக்கை திருப்திகரமாக இருப்பதால் ஓபிஎஸ் அணியில் இருந்து விலகி ஈபிஎஸ் அணியில் இணைந்துள்ளதாகத் தெரிவித்தார்.

பிப்ரவரி மாதம் அதிமுக ஓபிஎஸ் அணி, சசிகலா அணி என்று பிளவுபட்டபோது, முதன்முதலாக ஒபிஎஸ் அணியில் இணைந்தவர் ஆறுக்குட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

அதிமுகவின் தலைமையாக சசிகலாவை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று கூறி வெளியேறிய ஓபிஸ்சின் அணியில் 12 சட்டமன்ற உறுப்பினர்கள் இணைந்தனர்.

தற்போது அறுக்குட்டியின் விலகலை அடுத்து ஓபிஎஸ் அணியில் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 11ஆக குறைந்துள்ளது.

செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஆறுக்குட்டி, ஓ,பிஎஸ் அணியில் தனக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்றும் தனது தொகுதிக்குத் தேவையான உதவிகளை அளிப்பதில் எந்தப் பாகுபாடும் இல்லாமல் முதல்வர் பழனிச்சாமி நடந்துகொண்டதால் தனது முடிவை மாற்றிக்கொண்டதாகத் தெரிவித்தார்.

பட மூலாதாரம், tn.gov.in/TN government

படக்குறிப்பு,

கோவை கவுண்டம்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி

''நான் இரண்டவது முறையாக சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செயய்பட்டுளேன். எனது தொகுதி மக்களுக்கு தேவையான நலத்திட்டங்கள் தொடர்ந்து கிடைத்து வருகிறது. எனது தொகுதி மக்களும் நான் முதல்வர் அணியில் இருப்பதைத்தான் விரும்புகிறார்கள்,'' என்று கூறினார்.

கவுண்டம்பாளையம் பகுதியில் ஒரு புதிய அரசு மருத்துவமனை, இரண்டு பாலங்கள் மற்றும் மின்சார வசதி கிடைக்காத சில கிராமங்களுக்கு மின்சார வசதி தற்போது அளிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

ஆறுக்குட்டி எடப்பாடி அணியுடன் இணைந்துள்ளது பற்றி ஓபிஎஸ் அணியில் உள்ள முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனிடம் கருத்துக் கேட்டபோது, '' ஆறுக்குட்டி இணைந்துள்ளது பற்றி தெரியவந்துள்ளது. எங்கள் அணியினர் இதுகுறித்து உயர்நிலைக் கூட்டம் நடத்துகிறோம். பிறகுதான் இதைப் பற்றி கருத்துச் சொல்லமுடியும்,'' என்றார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :