தேசப்பற்றை வளர்க்க பல்கலை வளாகத்தில் ராணுவ டாங்கி: துணைவேந்தர் யோசனை

பீரங்கி

பட மூலாதாரம், PRAKASH SINGH/AFP/Getty Images

இந்திய பாதுகாப்புப் படையினரின் உயிர் தியாகத்தை மாணவர்கள் நினைவில் கொள்ளும் வகையில், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு ராணுவ டாங்கியை நிறுவுமாறு பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் ஜெகதீஷ் குமார், மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

அவரது யோசனைக்கு, சமூக ஊடகங்களில் வரவேற்பும் விமர்சனங்களும் பரவலாகக் காணப்படுகிறது.

டெல்லியில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கார்கில் போரில் இந்திய ராணுவத்தினர் செய்த உயிர்த்தியாகத்தை போற்றும் வகையில் கார்கில் தினம் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 23) கடைப்பிடிக்கப்பட்டது.

அந்த நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் தர்மேந்திர பிரதான், மத்திய இணை அமைச்சரும் முன்னாள் ராணுவத் தலைமைத் தளபதியுமான வி.கே.சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பட மூலாதாரம், TWITTER

2,200 அடி நீள தேசிய கொடி

இதையொட்டி பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற பேரணியில் 2,200 அடி நீளமுள்ள மூவர்ண இந்திய தேசிய கொடியை பல்கலைக்கழக மாணவர்கள் சுமார் 2000 பேர் ஏந்தியவாறு சென்றனர்.

பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகதீஷ் குமார், இந்திய முப்படையினரின் உயிர் தியாகத்தை மாணவர் சமுதாயம் நினைவில் கொள்ள வேண்டும் என்றார்.

ஜேஎன்யு மாணவர்கள் இடையே தேசப்பற்றை அதிகரிக்கவும், பாதுகாப்புப் படையினரின் தியாகத்தை அவர்கள் நினைவில் கொள்ளும் வகையிலும், பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு ராணுவ டாங்கியை நிறுவ வேண்டும் என்று அவர் யோசனை தெரிவித்தார்.

பட மூலாதாரம், SAM PANTHAKY/AFP/Getty Images

பல்கலைக்கழக வளாகத்தில் ராணுவ டாங்கி நிறுவப்பட்டு, அதை அந்த வழியாக கடந்து செல்வோர் பார்க்கையில், நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த ராணுவத்தினரின் சிறந்த சேவைகள் நினைவுக்கு வரும் என்று நம்புவதாக ஜெகதீஷ் குமார் குறிப்பிட்டார்.

ராணுவ டாங்கியை பல்கலைக்கழக நிர்வாகம் கொள்முதல் செய்வதற்கு மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் உதவ வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

டுவிட்டர் கருத்துகள்

இந்த நிகழ்ச்சி பற்றிய செய்தியை இந்திய செய்தி நிறுவனமான ஏஎன்ஐ அதன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டதும் ஏராளமான பயன்பாட்டாளர்கள் தங்கள் எதிர்வினைகளைப் பதிவிட்டனர்.

பிரதீப் குப்தா என்ற பயன்பாட்டாளர், மாணவர் அரசியல், கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் தேசிய விரோத கருத்துகளை பரிமாறும் முகமை போல ஜேஎன்யூ செயல்படுவதால், இந்த கோரிக்கையை முன்வைக்க அதன் நிர்வாகத்துக்கு தகுதி இல்லை என்று குறிப்பிட்டார்.

பட மூலாதாரம், TWITTER

ஹீமேன் நமோ என்ற பயன்பாட்டாளர், பறிமுதல் செய்யப்பட்ட பாகிஸ்தான் டாங்கியை நிறுவுங்கள் என்றார்.

லிபரெல் இண்டலெக்சுவல் என்ற பெயரை டுவிட்டர் அடையாள பெயராக வைத்துள்ளவர், இஸ்லாமியர்களுக்கு தங்கள் விசுவாசத்தைக் காட்டிக் கொள்ள அந்த டாங்கியை நக்சலைட்டுகள் குழு தகர்த்து விடும் என்று குறிப்பிட்டார்.

பல்கலைக்கழக முன்னாள் மாணவர் அரவிந்த், ராணுவ டாங்கி எதற்கு? ரஃபேல் போர் விமானத்தையோ அல்லது ஸ்கார்பியன் நீர்மூழ்கி கப்பலையோ வைக்கக் கோரலாமே என்று தமது டுவிட்டர் பக்கத்தில் யோசனை கூறியுள்ளார்.

பழைய கோரிக்கை

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் ராணுவ டாங்கியை நிறுவ வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்படுவது இது முதல் முறை அல்ல. கடந்த பிப்ரவரியில் தேசத்துக்கு எதிராக சில குழுக்கள் கோஷமிட்டதால் சர்ச்சை எழுந்தபோது, நாட்டின் படை பலத்தை பறைசாற்றும் வகையில் ராணுவ வலிமையின் அடையாளமாக ஒரு டாங்கியை நிறுவ வேண்டும் என்று மாணவர்களில் ஒரு தரப்பினர் கோரிக்கை வைத்தனர்.

பட மூலாதாரம், TWITTER

இந்த நிலையில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் ராணுவத்துக்கு ஆதரவாக நடத்தப்பட்ட நிகழ்ச்சி, வாழ்வாதாரத்தை பாதுகாக்கவே மக்கள் ராணுவத்தில் சேருகிறார்கள் என்று கூறுவோருக்கு அளிக்கப்பட்ட மிகச் சரியான பதிலாகக் கருதப்படுகிறது என்று தர்மேந்திர பிரதான் தமது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

ஆனால், துணைவேந்தரின் யோசனை குறித்து மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.

முன்னாள் மாணவரின் கருத்து

அதே பல்கலைக்கழகத்தில் எம்.ஏ (சர்வதேச உறவுகள்) முதுகலை பட்டம் முடித்த முன்னாள் மாணவர் அரவிந்த் பிபிசி தமிழிடம் கூறுகையில், "பல்கலைக்கழக துணைவேந்தரின் கருத்து ஏற்றுக் கொள்ள முடியாதது. பல்கலைக்கழகம் என்பது புத்தகங்களால் நிறைந்திருக்க வேண்டுமே தவிர டாங்கியால் அல்ல" என்றார்.

பட மூலாதாரம், TWITTER

டாங்கிகளாலும் துப்பாக்கிகளாலும் தேசப்பற்று வளரும் என்றால் காஷ்மீர் ஏன் இன்னும் பற்றி எரிகிறது? போர் முனையில் டாங்கிகள் பணியாற்ற வேண்டுமே தவிர பல்கலைக்கழகத்தில் கிடையாது" என்று அந்த முன்னாள் மாணவர் கூறினார்.

துணைவேந்தரின் கருத்து, மாணவர்களிடையே பதட்டத்தை விதைக்கும் நிலைக்கு தள்ளப்படலாம் என்றும், அது பல்கலைக்கழகத்தின் ஜனநாயக பண்பாட்டுக்கு அச்சுறுத்தலாகி விடும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

பெண்கள் விளையாட்டில் மாற்றம் வந்துள்ளதா? மித்தாலியின் பெற்றோர் பேட்டி

காணொளிக் குறிப்பு,

பட்டையை கிளப்பும் மித்தாலி

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :